மீண்டும் வாசிக்கையில் தெணியானின் "காத்திருப்பு"
'காத்திருப்பு' என்ற இந்த நாவல் ஈழத்து நாவல் இலக்கியத்தில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒரு படைப்பாகும். அது பேசும் பொருள் காரணமாக இங்கு அவதானிப்பைப் பெறுகிறது. பல நாவல்களையும் குறுநாவல்களையும் தந்தது மட்டுமின்றி, சிறுகதை, விமர்சனம், மேடைப் பேச்சு எனப் பரந்த படைப்பாளுமை வீச்சுக் கொண்டவர் தெணியான். இந்தப் படைப்பு ஒரு வித்தியாசமான படைப்பனுபவமாக அவருக்கு இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. படைப்புலகில் தனது வழமையான பாதைகளில் நடந்து சலிப்புற்று புதிய பாதைகளை அவாவும் கலைஞனின் உள்ளார்ந்த தேடலை உணர்த்துகிறது எனலாம். ஏனெனில் இது ஒரு பாலியல் நாவல். பாலியல் நாவல்கள் எமக்குப் புதியன அல்ல. பதின்மங்களில் நான் படித்த எஸ்.பொ வின் எழுத்துக்கள் சில கிளுகிளுப்பூட்டின. கணேசலிங்கன், டானியல் போன்றோரும் பாலியல் பிரள்வுகளை அங்காங்கே தொட்டுச் சென்றுள்ளார்கள். சட்டநாதனின் பல சிறுகதைகள் அற்புதமானவை. பெண்களின் உணர்வுகளை, பாலியல் பிரச்சனைகளை அழகாகாத் தொட்டுள்ளார். கலைப் பிரக்ஞையுடனும், மொழி மீதான அக்கறையோடும் எழுதுபவர்களில் என்னைக் கவர்ந்தவர்களில் அவரும் ஒருவர். ஆனால் மிக நாசுக்காகவும் அழகாகவும் கையாண்டவர் தி.ஜானகிராமன் இவரின் மோகமுள், அம்மா வந்தாள் இரண்டும் மறக்க முடியாதவை. அதேபோல ஜெயகாந்தனின் ரிஷிமூலம் குறிப்பிட்டுக் கூற வேண்டிய படைப்பாகும். கவித்துவ மொழி நடை அழகும், ஆன்மீகத் தேடலும் கொண்ட லா.சா.ரா காதலும் பாலியலும் இழையோடத் தந்த 'அபிதா' தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று. இவர்கள் அனைவருமே பாலியல் உறவுகளையும், பிறழ்வுகளையும் யதார்த்தமாக எடுத்துச் சொன்னவர்களாவர். உண்மையில் அவர்கள் ஏதோ நடக்காத காரியத்தைப் புதிதாகச் சொன்னவர்கள் அல்ல. சமூகத்தில் ஆங்காங்கே மறைவாக நடக்கும் விசயங்களை, வெளிப்படையாக இலக்கியத்தில் கலை நயத்தோடு சொன்னார்கள்.