நிகழ்வு: அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஜூன் 20, 2021 அன்று நடத்தவிருக்கும் இணையவழி காணொளி நினைவரங்கு! - முருகபூபதி -
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், ஏறக்குறைய இருபது வருடகாலமாக இயங்குகிறது. தமிழ் எழுத்தாளர் விழாக்கள், இலக்கிய சந்திப்புகள் மற்றும் வாசிப்பு அனுபவப்பகிர்வு அரங்குகள் நடத்திவந்திருக்கும் இச்சங்கம் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கம் அவ்வாறு ஓரிடத்தில் அதாவது மண்டபங்களிலோ அல்லது திறந்த அரங்குகளிலோ, அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த முடியாது போய்விட்டது. சமகாலத்தில் சமூக இடைவெளி பேண வேண்டியிருப்பதனால், நவீன தொழில் நுட்பம் எமக்கு வழங்கியிருக்கும் வரப்பிரசாதம் மூலம் கணினியில் இணையவழி காணொளி ஊடாக அரங்குகளை நடத்திவருகின்றோம். அதன் ஊடாக உலகின் எந்தப்பாகத்தைச் சேர்ந்தவர்களுடனும் முகம் பார்த்து நேரடியாக உரையாடக்கூடிய வாய்ப்பும் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கியம், கல்வி, இதழியல், சமூகம் மற்றும் வானொலி ஊடகத்துறை சார்ந்து பணியாற்றி, அவுஸ்திரேலியாவிலேயே மறைந்த ஆளுமைகளை நினைவுகூரும் வகையிலும், இந்த நாட்டில் வாழும் இளம் தமிழ் சந்ததிகளிடம், குறிப்பாக இங்கு தமிழையும் ஒரு பாடமாக உயர் வகுப்பிலும் படிக்கின்ற மாணவர்களுக்காகவும், பல்கலைக்கழக பிரவேச பரீட்சைகளில் தோற்றவிருக்கும் தமிழ் மாணவர்களுக்காகவும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை இணைய வழி அரங்கின் ஊடாக நடத்தி வருகின்றது. இதனை மெய் நிகர் தொடர்பாடல் எனவும் அழைக்கின்றார்கள். இந்த நாட்டிற்கு வந்து தமிழ் சார்ந்த அனைத்து சமூகப்பணிகளையும் மேற்கொண்டு மறைந்தவர்களின் வாழ்வையும் பணிகளையும் இத்தகைய அரங்குகள் மூலம் திரும்பிப்பார்க்கின்றோம். அந்த வகையில், இங்கு மறைந்த தமிழ் ஆளுமைகளை நினைவுகூரும் அரங்கினை இன்று 20 ஆம் திகதி ஞாயிறு – இரவு 7-00 மணிக்கு ( அவுஸ்திரேலியா – மெல்பன் நேரம் ) இணையவழி காணொளியூடாக நடத்தவிருக்கிறது.