ஆய்வு: “பட்டினப்பாலைவழி: பழந்தமிழர் வாழ்வில் சூழல் விழிப்புணர்வு” - முனைவர் ஏ. பிரேமானந்த், நிகழ்ச்சித் தொகுப்பாளர் & திரைக்கதை எழுத்தாளர், புதுவை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம், புதுச்சேரி–605 006 -
ஆதிகாலப் பழந்தமிழரின் வாழ்வியலைப் பதிவுசெய்வது சங்க இலக்கியமாகும். ஒரு செல் உயிரி முதல், பிற உயிர்களனைத்தும் இயற்கையின் ஆதாரமாகத் திகழுகின்றன. பண்டைய காலந்தொட்டுத் தற்போதைய நவீனக்காலம் வரை, ஒவ்வொரு உயிரும் தன்னைச் சுற்றிருக்கும் சூழலைச் சார்ந்து வாழ்கின்றது. நமது முன்னோர்களான சான்றோர்கள் அருளிய இயற்கைக் குறித்த சிந்தனை, தெளிவு, பாதுகாப்பு, இயற்கையைப் பேணுதல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த அடிப்படை அறிவை ஆராயுமிதமாக, “பட்டினப்பாலைவழி: பழந்தமிழர் வாழ்வில் சூழல் விழிப்புணர்வு” என்கிற தலைப்பின்கீழ் இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.
மனித இனத்தின் பகுத்தறிவு சாதனையாகக் கருதுவது அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகும். எவற்றையும் அறிவியல் கண் பார்வைக்கொண்டுப் பார்க்கும்போக்கு இந் நூற்றாண்டில் சாத்தியமாகியிருக்கிறது. மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், தான் சார்ந்த இடத்தைப் பாதுகாக்கவும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும் வேண்டி பல முயற்சிகளை எடுத்திருக்கிறான். அதன்பொருட்டு தோன்றியதே அறிவியல் யுகம்.
சுற்றுச்சூழல் என்ற சொல் சுற்றுப்புறங்களை உணர்த்தும் சொல்லாக்க (Etymologically) விளக்கமாகும். இது ஒரு ஒருங்கிணைந்த சொல்லாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் இச்சொல் உயிரினங்கள் வாழும் முறைமைகளையும் நீர், உணவு, சூரிய ஒளி ஆகியவற்றையும் உள்ளடக்கியது.
மேற்கூறிய கருத்தினை ஆராயும்போது, எல்லா உயிர்களும் சுற்றுப்புறத்தைச் சார்ந்து இருக்கின்றன. அதுபோல், ‘சுற்றுச்சூழல்’ என்கிற சொல்லும் உயிரினங்களைச் சார்ந்து தான் பொருள் தருகிறதென்பதை அறியமுடிகிறது.