
- எழுத்தாளர் மாலன் -
எழுத்தாளர் மாலன் 1965இல் தமிழ்நாட்டில் நடந்த இந்தித்திணிப்புக்கெதிரான போராட்டம் பற்றி ஒரு முகநூற் பதிவிட்டிருந்தார். அதில் அவர் பின்வருமாறு கூறியிருப்பார்:
"அந்தப் போராட்டம் ஆங்கிலம் அகற்றப்படுவதை எதிர்த்த போராட்டம் தமிழுக்கானது அல்ல. தமிழுக்கு அப்போது ஆபத்தில்லை. தமிழைக் காக்க நடந்த போராட்டம் என்பது கட்டமைக்கப்பட்டது. ஆங்கிலத்தை அகற்றுவதை எதிர்த்த போராட்டம் என்றால் மக்களிடையே பெரிய எழுச்சி இருக்காது என்பதால் (அன்று தமிழ்நாட்டில் ஆங்கிலம் அறியாத மக்கள் பலர்) கிளர்ச்சியை திமுக தமிழோடு சம்பந்தப்படுத்தி முன்னெடுத்தது"
இவை திராவிடத்தை எதிர்க்கின்றோம் என்னும் பெயரில் மாலனால் இந்தித்திணிப்புக்கெதிராகத் தமிழக மக்களால் நடத்தப்பட்ட நியாயமான போராட்டத்தின் முக்கியத்தைக் குறைப்பதற்காகக் கூறப்பட்ட கூற்றுகளாகவே கருத வேண்டியுள்ளது. இந்தித்திணிப்புக்கெதிராக நடத்தப்பட்ட போராட்டம் அண்ணா தலைமையிலான திமுக மாணவர்கள், பொது மக்கள் என அனைவருடனும் இணைந்து நடத்திய போராட்டம். இதற்காக மாணவர்கள் தீக்குளித்திருக்கின்றார்கள். பொதுமக்கள் காவற் துறை, இந்திய இராணுவத்தால் தாக்கப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் போராடியது தமிழ் மொழிக்காக, இந்தித்திணிப்புக்கெதிராக. மாலன் அதனை வெறும் ஆங்கில மொழியினை நீடிப்பதற்காக என்று மலினப்படுத்தியிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
தமிழுக்கு இந்திதிணிப்பு பல் வகைகளில் ஆபத்தை ஏற்படுத்தியது என்றுதான் கூற வேண்டும். இந்தி ஆட்சி மொழியாக இருக்கும் பட்சத்தில் தமிழ் நாட்டு மக்களுக்கு அது மிகப்பெரிய பாதிப்பு. அரச வேலைகள் உட்பட அனைத்துக்கும் இந்தி பயன்படுத்தப்படும், தமிழர்கள் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும். மேலும் இந்தித் திணிப்பு என்பது ஒரு கலாச்சார மற்றும் அரசியல் ஆதிக்க முயற்சி. அவ்வகையில் அதனை எதிர்ப்பது தமிழ்க் கலாச்சார,மொழிப்பினனணியில் முக்கியமானது. சாதாரணப் பொதுமக்களுக்கு அரச கடிதங்கள், விண்ணப்பப் படிவங்கள் இவையெல்லாம் இந்தியிலும் ,ஆங்கிலம் நிலைத்திருந்தால் ஆங்கிலத்திலும் அனுப்பப்படும்,. அப்பொழுது தமிழ் சாதாரணத் தமிழ் மக்கள் , ஆங்கில, இந்தி அறிவற்ற தமிழ் மக்கள் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்வார்கள்? அவ்வித நிலை தொடர்ந்தால் காலப்போக்கில் தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறைந்து விடாதா? அதனால்தான் அக்காலக்ட்டத்தில் இந்திக்கெதிரான போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் நியாயமான, தியாகங்கள் நிறைந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மாலன் மலினப்படுத்தியிருப்பது வருந்தத்தக்கது.
அப்போராட்டத்தில் ஈடுபட்ட, தம் உயிரை மாய்த்த , காவல்துறை மற்றும் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் போராட்டம் தமிழ் மக்களுக்கானது,. தமிழத்தில் மத்திய அரசால் திணிக்கப்பட்ட இந்தி மொழிக்கெதிரானது என்றுதான் கூற வேண்டும்.
மேலும் 1965இல் இந்தித்திணிப்புக்கெதிரான போராட்டம் ஏன் நடைபெற்றது? இதற்கான முக்கிய காரணத்தை நீங்கள் தவிர்த்து விட்டீர்கள். ஏன்?
இந்திய அரசியலமைப்பு 1949இல் உருவாக்கப்பட்டபோது அது இந்தி இந்தியாவின் அரச மொழியாக இருக்கும். ஆங்கிலம் 15 ஆண்டுகளுக்கு , 1965 வரை இணைப்பு மொழியாக இருக்கும் என்று நிர்ணயித்தது.. இதன்படி 1965 வரைதான் ஆங்கிலம் இணைப்பு மொழியாகவிருக்கும்,அதன் பின் இந்தியே இணைப்பு மொழியாக இருக்கும். இது இந்தி பேசாத மாநிலங்களில் , குறிப்பாகத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பைக் கொண்டு வந்தது. தமிழகம் தவிர, பஞ்சாம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகம், ஆந்திரா, கேரளா ,பாண்டிச்சேரி எனப் பல மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பிருந்தது. திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி எதிர்ப்பைக் கடுமையாக எதிர்த்தன. அரசியல் கட்சிகள் தவிர மாணவர் அமைப்புகள், பொது மக்கள் எனப் பலரும் இதனைக் கடுமையாக எதிர்த்தனர்.
தமிழ் மொழி செம்மொழி. அதன் தனித்துவத்தை, கலாச்சாரத்தை இந்தித் திணிப்பு பாதிக்கும். தமிழரின் அடையாளத்துக்கும், சுய மரியாதைக்கு அது ஊறு விளைவிக்கும். இதற்காகத்திராவிட முன்னேற்றக் கழகம் இதனைக் கடுமையாக எதிர்த்தது.
இவ்வெதிர்ப்புகள் காரணமாக 1963இல் அலுவல் மொழிச் சட்டம், 1963 (Official Languages Act, 1963) கொண்டு வரப்பட்டது. அதன்படி இந்தி மொழி மத்திய அரசின் அலுவல் மொழியாக நிலைத்திருக்கும். ஆங்கிலமும் துணையாகத்தொடரும். இது 1967இல் மேலும மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இந்தியை அலுவல் மொழியாக எல்லோராலும் ஏற்கப்படும் வரை ஆங்கிலமும் தொடரலாம் என்று அது கூறியது.
1965இல் நடைபெற்ற தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தினால் மட்டும் நடத்தப்படவில்லை. அரசியல் ரீதியாக இந்தித்திணிப்பைத் திமுக எதிர்த்தது. மாணவர்கள் இந்தித்திணிப்பை எதிர்த்துப் போராட்டத்தில் குதித்தனர். பொதுமக்களும் இணைந்தனர். திமுக வும் இப்போராட்டத்தில் இணைந்து போராடியது.
திமுகவின் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாகவே இந்திய மத்திய அரசு 15 வருடங்களில் ஆங்கில மொழியை முற்றாக நீக்குவதைத் தவிர்த்தது. அதன் தொடர்ச்சியான எதிர்ப்புகள் காரணமாகவே இந்தி பேசாத மாநிலங்கள் இந்திய ஆட்சி மொழியாக ஏற்கும் வரையில் ஆங்கிலமும் நீடிக்கும் என 1967இல் சட்டத்தை மாற்றியது.
தமிழகத்து மக்களின் , கட்சிகளின் இந்தி எதிர்ப்புப்போராட்டம் மட்டும் நடந்திருக்காவிட்டால் இப்போது இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருந்திருக்கும், இணைப்பு மொழியாக ஆங்கிலம் கூட இருந்திருக்காது.
இந்நிலையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னிறுத்திச் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள 'பராசக்தி'யின் வருகை முக்கியத்துவம் மிக்கது. அதையும் திமுகவுடன் இணைத்து தன் வாதத்தை முன் வைத்துள்ளார் மாலன்.
மாலனின் முகநூற் பதிவுக்கான இணைப்பு
இதற்கு எதிர்வினையாற்ற விரும்புவோருக்கு: இப்பதிவு மட்டுமே உங்கள் தர்க்கத்தை முன் வையுங்கள். இதனைத் தவிர்த்து திராவிடம், தெலுங்கரின் சூழ்ச்சி என்பன போன்று உங்கள் கருத்துகளைத் திணிப்பதற்காகக் குதர்க்கம் செய்வதைத் தவிருங்கள். ஆரோக்கியமாக இத்தர்க்கத்தை முன்னெடுங்கள்.
டிஜிட்டல் ஓவியம் கூகுள் நனோ பனானா வழியாக வநகி



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









