காரைக்கவி. கந்தையா பத்மானந்தனின் 'சீத்துவக்கேடு' துலைஞ்சு போன எங்கட வாழ்க்கை - கட்டுரைத் தொகுப்பு பற்றிய ரசனைக் குறிப்பு! பிரதேச வழக்கு நூலுக்குப் பிரதேச வழக்கில் ஒரு விமர்சனம்! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
தொன்மையான தமிழர் பண்பாடும் கிராமிய பேச்சுவழக்கும் எங்கட வாழ்வியல்ல வழக்கொழிந்து செல்கிற அல்லது திட்டமிட்டு அழிக்கப்படுகிற இந்தக் காலத்தில , அந்தக் காலத்து அருமை பெருமைகளை , சம்பிரதாயங்களை அதற்கான காரணங்களை எதிர்கால தலைமுறையினரும் அறிஞ்சு கொள்ளுற விதமாக 'சீத்துவக்கேடு துலைஞ்சு போன எங்கட வாழ்க்கை' என்று ஆவணமாக்கி , அப்புவின்ரை ஆச்சியின்ரை வாய்மொழியாக்கி , எங்களுக்கெல்லாம் வள்ளிசாகக் கதை சொல்ல வந்திருக்கிறார் ஒரு காரைநகர் இளந்தாரி.
இவர் கிராமத்துக் காட்சிகளை விவரிக்கிற அழகில அந்தக் கிராமமும் எளிமையான மனிசரும் , ஆடுமாடு நாய் பூனையளும் , அப்புவும் ஆச்சியும் , எழுதியவரும் அவர் வேலிப் பொட்டுக்கால சில்மிசம் பண்ணுற பக்கத்து வீட்டு பதின்மத்துக் காதலி மலரும் கண்ணுக்கு முன்னால கலைப்படம் மாதிரி வந்து வந்து போகினம். அப்பிடி ஒரு சரளமான இயல்பான எழுத்து. இந்த எழுத்தில மலர் மாதிரி கொஞ்சம் மயங்கிப் போகாத ஆக்கள் இருக்கேலாது.
வடக்கின்ரை பிரதேச வழக்கிலையே முழுப்புத்தகத்தையும் எழுதி, அந்த மொழிவழக்குக்கு ஆவணப் பெறுமதி சேர்த்த உவருக்கு , உண்ணாண நாங்கள் எல்லாரும் ஒருக்கா நன்றி சொல்லத்தான் வேணும்.