
அதீத நிதர்சனம்
அநேகமாக
இந்தச் சூரியன் இன்றோடு நின்றுவிடப்போவதில்லை.
அந்த
நிலவுக்கு மேகத்தில் மறைதல்
கால நீடிப்பானாலும்
ஒளிவதற்கு உகந்த இடமெனக் கொள்ள முடியவில்லை.
ஆடு கடித்தாலும்
அந்தப் பூ
அடுத்தடுத்த நாளில்
பூக்கத்தான் போகிறது.
அவளைக் காதலிக்கத்தான்
வேண்டுமென்ற
அவசியங்கள் எதுவுமில்லை.
எப்படியும் கல்யாணம் செய்யத்தான் போகிறார்கள்.
இம்முறை
அடை வைத்த முட்டைகள்
பொறிக்காமல் போனாலென்ன
மறுமுறை முட்டைகள் போடும் கோழி இருக்கத்தான் செய்கிறது.
எனக்குத் தெரிந்தவரை
என் தாத்தாவும்
அவர் தாத்தாவும் செத்துத்தான் போனார்கள்.
இங்கு
இப்பொழுதென
எதார்த்தத்தை
ஏற்று
இயல்பில்
இணங்கியவனுக்கு
நாளை பற்றிய
நம்பிக்கைத் தேவையில்லை
தருணப் புரிதலில் லயிப்பதற்கு.
புரிதலின் போதாமை.
கனத்த மௌனத்தை
மொழி பெயர்த்ததில்
கிடைத்தது
அனுமான எச்சங்கள் தான்.
தொடர்பு எல்லைகள்
அப்பாலுக்கு
அப்பாலாகிவிட்டபொழுது.
மீச்சிறு சொல்போதும்
நோதலில் நோவதற்கு.
வாய்க்காது போனக் குளுமை.
அன்றொரு நாள்
பெய்த மழையில்
நனைந்த
மனதிற்கு
இந்த வெக்கைத் தாழாதுதான்.
எங்கு தேடுவது
பிராயணத்தில்
பேசி மகிழ்ந்த
அவளை
இப் பெருந்திரள்
கூட்டத்தில்.
மேகங்கள் தருவித்த இருள்.
தூறல்களில்
நனைய வைத்தது
குடையற்ற
கொடுப்பினையில்.
அசௌகரிய
மின்னல் வெட்டின்
மன முழக்கத்திற்கு
விடைகளற்றுக்
கடக்கின்றபொழுது
பழுதான காலையே
பழுதாக்கும்
பள்ளத்தில்
மிதந்த
பட்டாம் பூச்சியை
கையிலெடுத்த கணம்
உள்ள உவகையில்
வாகனமொன்று
சகதியடித்து
கடந்துபோனது
பட்டாம் பூச்சி
சிறகசைத்து
செல்லுமாறு.
கன்றிய ஏக்கங்கள்.
கல்லடி பட்ட
பழமென
கதைகள்
உலவின.
மரங்களைச் சுற்றி
காய்களுக்கு முன்
கண்களைப் பறிக்கிறதென.
அசலூர்க்காரர்
அலுங்காமல்
பறித்துச் சென்றார்
பாவிக்கும்
பயணத்தில்
ருசிகள் கூட்ட.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









