நேர்காணல் பகுதி மூன்று: ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
கேள்வி: சென்றமுறை உங்களை கவர்ந்த உலக ஓவியர்களின் வரிசையில் பலரையும் குறிப்பிட்டிருந்தீர்கள். அதில் முதலாவதாக இடம் பிடித்திருந்தவர் ஜோன் கொன்ஸ்டபில். அவரைப் பற்றி வாதிப்பதற்கு முன் இரண்டு கேள்விகள் உண்டு. முதலாவதாக, நீங்கள் குறிப்பிட்ட, ஓவியர்களின் பெரும்பாலான ஓவியங்கள் ரவிவர்மா காலத்து ஓவியங்களில் இருந்து வித்தியாசப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, வான்கோவின் ஓவியம் மிக மிக வித்தியாசப்பட்டு காணப்படுகின்றது. இவற்றை ரசிப்பதற்கு அல்லது இவற்றின் உள்ளார்ந்த மதிப்பை சரியாக போற்றுவதற்கு தனியான ஒரு கற்கை – அல்லது பயிற்சி, தேவையானது என்று கருதுகின்றீர்களா?
பதில்: இல்லை. ஆனால், சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல சிறந்த ஓவியங்களைப் பார்த்து, பார்த்து பரீட்சயம் அடைய அடைய அவற்றால் நீங்கள் பாதிக்கப்படுவது நிச்சயமானதாகின்றது. பொதுவில் சாதாரண புகைப்படங்கள் போன்றே, ஓவியங்களையும் காண பழக்கப்பட்டுவிட்ட நாங்கள் இவற்றை மேலும் ஆழமாக பார்க்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. மேலைத்தேய ஓவிய காட்சி கூடங்களில் எல்லாம் ஒவ்வொரு ஓவியத்திலிருந்தும் கிட்டத்தட்ட ஒரு முப்பது அடி தள்ளி இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. பார்வையாளர்கள் இவ்இருக்கைகளில் அமர்ந்து குறித்த ஓவியங்களை ஓர் அரைமணி நேரம் செலவழித்து பார்க்கின்றார்கள். அவ்வோவியத்தின் மரங்கள், பூமி, புற்றரை, ஆறுகள், மலர்கள் இவை அனைத்துமே பார்வையாளர்களோடு பேசுகின்றன. ஏதேதோ கூறுகின்றன.
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. உதாரணமாக, பகல் வேளைகளில் ஒரு மலையை அல்லது ஒரு மரத்தை நீங்கள் காணுகின்றீர்கள். மலை தெளிவாக தெரிகின்றது. ஆனால் அதே மலையை அல்லது மரத்தை, மாலையின், இருட்டும் வேளையில் ஒரு கருக்கலில் காணுகின்றீர்கள். அதன் ஓரங்கள் தெளிவுற அமைவதில்லை. இருந்தும், ஒரு கவிதையை போன்ற ஒரு உணர்வு அங்கே தோற்றம் கொடுக்க முற்படுகின்றது. அதனை பார்க்கும் பார்வையாளனின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் எல்லாம் ஊற்றெடுக்கின்றன. அக்கருக்கல் கூறும் கவிதை என்ன? இதைத்தான் வான்கோ போன்ற ஓவியர்கள் தத்தமது ஓவியங்களில் முன்னிறுத்த முனைந்தனர். தனது ஓவியங்களை அவர்கள் பேச வைத்தார்கள். பாட வைத்தார்கள் - கவிதைகளாய் உருவாக்க முயற்சித்தனர். அதில் வெற்றியும் பெற்றனர்.