நூல் அறிமுகம்: ரிஷான் ஷெரீப் மொழிபெயர்த்த ''இறுதி மணித்தியாலம்''
ஈழத்தில் உலக மொழி படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் 50கள் தொடக்கம் நடைபெற்று வருகின்றன. ஆனால் சிங்கள இலக்கியங்கள் சிங்களத்திலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி என்பது 70களின் மத்தியம் தொடக்கம் பரவலாகியது எனலாம். சமீபத்தில் 10 சமகால நவீன சிங்களக் கவிஞர்களின் சுமார் 70 கவிதைகள் அடங்கிய தொகுப்பாக ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பில் வம்சி வெளியீடாக''இறுதி மணித்தியாலம்'' எனும் தலைப்பில் இக்காலகட்டத்தில் நமக்குக் கிடைத்திருக்கிறது. இத்தொகுப்பிலும் அடங்கிய சிங்கள நவீன கவிதைகள் நேரடியாகச் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொகுப்பின் முதல் சிறப்பு என்று சொல்வது என்றால் இத்தொகுப்புக்கு இவர் தெரிவு செய்திருக்கும் கவிஞர்கள் சிந்தனையில் ஒன்றுபட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். மேலும் இவர்கள் மாற்றுக் கருத்தாளர்களாக இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். மனித உரிமைகள் பேணுதல், சகல இனங்களுக்கான உரிமைகளை மதித்தல். மேலும் இனம் மதம் சாதி மொழி பேதமற்ற நிலையில் சகல இனங்களுடன் ஊடாட விரும்புகின்றவர்களாக இருக்கிறார்கள். அத்தோடு தாம் சார்ந்த சமூகக் கட்டமைப்பைக் கடுமையாக விமர்சிக்கின்றவர்களாக இருக்கிறார்கள்.
இத்தொகுப்பில் அமைந்துள்ள கவிதைகள் மேலும் இரு விதத்திலும் சிறப்பு பெறுகின்றன. ஒன்று, அவற்றை மொழிபெயர்த்திருக்கும் முறைமை. அக்கவிதைகளைத் தமிழ் மயப்படுத்தாமல் தமிழில் சிங்களக் கவிதையை வாசிக்கிறோம் என்ற உணர்வினை ஏற்படுத்து வகையில் அவற்றை மொழிபெயர்த்திருக்கும் முறைமை. மூல மொழி கவிதைகளில் வெளிப்பட்ட இருண்மையைக் கூட அதே சொற்களுடன் மொழிபெயர்த்திருப்பது என்பது ஒரு சிறப்பாக நான் பார்க்கிறேன். இரண்டாவது அக்கவிதைகளில் கவிஞர்கள் பேசியிருக்கும் விடயங்கள். மேலெழுந்தவாரியாகப் பேசும் பொழுது இந்த நாட்டின் சிங்கள-தமிழ் மொழி பேசும் மக்கள் பிரச்சினைகள் பொதுவானவை என்று சொல்லப்படுவதுண்டு. இக்கருத்து போர் காலச் சூழலில், உயிர்-உடைமை இழப்பு காணாமல் போனவர்கள் விதவைகள், அனாதைகள் போன்றவற்றின் உருவாக்கம் என்ற வகையில் பொதுவானவையாக இருக்கலாம். ஆனால் மேலும் சில அம்சங்களில் மூவின மக்களின் பிரச்சினைகள் வெவ்வேறானவை என்பது தெரிய வரும். அவை ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும் அந்தப் பிரச்சனைகளுக்குக் காரணமான காரணிகள் எதிர் நிலையாகவும், தாம் சார்ந்த சமூகத்தை மட்டுமே சார்ந்தவையாக அமைந்திருப்பதைக் காணலாம். அத்தகைய கவிதைகள் இத்தொகுப்பில் நிறைந்தே காணப்படுகின்றன.