அஞ்சலி: திருப்பூரின் மூத்த எழுத்தாளர் தி. குழந்தைவேலு மறைந்தார்! - சுப்ரபாரதிமணியன் -
- திருப்பூரின் மூத்த எழுத்தாளர் அமரர் தி. குழந்தைவேலு -
ஏப்ரில் 26 சனிக்கிழமையன்று மறைந்தார் நாவலாசிரியர், திருப்பூரின் மூத்த எழுத்தாளர் தி. குழந்தைவேலு அவர்கள், அவருக்கு வயது 89. திருப்பூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். மின்சார தொழிலாளர்கள் சார்ந்த சிறந்த நாவல்களை உருவாக்கினார். புகழ்பெற்ற எழுத்தாளர் நீல பத்மநாபன் அவர்கள் எழுதிய ’மின் உலகம்” போல் பல பரிமாணங்கள் கொண்ட நாவல்கள் அவை. விளிம்புநிலைமக்களுடைய வாழ்க்கையை, சிரமங்களை பல சிறுகதைகளாக எழுதினார். சமீபத்தில் பல ஆண்டுகளாக ஒரு மாதிரி கோமோவில் இருந்தார. சுயநினைவு இல்லாமல் இருந்தார். அவருடைய படைப்புகள் எல்லாம் திரும்பத் திரும்ப மறுபடியும் மறுபிரசுரம் செய்யப்பட வேண்டும் என்று வாசகர்கள் விரும்பினார்கள்.
காவ்யா பதிப்பகத்தில் இரண்டுநாவல்களை கொண்டுவர முயற்சித்து வெற்றி பெற்றார். அவருடைய படைப்புகள் எங்கும் பதிவு செய்யப்படாத சாதாரண மக்களின் அவலங்கள், அதுவும் வால்பாறை பகுதிகளில் தற்காலிக மின் ஊழியராக இருந்து மின்விநியோக கட்டமைப்பு சார்ந்த அவரை அனுபவங்களைச் சிறப்பாக எழுதியிருக்கிறார். வால்பாறை பழங்குடி மக்களின் வாழ்க்கை சார்ந்து அவரின் சித்திரங்கள் அற்புதமானவை. திருப்பூர் கனவு இதழில் சிறுகதைகள் எழுதினார். செம்மலர், தாமரை. உண்மை போன்ற இதழ்களிலும் சிறுகதைகள் கட்டுரைகள் எழுதினார். பகுத்தறிவு சிந்தனையோடு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.