நூல் அறிமுகம் - நிலம் பூத்து மலர்ந்த நாள்
இந்நாவலை மலையாளத்தில் எழுதியவர் மனோஜ் குரூர், தமிழாக்கம் கே.வி. ஜெயஸ்ரீ , வம்சி பதிப்பகம் திருவண்ணாமலை.
சங்கக் கால மக்களின் வாழ்வியலை நவீன மொழியோடு எடுத்துரைக்கும் நாவல். தமிழரின் தொன்மையான பண்பாடு சங்கக் காலப் பண்பாடு. இதனை எடுத்துக் கூறும் அகச் சான்று சங்க இலக்கியம். சங்கக் கால மக்கள் மனித வாழ்க்கையை இரண்டு பிரிவாகப் பிரித்துச் சிந்தித்துள்ளனர். ஆண் பெண் உறவைக் கூறுவது அக வாழ்க்கை என்றும் மன்னர்களின் போர் வீரம் பற்றிப் பேசுவது புற வாழ்க்கை என்றும் பதிவு செய்துள்ளனர். இந்த இலக்கியப் பதிவுகள் அக்கால மக்களின் எண்ண ஓட்டங்களை மன உணர்வுகளை வரலாற்றுப் பின்புலத்தை அறிந்து கொள்ள உதவுகிறது. இத்தகைய பின்புலத்தைக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது.
சங்கப் புலவர்கள் கபிலர், பரணர், ஒளவை இவர்கள், கடையெழு வள்ளல்களில் வேள்பாரி, நன்னன், அதியமான் போன்றோரைப் புகழ்ந்து பாடியுள்ளனர். இவர்களின் நட்புக்குப் பாத்தியப்பட்டவர்களாக இருந்து வந்தனர். நன்னனின் நட்புக்குப் பரணரும் , பாரியின் நட்புக்குக் கபிலரும், அதியமானின் நட்புக்கு ஒளவையும் விளங்கியதை அவர்களின் பாடல் நமக்கு உணர்த்துகிறது.
நவிற மலையை ஆட்சி செய்தவன் நன்னன், பறம்பு மலையை ஆண்டவன் பாரி, குதிரை மலையை ஆண்டவன் அதியமான் இவர்கள் அனைவரும் கலை இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள், அதே வேளையில் அரசியல் போர் முதலியவற்றிலும் சிறந்து விளங்கினர். மக்களின் நலன் கருதி புலவர்களின் அன்பு பெற்றுச் செம்மையாக அரசியல் வாழ்வை முன்னெடுத்தவர்கள் இவர்கள். என்றாலும் இம்மன்னர்களின் வாழ்க்கைப் பின்புலத்தைக் கொண்டு பாணர்களின் வாழ்வியலோடு கதைக் கூறுவது இந்நாவல்.
பாடி ஆடி மக்களையும் மன்னர்களையும் மகிழ்விப்பவர்கள் பாணர்கள். இசை கூத்து கதை என்று வாழ்ந்து வரும் பாணர்கள் வறுமையில் உழன்று புகழிடம் தேடி பயணிக்கும் பயணத்தில் இந்நாவல் தொடங்குகிறது. வறுமையின் துன்பம் தாளாமல் கொடையாளரைத் தேடியதில் நன்னன் முதலிடம் பெறுகிறான்.