வாணிதாசனின் தொடுவானம் கவிதை மறுவாசிப்பு! - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
எளிமை, சந்தநயம், அழகியல் சித்தரிப்பு என்ற பின்னணியில் அமைந்த கவிதைகள் கொண்ட தொகுப்பு தொடுவானம். இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மரபின் தொடர்ச்சி மற்றும் நவின கருத்தியல் என்ற இரு புள்ளிகளை கொண்டமைந்துள்ளதை அறிந்தகொள்ள முடிகின்றது. வசன நடையில் எளிமையான சொற்களைக் கொண்ட கவிதைவரிகளில் உருவத்தில் மரபின் தொடர்ச்சியும் உள்ளடக்கத்தில் நவினத்தின் அதாவது, காலமாற்றதின் தேவை பற்றிய கருத்தியல் முன்னெடுப்புகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை இன்றும் உயிர்புடன் இருக்கின்ற சமூகத்தின் சில புள்ளிகளை அடையாங்காட்டுவனவாக உள்ளன.
கவிதைகளில் இடம்பெற்றுள்ள சில வரிகளைக் காலச் சூழலுக்கு மட்டும் ஏற்றவை என்று கொண்டாலும் அவற்றில் ஏராளமான செய்திகள் சமகாலத்தின் தேவையாகவும் சமூகத்தின் அங்கலாய்ப்புகளை வெளிப்படுத்தி உள்ள ஆவணமாக அமைந்துள்ளதுள்ளன. இத்தகைய தன்மைகளைக் கொண்ட இப்பிரதி வாசிக்கின்ற பொழுது அவற்றில் சில கூறுகளை நாம் அடையாளம் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அவற்றில் ஒன்று அழகியல் சார்ந்த விவரிப்புகள். இது எக்காலத்திற்கும் உரியதான ஒன்றாக விளங்குகிறது. அழகியலை வெளிப்படுத்தும்விதம் காலந்தோறும் தொடர்ச்சியாக மாறுதல்களைச் சந்தித்து வந்தாலும், அதன் உள்ளார்ந்த அகம் என்றும் நிலைபெற்ற ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை மறுப்பதற்கு இல்லை. அப்படிப் பார்க்கிறபொழுது கவிஞன் தான் கண்ட - தன் மனதைக் கவர்ந்திழுத்த அழகியலை எளிமையான சொற்களில் சொல்லிச் சென்றிருப்பதைப் பார்க்கமுடிகிறது.
சான்றாக,
‘’மாவின் பசுந்தளிர்கள் பனித்துளி தூவிடும் !
மலர்கள் பரப்பி உயிர்களைக் கூவிடும் !
பூவின் மதுநுகர்ந்து பொறிவண்டு பாடிடும் !
புதர்கள் தலை அசைத்துப் புன்சிரிப் பூட்டிடும்!
கூவிச் சிறகடித்து வரிச்சேவல் எழுப்பிடும் !
கொடுமை இருளகல ஒளி எங்கும் தாவிடும்!’’
என்ற முதல் கவிதை இயற்கையின் அழகை எளியச் சொற்களால் சித்தரித்துவிடுவதைப் பார்க்கலாம். என்றாலும், கவிதையின் இறுதிவரி கவனிக்க வேண்டியதாக உள்ளது. அந்த வரி ஒளி பற்றியதாக இருந்தாலும், அந்த ஒளியால் அகற்றப்படும் இருள் வெறும் இருளா? என்ற கேள்வி எழாமல் இல்லை. காரணம் அது ‘கொடுமை இருள்’ என்று சுட்டப்பட்டுள்ளது. இருள் என்பதன் பொருள் என்ன? இருள் யாருக்கு என்ன கொடுமை தந்தது என்பன போன்ற வினாக்கள் பின்னணியில் நாம் விரித்துப் பொருள் கொள்ளலாம். மேலும், எழுதப்பட்ட காலத்தில் மட்டுமன்றி இன்றும் புதுமையானதாகவே அவ்வரி உள்ளதை உணரலாம்.