ஜே.வி.பி. இன்று மாறிவிட்டது... இல்லை. இன்னும் மாறவில்லை... இலங்கை அரசியல் ஓர் அலசல்! - ஜோதிகுமார் -
1. ஜே.வி.பி. இன்று மாறிவிட்டது... இல்லை. இன்னும் மாறவில்லை...
இப்படியான வாதங்கள், இலங்கை அரசியலில் இன்றும் தொடர்வதாய் உள்ளன. ரணில் விக்ரமசிங்க முதல் பல்வேறு தரப்பினரும், இவ்வாதங்களை மிகுந்த விருப்புடனேயே அவ்வப்போது முன்வைத்துள்ளார்கள். இதில் உண்மை இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். காணப்படும் மாற்றங்கள், வெறும் மேலோட்டமானவையே, அன்றி உள்ளடக்கத்தில் அதே அரசியல்தான் இன்னமும் ஓடுகின்றது என்ற வாதமும் இது போலவே தொடர்வதாக உள்ளது. ஆனால், மக்களின் விருப்பு என்பது எப்பொழுதும் போல ஆபத்தான ஒரு விடயமாகத்தான் இருக்கின்றது. எனவே, அதனை ஜே.வி.பி. ஏற்றாக வேண்டிய நிர்பந்தமும் அதற்கு உண்டு. இவ்விருப்பை மாற்றியமைக்க முயலும் செயற்பாடுகள் இருக்கலாம் என்றாலும், அவை யதார்த்த நிலைமைகளை மீறும்போது, பொருந்திவராமல், தமது அழிவுக்கான அஸ்திவாரங்களை இட்டுவிடுகின்றன. (இங்கே யதார்த்தம் என்பது, உள்நாட்டு-வெளிநாட்டுச் சக்திகளையும் உள்ளடக்கவே செய்யும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை).
இந்தப் பின்னணியில்தான் அநுரகுமார திசாநாயக்க அவர்கள், இன்று இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். இவ்வாட்சி நீடிக்குமா அல்லது இழுபறிக்குள்ளாகுமா, அல்லது தோல்வியைத் தழுவுமா என்பனவெல்லாம் இனி நடக்கப்போகும் சங்கதிகளாகின்றன. இருந்தும், யதார்த்தங்களை மறக்கநினைக்கும் யாறொருவருக்கும் வரலாறு மிகக்கடுமையான தண்டனைகளையே வழங்கி வருவது சாசுவதமாகின்றது. (இதற்கான உதாரணம் எண்ணில் அடங்காதன என்பதும், அவை இலங்கை அரசியலில் இடம்பெறாமலும் இல்லை என்பதும் தெளிவு).
1970ல் ஆட்சியைக் கைப்பற்றிய ஸ்ரீமாவோ தலைமையில் இடதுசாரி கூட்டணி அமையப்பெற்றது. என்.எம்.பெரேரா-கொல்வின் ஆகியோரின் சமசமாஜ கட்சியும், பீட்டர் கெனமனின் கம்யூனிஸ கட்சியும் கூட்டணி அமைத்திருந்த காலமது. இருந்தும் இவ்வாட்சி, 1977ல் படுதோல்வியைக்கண்டு ஜே.ஆர். இன் 17வருட கேவலமான ஆட்சிக்கு வித்திட்டது (1977-1994). வித்தியாசம், இவை அனைத்தும் நடந்தபோது இருந்த இந்தியா, இன்று இருப்பதாகத் தெரியவில்லை. மாறியுள்ளது. அதாவது, விடயங்கள் மாறியுள்ளன.