மறதி நோய் (Alzheimer's disease) - ஶ்ரீரஞ்சனி -
* ஓவியம் - AI
மனித சமூகத்தை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக மறதி நோயும் மாறிவருவதை நாங்கள் பார்க்கின்றோம். மனிதரின் ஆயுள் காலத்தை மருத்துவத் துறையின் முன்னேற்றம் அதிகரித்திருப்பதால், இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் அளவும் அதிகரித்திருக்கின்றது என்றும் நாங்கள் பொருள்கொள்ளலாம். அதேவேளையில் ஒருவரின் வாழ்க்கைமுறையும் இதற்குப் பங்களிக்கிறது என்பதும் விஞ்ஞானம் கூறும் ஓர் உண்மையாகும். மறதி நோயை விளங்கிக்கொள்வது, அதன் அறிகுறிகளை விரைவில் இனம்காண்பதற்கும், அவற்றைக் கையாள்வதற்குத் தேவையான உதவிகளைப் பெற்று, வாழ்க்கைத் தரத்தை ஓரளவாவது பேணிக்கொள்வதற்கும் உதவிசெய்யும்.
மனித மூளையைப் பாதிக்கும் பல்வேறு வகையான ஒழுங்கீனங்களின் (dementia) மிகப் பொதுவான ஒரு ஒழுங்கீனமாக அல்சைமர் நோய் (Alzheimer's disease) காணப்படுகிறது. (Alzheimer’s Association, 2024). இந்த நோய் யாருக்கும், எந்த வயதிலும் ஏற்படலாம் என்றாலும்கூட, 65 வயதுக்கு மேற்பட்டவர்களிடமே இது அதிகமாகக் காணப்படுகிறது.
மூளையிலுள்ள புரதங்களான beta-amyloid மற்றும் tauஇல் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள், plaques மற்றும் tangles (புரதக்கட்டிகள், இறந்த நரம்புகளின் சுருக்கங்கள்) உருவாகக் காரணமாகின்றன என்றும், அவை நரம்புக் கலங்களையும், அவற்றின் இணைப்புக்களையும் சேதப்படுத்துவதால் மூளையின் செயற்பாடு பாதிக்கப்படுகின்றது என்றும் ஜேர்மன் மருத்துவரான Alois Alzheimerதான் முதன்முதலாக அல்சைமர் நோய் பற்றி விபரித்திருந்தார் (Alzheimer’s Association, 2024).