சிறுகதை : பரமு! - கடல்புத்திரன் -
" பரமு காலமாகி விட்டான் ! " என கணபதி கைபேசியில் தெரிவித்த போது மிகத் துயரமாகவிருந்தது. முற்பது வருசங்களுக்கு முதல் மனம் வாயு வேகத்தில் சென்று விட்டது . அகில் தாமரை இயக்கத்தில் சேர்ந்த போது இருந்த பிரதேச அரசியல் அமைப்பில் , இவர்களுடைய தலைமையில் , பரமுவும் ஒருத்தன் . மெலிந்த தேகம் .எளிமையான ஆடை .நட்பான பார்வை . முக்கியமாய் அவனை விட ஒன்று, இரண்டு வயசு மூத்தவன் . அகிலை , கிராமப்பொறுப்பாளர் ஏதோ ...விசயத்திற்கு சுளிபுரம் அனுப்பி இருந்தார் . அவனுடைய நண்பன் சேகருடன் சென்றிருந்தான் . சேகர், ஆதரவாளன்.தோழனாகவில்லை . இருவருமே எங்கும் திரியிற நண்பர்களாக இருந்தவர்கள் . இவன் சேர்ந்து விட்டான் . ஆனால் , திரியிறது நிற்ககவில்லை .தவிர , அவனுக்கு வட்டுக்கோட்டையில் , உறவினர்கள் பலர் இருக்கிறார்கள் ,திருத்திய வானொலிப்பெட்டி ஒன்றைக் கொடுக்க வேண்டியிருந்தது . " குடுத்திட்டுப் போவோம் "என்று கையளித்து விட்டு ,சிறிய கூலியைப் பெற்றுக் கொண்டு வந்தான் . அவனோடு திரியிறதால் சுளிபுரம் முன்னமே சிறிது தெரியும். ஆனால் , அன்று தான் வலக்கம்பறை தேர்முட்டியில் இருந்த கிளி ,மதன் , வனபால் , செந்தில் , பரமு எல்லொரும் அறிமுகமாகிறார்கள் . கூட இருந்த பாபுவை அவனுக்கு , யாழ் புதியசந்தையில் தொழினுட்பக்கல்லூரியில் படிக்கிற போது வந்து தேனீர் குடிக்கிற கடைக்கு ...அவனும் வருவான் . கதைக்கிற போது 'மூளாய்' என்ற போது சுளிபுரத்திற்கு அருகில் ஊர் என்பதால்...நட்பு எற்பட்டு விட்டது . காலையில் அங்கிருந்து வார மினிபஸ் ஒன்றில் வந்து விட்டு எப்படியோ பொழுதைக் கழித்து விட்டு மாலையில் போய் விடுகிறேன்"என்றான் . ' வாழ்வே மாயம் ! ' என்றால் என்ன என்று அகிலுக்கும் தெரியும் . ஆனால் , அவனுக்கு தொழில் நுட்பவேலைகள் அத்துப்படி . அங்கே இருக்கிற பொயிலரில் பிரச்சனை வந்து விடும். திருத்தி இயங்க வைத்து விடுவான் . மின் இணைப்பு வேலைகளையும் நன்கு தெரியும் . அதனால் , கடையில் இருந்த குலம் அவனுக்கு சிலவேளை இலவசமாக தேனீர்க் கொடுப்பான் . கடனுக்கும் தேனீரைக் கொடுத்து எழுதி வைத்திடுவான் . குலம் கூறுகிறவன் . " இவன் மாச முடிவிலே எப்படியும் ...கணக்கை இல்லாமல் செய்து விடுவான் . நல்லவன் " . இயல்பான ஒரு வேலை ...? யாழ்ப்பாணத்தில் கிடைக்கும் என்றால் ? , யாரைப் போய் நோவது ! ...தெரியவில்லை . எப்பவுமே ஒரு சமூகம் எந்தகாலத்திலும் இரவல் ஆட்சியில் கிடக்கக் கூடாது . பல்லைக்கடித்துக் கொண்டு விடுதலையப் பெற்று விட்டால் தான் உய்யும் . இல்லையேல் சந்ததி பாலையைக் காண வேண்டியது தான் .