
தமிழர் கண்ட நகர்வில் தொடங்கி புலம் பெயர் வாழ்வின் புதிய தேவைகள் வரை எட்டுத் தலைப்புக்களில், நூற்றியொன்பது பக்ககங்களில் புலம் பெயர் தமிழர்களின் உணர்வுகளையும் , அவர்தம் வாழ்க்கையையும் மிகச்சிறப்பாக உணர்வுபூர்வமாக நூலாசிரியர் இந்நூலில் சித்திரித்துக் காட்டியுள்ளார் .
இந்நால் வெளிவந்து பல வருடங்கள் கடந்து இறுதியாக எதிர்பாராமல் என் கையில் கிடைத்தது .இத்தனை வருடங்கள் கடந்த பின்னர்தான் இந்நூலை வாசிக்க முடிந்தது என்ற ஆதங்கம் என் மனதில் எழுந்தாலும் , இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் நான் வாசிக்கும்போதும் புவியியல் கற்றேன்! அரசியல் கற்றேன் ! வரலாறு கற்றேன்!அறிவியல் கற்றேன் !விஞ்ஞானம் கற்றேன் ! இலக்கியம் கற்றேன்! அத்துடன் அருந்தமிழையும் அள்ளிப்பருகினேன்!
புலம் பெயர்ந்த வாழ்வின் அனுபவங்கள் குறித்து எழுத முற்பட்ட இந்நூலாசிரியர் புலம் பெயர் தமிழராக இருப்பது , இந்நூலை எழுதுவதற்கு முக்கிய தகுதியாக நான் கருதினாலும் அவர் தான் அனுபவித்த புலம் பெயர் வாழ்க்கை அனுபவங்களை அறிவினால் மட்டுமன்றி உணர்வு பூர்வமாகவும் உணர்ந்திருக்கின்றார் என்பதை இந்நூலிற்கு அணிந்துரை நல்கிய அமர ர் லெனின் மதிவாணன் மிக அழகாக குறிப்பிட்டிருந்தார் . இந்நூலில் உள்ள எட்டுக் கட்டுரைகளும் இவற்றை ஆதாரங்களுடனும்,மேற்கோள்களுடனும் எமக்குத் தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டும் வகையிலேயே அமைந்துள்ளன.
அகன்ற வான்வெளியில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியச் சுடர் மட்டுமே இருந்ததாகவும் பின்னர் அச்சுடரில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக வெடிப்புக்கள் ஏற்பட்டு பல துண்டங்களாக வீசப்பட்டு, பின்னர் கட்டித்து இறுதிக் கோளாக மாறி புவிக்கிரகமாக உருப்பெற்றது என்றும் இதுவே “பஞ்சியாக் கண்டம் “ என்று அழைக்கப்பட்டதாகவும், பின்னர் புவியோடு வெடிப்புக்குள்ளாகி ஏழு கண்டங்களாக பிளவுபட்டு இடப்பெயர்வுக்கு உள்ளாகியிருக்கின்றன. இதுவே புவியில் ஏற்பட்ட முதலாவது இடப்பெயர்வு என பிள்ளையார் சுழியிட்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.

எழுத்தாளர் கந்தையா அருந்தவராஜா
சூரியனில் ஏற்பட்ட முரண்பாடு ஒரு புலப்பெயர்வை உண்டாக்கி புவியை உருவாக்கியிருக்கின்றது.புவியில் உண்டான முரண்பாடுகள் வெடிப்புக்களாகி பல கண்டங்களை உருவாக்கியிருக்கின்றன. கண்டங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் கண்ட நகர்வுகள் ஊடாக தனித்தீவுகளை உருவாக்கியிருக்கின்றன. மொத்தத்தில் முரண்பாடுகளே புலப்பெயர்வுகளை உருவாக்கியுள்ளன என்பதை இயற்கையில் ஏற்பட்ட முரண்பாடுகளை ஆதாரமாகச் சுட்டிக்காட்டிய நூலாசிரியர் சமூகத்தில் ஏற்படுகின்ற புலப்பெயர்வுகளுக்கு முரண்பாடுகளும் , ஏற்றத்தாழ்வுகளுமே அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன என்பதை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார் .
அடுத்து “தாயக வாழ்வு “ என்ற கட்டுரையில் நாம் இழந்து நிற்கும் தாயக நினைவுகளை எம் கண்முன் கொண்டு வந்து, மீண்டும் எம்மை பிறக்க வைத்துள்ளார் .
அம்புலிகாட்டி விஞ்ஞானம் வளர்க்கும் தந்தை! நிலாக் காட்டிச் சோறூட்டும் தாய் ! நிலவு காட்டிக் கதை சொல்லும் தாத்தா பாட்டி ! நிலவு பார்த்து உரிமையுடன் சண்டையிடும் அண்ணன் தங்கை! குடும்ப வாழ்வு தரும் சுகம் இவைகள்! இழந்த இவ்வாழ்வை நாம் எங்கு போய்த் தேடுவோம்.?
ஆலடிப் பிள்ளையார் முதல் முச்சந்தி முருகன் வரை கோவிலில் நடந்தேறும் கோவில் திருவிழா! அழகழகாய் சேலை கட்டி , கொலுசுதனைக் காலில் மாட்டி, நெற்றியில் திலகமிட்டு,பூமாலை தலைசூடி, நாணமாய் பெண்கள் நடந்துவர நடந்தேறும் இளமையின் தொடக்க விழா! கடதாசிக் கண்ணாடி கலர் கலராய் ஊரைக்காட்ட,பையினில் கடலையும் வாயினில் விசிலுமாய் திரியும் சிறுவர்க்கு ஒரு பெருவிழா! மணலினில் கால்புதைத்து புழுதிப்படுக்கையை இருக்கைகளாக்கி, முதிர்ந்த விரல்களால் கச்சானை உடைத்து மச்சான் என்றழைக்கும் முதியர்வர்களுக்கு ஒரு மகிழ்ச்சி விழா!
எவ்வளவு அழகாக நாம் பார்த்து வளர்ந்த கிராமத்தின் திருவிழாவை எம் மனக்கண் முன் மீள் காட்சிப்படுத்தியிருக்கின்றார் ஆசிரியர் . தாயக வசந்தங்களை இழந்து வந்த எமக்கு , இவரின் தாயக வாழ்வு என்ற இரண்டாவது கட்டுரை எம் மனக்கண்ணில் அவ்வசந்தங்களை மீண்டும் தரிசிக்க வைத்தது!
முத்தமிட்ட அன்னையையும்,பாசம் காட்டி வளர்த்த தந்தையையும் குடியிருந்த வீட்டையும் ,பனைமரக் காட்டையும் , பறவைகள் கூட்டையும் ,மண் விளையாடி மகிழ்ந்த நாட்களையும் பிரிந்து ஜேர்மன் நாட்டில் அகதியாக தஞ்சம் புகுந்த ஒரு பெண்ணின் துயர் மிகுந்த பயணக்கதையை “கண்ணீர்ப் பயணம் “ என்ற அடுத்த கட்டுரையில் ஆசிரியர் எடுத்துச் சொல்லியுள்ளார் .
“செட்டை எனக்கில்லை..,பறப்பது விமானம் தான் ..ஆனாலும் பசுமையான தாயக நினைவுகளுடனும்,துயரம் மிகுந்த உணர்வுகளுடனும் காற்றிலும் வேகமாகப் பறக்கின்றேன் .”
கொழும்பில் இருந்து பதினான்கு மணிநேர பறப்பில் இருந்து ,மொஸ்கோ மண்ணை முத்தமிட்ட விமானத்தில் இருந்து இறங்கிய பெண், உக்ரைன் காட்டிற்குள் பட்ட அவலங்கள் நெஞ்சத்தை கனக்க வைத்து கண்ணீரை வடித்தெடுத்து விட்டது. கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போல அல்ல காட்டில் விட்டே சென்று விட்டார்கள் ஏஜென்சிக்கார்ர்கள் . இலை குழைகளால் மறைவிடம் அமைத்து, உண்ண உணவின்றி, குடிப்பதற்கு தண்ணீர் இன்றி உக்ரைன் காட்டிற்குள் இரண்டு இரவுப் பொழுதுகள், இரண்டு பகற் பொழுதுகள் இன்னல்களுடன் நிறைவேறியது.இரவுப் பொழுதொன்றில் வானத்தை அண்ணாந்து பார்த்தபோது நிலவு சொன்ன சேதி ஒன்றினால் ஓரளவு நெஞ்சம் நிம்மதியடைந்தது.”நான் பார்க்கும் இந்த நிலாவைத்தான் அங்கு அம்மாவும் முற்றத்தில் பார்த்துக் கொண்டிருப்பா..” அம்மாவைப் பார்ப்பது போல ஒரு திருப்தி அந்த நிலவிடம் ..!
இரண்டு நாட்கள் வனவாசம் கழித்து ஏஜென்சிக்கார்ர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட தொடரூந்து ஒன்றின் மூலமாக போலந்து நோக்கிய அடுத்த பயணம்.தொடரூந்தின் இறுதிப் பெட்டிக்குள் பயணம் செய்தாலும் , எமது பயணத்தின் இறுதிக் கட்டமும் இதுதான் என்பதில்லாமல் அடுத்து சிற்றூர்திப் பயணம் , நடைப் பயணம் என்று நடைப்பிணமாக பயணங்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தன.
போலந்தில் இருந்து ஜேர்மன் சென்றடைந்ததும் எமக்கு காத்திருந்தது சிறை வாசம் !
ஜேர்மனிய பொலிசாரால் மீண்டும் கைதுசெய்யப்பட்டு நான்கு நாட்கள் சிறைவாழ்க்கையின் பின் விடுவிக்கப்பட்டு, பின்னர் ஜேர்மனிய தெருக்களில் அலைந்து திரிந்து கடைசியில் ஏஜென்சிக்கார்ருடன் தொடர்பு கொண்டு, அவர்கள் மூலமாக ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டோம் .இரண்டொரு நாட்கள் இளைப்பாறிய பின்பு அடுத்து இன்னுமொரு நாட்டில் அகதி தஞ்சக் கோரிக்கைக்கான இன்னொரு பயணமும் ஆரம்பிக்கப்பட்டது. அகிலம் எல்லாம் அகதியாக அலைந்து திரிந்து அல்லல் மேல் அல்லலுற்று அகதி தஞ்சம் புகுந்து புலம் பெயர் தேசம் ஒன்றில் வாழும் ஒவ்வொருவரின் மனதோடும் இப்பெண்ணின் கண்ணீர்ப் பயணம் பேசியிருக்கும் .
கதையென்றாலும் , கட்டுரையென்றாலும் , கவிதையென்றாலும் சொல்வது எந்த வடிவமாக இருந்தாலும், சொல்ல வந்த விடயம் படிப்பவர்கள் மனதோடு பேசவேண்டும். இதுவே எழுத்தாளன் ஒருவனுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று கூறலாம் .இந்த வகையில் எழுத்தாளர் அருந்தவராஜாவின் “புலம் பெயரும் மண்வாசம் “ என்ற இந்நூலில் இவர் கையாண்ட எழுத்து நடை வாசகர்கள் மனதிற்கு மிக மிக நெருக்கமான உணர்வைக் கொண்டு வருவதோடு , நாமும் அவரோடு கைகோர்த்து பயணிக்கும்ஒரு பயணி என்கின்ற உள்ளுணர்வையும் எம்முள் உருவாக்கி விடுகின்றது!!
கொக்கரக்கோ……எனச் சேவல்கள் கூறும் தலைப்புச் செய்தி செவியில் மெல்ல நுழைய,தென்னங்கீற்று பனையில் மோதி, மாமரத் தோப்பின் வாசனை கிளறி,பலாமரச் சோலையில் பச்சைமுள் தபாற் பெட்டிகளில் காதல் கடிதங்களைக் காகங்கள் தேடும் அமைதியான ஒரு காலைப் பொழுதினில் ,கண்டி வீதியால் (A9 வீதி) எம்மையும் அழைத்துச் செல்கின்றார் ஆசிரியர். தென்மராட்சியில் பிறந்து, வளர்ந்து,பனைமரக் காட்டையும், பறவைகள் கூட்டையும் பிரிந்து புலம்பெயர் நாட்டில் வாழும் நானும் கூடவே பயணமானேன் ..!
கண்டியைக் கண்டு வர கனநாள் ஆசைப்பட்ட ஆசிரியர் கண்டி வீதியால், யாழ்ப்பாணம் நகர் நோக்கிய தன் சைக்கிள் பயணத்தில் மனித வண்டுகள் மொய்க்கும் சாவகச்சேரி சந்தைக்குள் முதலில் நுழைந்து விடுகின்றார் . சந்தைக்குள் நடக்கும் விற்பனைப் போட்டிகள் , வியாபாரச் சண்டைகளில் பேசப்படும் நற்றமிழ், கொடுந்தமிழ் கேட்டு நான் பழக்கப்பட்டும் , பயந்தும் இருக்கின்றேன் .மானிட முரண்பாடுகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் கற்றுத்தரும் இடமாக சந்தைகள் அமைந்துவிடுகின்றன என்ற தார்மீக கோட்பாட்டை மிக அழகாக சந்தையில் நடைபெறும் அன்றாட வியாபாரச் சண்டைகள் மூலமாக ஆசிரியர் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார் .
வியாபாரச்சண்டைகளைச் சாவகச்சேரிச் சந்தையில் கண்டு களித்தபின்னர்,A9 வீதியூடாக கைதடிப் பாலத்தினூடே பயணம் தொடர்கின்றது.வலிகாம ம் மக்களையும் ,தென்மராட்சி மக்களையும் இணைக்கும் உறவுப் பாலமாகத் திகழும் கைதடிப்பாலம் பற்றிய சுவாரசியமான தகவல்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இராக்காலங்களில் இந்தப் பாலத்தால் தனியாகப் பயணிப்பவர்கள் பேய்களைக் காண்பதாகவும்,பலர் இறந்திருப்பதாகவும், ஒரு பெண் தனியாக இரவுகளில் கைக்குழந்தையுடன் நடந்து திரிந்ததாகவும், வீதியால் நடந்து வருபவர்களிடம் குழந்தையைக் கொஞ்சம் பிடிக்கச்சொல்லி விட்டு மாயமாக மறந்து விடுவதாகவும் கதைகள் பல அறியப்பட்டுள்ளன.
உண்ட களை தொண்டனுக்கும் உண்டோ? கைதடிச் சந்தியில் ஆரியபவனில் உணவு அருந்திவிட்டு புதுத் தெம்புடன் நாவற்குழியூடாக , செம்மணி மயானம் கடந்து, கச்சேரி ,சுப்பிரமணிய பூங்கா , மணிக்கூட்டுக் கோபுரம் ,கோட்டை , அறிவுப்பசிக்கு விருந்தளிக்கும் நூலகம்,யாழ்ப்பாண பேருந்து நிலையம் இவற்றையெல்லாம் தரிசித்து, பருத்தித்துறை வீதியூடாக நல்லூரை நோக்கி மிதிவண்டிப் பயணம் தொடர்கின்றது .போர்த்துக்கேயரிடம் நல்லூர் இராசதானி வீழ்ச்சிபெற நல்லூர் கந்தசுவாமி கோவில் இடித்து அழிக்கப்பட்டது.யாழ்ப்பாண மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட பல கட்டிடங்கள் அழிவடைந்துவிட மிகுதியாகச் சங்கிலித் தோப்பு அரண்மனை வாயில் யமுனா ஏரி,மந்திரிமனை,சுரங்கப் பாதைகள் போன்ற வரலாற்றுத் தடங்களை இன்றும் பார்க்ககூடியதாக உள்ளது.கடந்து போன காலங்களை அறிந்து கொள்ளத் துடிக்கும் நிகழ்கால ஆர்வலர்தான் இந்நூலாசிரியர் என்பதை இவரின் “வீதி” என்ற கட்டுரையை வாசிக்கும் போது உணரமுடிந்தது .
புலம் பெயர்ந்த வாழ்வின் அனுபவங்கள் குறித்து தனது அறிவினால் மட்டுமன்று உணர்வினாலும் இந்நூலாசிரியர் உணர்ந்திருக்கின்றார் என்பதை இந்நூலில் உள்ள கட்டுரைகள் மட்டுமன்றி,இந்நூலின் பின்பக்க அட்டையில் இவர் எழுதிய பாடல் வரிகள் ஒவ்வொன்றுமே எமக்கு சான்று பகர்கின்றன.
“என் வீட்டு முற்றத்து
எரிந்த மரவேர் பிடுங்கி
தொலைந்து போன உறவுகளை
கண்ணீரில் தேடிடுவேன் ..”
புலம்பெயர்தல் என்பது என்பது நிலம் விட்டுச் செல்லும்போது உதிர்ந்துவிடும் கண்ணீரைப் போல அதன் ஈரம் காய்வதற்குள் அவர்களின் வலிகளும் வரலாறுகளும் மறந்துவிடக் கூடியதல்ல.ஒவ்வொரு இனத்தின் வாழ்க்கைப்பயணமும் சமகாலத்தில் எழுத்துருவாக்கம் பெறப்படவேண்டும் .இந்த வகையில் எழுத்தாளர் அருந்தவராஜாவின் இந்தப் பணி மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









