புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் கனடாச் சிறுகதைகளின் வகிபாகம் குறித்து.- வ.ந.கிரிதரன் -
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் வாசிக்கவிருந்த எனது உரையின் முழு வடிவமிது. அன்று நேரக் கட்டுப்பாடு காரணமாக முழுமையாக , விரிவாக உரையாட முடியவில்லை. -
1. 'டயற்போறா' பற்றிய சிந்தனைகள்...
இன்று புலம்பெயர் மக்களைக் குறிக்கப் பாவிக்கப்படும் டய்ஸ்போறா என்னும் ஆங்கிலச் சொல் ஆரம்பத்தில் புகலிடம் நாடி பல்வேறு திக்குகளாகச் சிதறடிக்கப்பட்ட யூதர்களைக் குறிக்கப்பயன்பட்டது. ஆரம்பத்தில் யூதேயா யூதர்களின் தாயகமாக விளங்கியது. அது தற்போதுள்ள பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசம். கி.மு.586இல் பாபிலோனிய மன்னர் யூதேயா மீது படையெடுத்தார். எருசலேமிலிருந்த முதலாவது தேவாலயத்தை அழித்தார். யூதர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினார். யூதர்கள் தம்மிருப்புக்காகப் பல்வேறு திக்குகளிலும் சிதறடிக்கப்பட்டார்கள். இதனைக்குறிக்கவே கிரேக்க மொழியில் இச்சிதறலை diaspeirō என்றழைத்தனர். இதன் அர்த்தம் சிதறல். இதிலிருந்து உருவான சொல்லே டயஸ்போறா (Diaspora).
இவ்விதமாகத் தங்கள் நாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட யூதர்கள் மீண்டும் தம் தாயகத்துக்கு வந்து குடியேறினார்கள். இரண்டாவது தேவாலயத்தைக் கட்டினார்கள். மீண்டும் கி.மு 63 - கி.பி 135 காலப்பகுதியில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பில் யூதர்களுக்கும், ரோமானியர்களுமிடையில் மோதல்கள் ஏற்பட்டன. ரோமர்களுக்கு எதிராக யூதர்கள் கிளர்ச்சிகள் செய்தனர். அக்கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. மீண்டும் யூதர்கள் அவர்களின் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். எருசலேமிலிருந்த அவர்கள்து இரண்டாவது தேவாலயம் அடித்து நொருக்கப்பட்டது.