மலையாள இளம் கவி அனிஷா அவருடன் ஒரு பேட்டி! - சுப்ரபாரதிமணியன் -
திருச்சூர் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட போது இளம் பெண் கவி அனிஷா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . அவருடன் கவிதை சார்ந்த ஒரு உரையாடல் :
இன்றைய மலையாள கவிதை உலகு எப்படி இருக்கிறது?
இன்றைய மலையாள கவிதை உலகில் போலிகளும் ஜிமிக்கிகளும் அதிகமாக தான் இருக்கின்றன. நான் தற்சமயம் வாழும் துபாய் நகரத்தில் இப்படி போலிகள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கவிதை அனுபவங்களை விட கவிஞர்கள் என்று சொல்வதில் பெருமை இருக்கிறது
உங்கள் பங்களிப்பு..
என்னுடைய கவிதைகள் இரண்டு தொகுப்புகளாக வந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் இருந்து மலையாளத்துக்கு கூட இரண்டு தொகுப்புகளை கொண்டு வந்திருக்கிறேன். இப்போது என்னுடைய தொகுப்பு ஒன்று ஆங்கிலத்தில் வெளிவர ஆயத்தம் நடந்து கொண்டிருக்கிறது.
இன்றைய மலையாள கவிஞர்கள் எந்த வகையில் தீவிரமான செயல்பாட்டில் இருக்கிறார்கள்?
இன்றைய இளம் கவிஞர்கள் பத்திரிக்கையில் எழுதுவதை விட சமூக ஊடங்களில் எழுதுவதை அதிகம் விரும்புகிறார்கள் நான் இரண்டிலும் எழுத விருப்பம் கொண்டிருக்கிறேன். உரைநடை கவிதை மட்டும் இல்லாமல் சந்தம் வைத்துக்கொண்டு எழுதுகிற கவிதைகளிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. இந்த சந்தக் கவிதைகளை பாடி யூடுப்பில் வெளியிட்டு இருக்கிறேன். பழைய கவிஞர்கள் கவிதைகளைப் பாடும் இயல்புகளைக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இந்த இளைஞர்களின் சமூக ஊடங்களிலும் 'யூடுப்பு'களிலும் கிடைக்கும் அங்கீகாரத்திற்காக, விளம்பரத்திற்காக கவிதைகளை பாடல்களாக பாடுகிறார்கள். கவிதை பல்வேறு பரிமாணங்களுடன் வளர்ந்து கொண்டிருக்கிறது.