கவிஞர் ஜெயதேவன் மறைந்தார்! கண்ணாடி நகரம் - கவிதைகள் - ஜெயதேவன் - ஒரு பார்வை! - பொன்.குமார் -
கவிஞர் ஜெயதேவனின் மறைவை முகநூல் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல். அவர் நினைவாக எழுத்தாளர் பொன்.சுகுமார் எழுதிய கவிஞர் ஜெயதேவனின் 'கண்ணாடி நகரம்' கவிதைத்தொகுப்பு பற்றிய விமர்சனக் குறிப்பிது. இக்குறிப்பு கவிஞர் ஜெயதேவனின் ஆளுமையை நன்கு விபரிக்கின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம், சுற்றுச் சூழற் பாதுகாப்பு, விம்ப வழிபாட்டில் மூழ்கிக்கிடக்கும் நவகாலத்து மானுடர், விவசாயத்தின் தேவை, புலம்பெயர்தலின் வலி எனக் கவிஞரின் பன்முகப்பட்ட பார்வையினை வெளிப்படுத்தும் குறிப்பு. கவிஞர் நவீன தொழில் நுட்பத்தை நன்கறிந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதையும் மேற்படி குறிப்பு புலப்படுத்துகின்றது.
கவிஞர் ஜெயதேவனின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். அதே சமயம் கவிஞரின் எழுத்தை, ஆளுமையை இத்தருணத்தில் அறிந்து கொள்ளலின் அவசியம் கருதிப் பொ.குமாரின் முகநூற் குறிப்பையும் நன்றியுடன் பகிர்ந்து கொள்கின்றேன். - வ.ந.கி, பதிவுகள்.காம்