
தலைப்பிற்கேற்ப கடலும்,கடல் சார் நிலமும் - கடற்கரையுமாய் - மங்கிய மாலையில்,மஞ்சள் நிறப் பின்னணியில், மங்கலகரமான அட்டைப் படத்துடன் ரஞ்ஜனி சுப்ரமணியத்தின் 'நெய்தல் நடை' எனும் அவரின் முதற் படைப்பான இச் சிறுகதைத் தொகுப்புப் பற்றிய எனது பார்வையை மகிழ்வுடன் இங்கு பதிவு செய்ய விழைகின்றேன்.
ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதுகளில் ஆரம்பமான எம் ஈழத்துச் சிறுகதை வரலாறு தன் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் தடம் பதித்தவர்கள், ஐம்பது ஆண்டுகளிற்கு மேலாக எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். இது எப்படிச் சாத்தியமாயிற்று என்றால், தம் இருபது வயதுகளிலேயே இவர்கள் எழுத ஆரம்பித்தது தான்.
மருத்துவத் துறையில் முப்பத்து மூன்று ஆண்டு காலச் சேவை நிறைவின் பின்னும், காலந் தாழ்த்தியே எழுத ஆரம்பித்தவர் ரஞ்ஜனி அவர்கள். Better late than never. என்ன தான் தாமதித்திருந்தாலும், குறுகிய காலத்தில் சிறுகதை, திறனாய்வு,கட்டுரை எனப் பல தளங்களில் எழுதிப் பலரின் கவனத்தைத் தன்பால் ஈர்த்தவர் என்றால் அது வெறும் புகழ்ச்சியல்ல.
பன்னிரெண்டு சிறுகதைகளுடன், ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளி வந்துள்ளது இச் சிறுகதைத் தொகுப்பு. இச் சிறுகதைகள் அனைத்தும் 2022 முதல் 2025 வரையான காலப் பகுதியில் ஞானம், ஜீவநதி, பதிவுகள் இணையத்தளம், சிறுகதை மஞ்சரி, வெற்றிமணி போன்ற சஞ்சிகைகளில் வெளி வந்தவை. ஞானம் சஞ்சிகையில் 'அன்றொரு நாள்' எனும் தனது முதற் சிறுகதை மூலம் சிறுகதை இலக்கிய உலகில் கால் பதித்த ரஞ்ஜனி சுப்ரமணியம் அவர்களின் ஆறு சிறுகதைகள் ஞானம் சஞ்சிகையிலேயே வெளி வந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தன் பதின்ம வயதின் இறுதியில், தான் கற்பித்த ஊரைப் பார்க்க விளையும், அறுபது வயதுகளின் விளிம்பில் நிற்கும் பெண் பற்றியது இவரின் முதற் சிறுகதை 'அன்றொரு நாள்'. எதற்காக அங்கே செல்கிறாள் என்பது அந்தப் பெண்ணிற்கே தெரியவில்லை என்பதை 'கார்க் கண்ணாடியில் பதிந்த புகைமூட்டம் போல் தெளிவில்லாமல் இருந்தது' என்னும் வரி வெளிக் கொணர்கிறது. அந்த ஊர் பற்றிய விபரிப்பும்,வர்ணனைகளும், உளம் கிளர்ந்த உணர்வுகளும் கதையைப் பின் தள்ளிக் கோலோச்சுகின்றன.
ஒரு மீனவக் கிராமமும்,அதன் வீதிகளும்,குடிசைகளும்,அவ்வூரின் ஒரே ஒரு கட்டிடமான அழுக்கடைந்த சுவர்களுடனான பாடசாலையும் திரைப்படக் காட்சியாய் விரிந்து பரவசப்படுத்துகின்றன.
பீறிட்டெழும் மனவுணர்வுகளின் உரசல்களையும், எதிர்பார்ப்பையும் 'பச்சை நிறக் கனவுகளால் இதயம் நிறைந்திருந்தது' எனக் கூறும் வரியொன்றே போதும். இதை விட அதிகமாக, கவிதைத்தனமாக எதுவும் கூற முடியாது. அவர்கள் பேசும், வினைமுற்றெல்லாம், விரும்பியபடி வினையெச்சங்களாகும் மீனவக் கொச்சைத் தமிழும் ஆசிரியரின் பார்வையில் கவிதைத் தமிழாகிப் போனது. அவர்களின் ஊர்,பேச்சு போன்றவற்றில் மட்டும் ஆசிரியரின் கவனம் குவியவில்லை.
கழுத்து ஆழமான,இடுப்புத் தெரியும் படியான ஆடை அணியும் பெண்கள். தம் எடுப்பான முன்னழகோ,இடுப்பு மடிப்புகளோ வெளித்தெரிவது பற்றிய அக்கறையோ,கூச்சமோ இல்லாத அவர்களின் அப்பாவித்தனம், தலையில் கூடையுடன் கைகளை மாறி மாறி வீசி இடுப்பசைத்து நடக்கும் சமநிலை தவறாத அவர்களின் அலாதியான நடை என ஒவ்வொன்றையும் விட்டு வைக்காது ரசனையும், வர்ணனையுமாய் மடை திறந்தாற் போல் பெருக்கெடுக்கும் அழகு கதை முழுதும் விரவிக் கிடக்கின்றது.
அவ்வூர் எவ்வளவு தூரம் பின்தங்கிய நிலையில், போக்குவரத்து வசதிகளற்று இருந்த ஒரு கஷ்டப் பிரதேசம் என்பதை 'ஊருக்கு அத்தி பூத்தாற் போல் வரும் பஸ்' என்கின்ற வரி ஒன்றே போதும் எடுத்தியம்புவதற்கு.
இதில் அடுத்து வரும் ஆறு கதைகள் பெண்கள் பற்றியவை. ஒரு பெண்ணாக, ஆசிரியரின் அனுதாபமும்,சமூக நோக்கும்,மனிதாபிமானமும் இக் கதைகளினூடே விரவிக் கிடைப்பதைக் காண முடிகிறது.
'கண்ணான கண்ணே' எனும் கதை ஒரு வைத்தியரின் பார்வையிலே சொல்லப்படுகின்றது. பத்து வருடங்களாகத் தவமிருந்து பெற்ற குழந்தை, வரமாக அன்றிச் சாபமாக வந்தமைகிறது. மூளைவாத நோயுடன், இழுக்கப்பட்ட கழுத்தும்,அனிச்சையான கை, கால் அசைவும்,வாயில் வழியும் உமிழ்நீரும், கோணல் வாயுமாக. குழந்தையின்மையால் தன்னைத் தன் கணவன் ஒதுக்கி விடுவானோ என்று பயந்திருந்தவள், இன்று அக் குழந்தையையே காரணம் காட்டி கணவனால் ஒதுக்கப்படும் அவலம். வைத்தியசாலையில் கடைசி வரிசையில் பொறுமையுடன் வந்து காத்திருக்கும் அந்தப் பெண், ஒரு நாள் வரும் போது கையில் குழந்தையில்லை. நீண்ட நாள் சுமை இறக்கப்பட்டதா? ''ஒங்க கைய ஒரு தடவ மோந்துகிடவா'' என்று வைத்தியரிடம் விடை பெறும் அந்தக் கடைசி வரி கண்ணீரை வரவழைக்கிறது என்றால், அது ஆசிரியருக்குக் கிடைத்த வெற்றி
'நினைவுக் கனல்' எனும் கதை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றியது. ஒரு அறுபது வயதுப் பெண்ணும், ஒரு பதின்ம வயதுச் சிறுமியும் இக் கொடுமைக்கு உள்ளாகிறார்கள்.அப்பெண் துணிந்து வைத்தியசாலையில் அனுமதி பெற்று விசாரணைக்கு முகம் கொடுக்கிறாள். ஆனால் பாட்டியின் ஆதரவில் தன் இரு சகோதரர்களுடன் வாழும் சிறுமிக்கு அது வாய்க்கவில்லை. பாட்டியின் மகளும், மருமகனும் வெவ்வேறு துணைகளைத் தேடிப் பிரிந்து விட்ட நிலையில், பாட்டியின் வாய் பணத்தாலும், அச்சுறுத்தலாலும் அடைக்கப் படுகிறது. அன்றாடம் உழைத்தால் தான் உணவு என்கின்ற நிலையில் பாட்டியால் காவல்துறை,நீதித்துறை என்று அலைய முடியாது. அவரவர் நியாயம் அவரவர்க்கு.
இக்கதையில் வரும் வைத்தியர் இருவரின் நிலமைகளையும் புரிதலுடன் அணுகுகின்றார். அறுபது வயதுப் பெண்ணை ஊரார் தவறாகக் கதைக்கிறார்கள். அனுதாபம் காட்டவில்லை. நாம் இதுவரை பெண்ணுக்குப் பெண் தான் எதிரி என்று தான் கேட்டிருக்கிறோம்.ஆனால் ஆசிரியர் சட்டம் என்னவோ பெண்ணுக்குச் சார்பாகத் தானிருக்கிறது ஆனால் சமூகம்....என்று பாதியிலேயே வசனத்தைப் பூர்த்தியாக்காமலேயே விட்டு விடுகிறார். கதை இத்தோடு முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அதன் பின் வைத்தியர் தலையைச் சுவற்றில் மோதி பாலியல் வன்கொடுமையின் பின் இறந்து போன தன் தங்கையை நினைத்துக் கதறுவதாய் கதை தொடர்கிறது. ஒரே கதையில் மூன்று கதைகள் வருவது கதையின் கனதியைக் குறைத்து விடும் அபாயமுண்டு.அதுவும் மனித நேயமும்,புரிதலும் கொண்டு வடிவமைக்கப்பட்ட வைத்தியர் என்ற பாத்திரம் சிதறடிக்கப்படுவதாய்ப் படுகிறது. தவிர்த்திருக்கலாம்.
சிறுமைப்படுத்தப்படும் வேலைக்காரச் சிறுமி பற்றியது, 'மகேஸ்வரியை மனம் மறக்கவில்லை'. அவளுக்கு வழங்கப்படும் சாயம் கழன்ற எனாமல் குவளையும்,நெளிந்த அலுமினியத் தட்டும் அந்த வீட்டில் அவளின் நிலை என்ன என்பதை உணர்த்துகின்றன. அம்மை நோயுற்ற போது அவள் தனியறையில், தனித்திருந்து தேற்றுவாரின்றி அழுததும், அவள் பருவமடைந்த போது போதிய கவனிப்பின்மையும், அவள் வீட்டிற்குத் தெரியப்படுத்தாததும் உறைக்கின்றன. இடையே யாரோ அவளைத் தத்தெடுக்கவிருப்பதாகக் கூறி அழைத்துச் செல்லப்படும் அவள், பின்னாளில் அவ்வீட்டு அங்கத்தவர் ஒருவரால் பிரதேச செயலராக அடையாளம் காணப்படுகிறாள்.
இது சாத்தியமானதா என்கின்ற கேள்விக்கு இடமில்லாமல் சந்தோசமாக அம்முடிவை நாம் ஏற்பது அப் பாத்திரப் படைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம்
உயிரோடு இருக்கும் போது தன் தாயைக் கவனியாது விட்ட குற்ற உணர்வில் வாடும் பெண் பற்றியது 'ஆசை முகம் மறந்து'. உணவுப் பொதிகள் விநியோகிக்கும் இப் பெண், அதனை வருமானம் ஈட்டும் பிரியமான தொழிலாக மட்டும் பார்க்காமல் தன ரசனையை வெளிப்படுத்தும் மார்க்கமாகவும் பார்க்கிறாள். மன உளைச்சலில் வாடிய தாயார் உரிய முறையில் தனக்கு உணவளிக்காமையே சமையல் துறையில் தன் கவனம் திரும்பவும், தடம் பதிக்கவும் காரணம் என்பதையும், எந்நாளும் நோய் பற்றியே குறைப்பட்டுக் கொள்ளும் தாயாரை கவனியாது விட்டோமோ என்ற குற்ற உணர்வும் கதையில் வருவது ஏனைய கதைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. வித்தியாசமான கோணத்தில் சொல்லப்படும் கதை.
இது சங்கீதத்துடன் தொடர்பு பட்ட கதையாக இருக்குமோ என்னும் எண்ணத்தை 'பைரவி கதை சொன்னாள்' ஆரம்பத்தில் ஏற்படுத்துகின்றது. அதற்கேற்றாற் போல் அந்நிய ஸ்வரம்,ஆரோகணம்,அவரோகணம் என்னும் பதங்கள் வந்து போவதுடன், தலைப்பும் பைரவி எனும் இராகத்தின் பெயரைத் தன்னகத்தே தாங்கி நிற்கிறது. ஒரு பெண்ணுக்கும், இரு ஆண் நண்பர்களுக்கும் இடையேயான உரையாடலில் பெண்ணியம் ஊற்றெடுத்துப் பிரவாகிக்கின்றது. அதற்கு வலு சேர்ப்பதற்காய் சொல்லப்படும் தரவுகளும், தர்க்க ரீதியான கருத்துரைகளும் சிறுகதை எனும் வடிவிலிருந்து நழுவி கட்டுரைப் பக்கம் கதை சாய்வதாகத் தோற்றம் காட்டுகிறது.
இதுவரை அபலைகள்,பாலியல் கொடுமைக்கு உட்பட்டோர்,வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளோர், துஷ்பிரயோகங்களுக்கு ஆளானோர், அநாதரவானோர், ஏதிலிகள் எனப் பாதிக்கப்பட்ட பெண்களைச் சுற்றிச் சுழன்ற கதைகள் அதிலிருந்து விலகி ஒரு வசதியான பெண்ணால் மாணவப் பருவத்தில் 'பட்டிக்காட்டுக் கோமாளி' என்று உதாசீனப்படுத்தப்பட்ட ஏழை மாணவனின் ஒரு தலைக் காதல் பற்றியது. பல வருடங்களுக்குப் பிறகு வெளிநாடொன்றிலிருந்து அவளைச் சந்திக்க அவன் வரும் போது,படிப்பிலும், அந்தஸ்திலும் அவன் உயர்ந்திருக்க, பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவனுடனும், படிப்பேறாத இரு மகன்களுடனும் அவளின் நிலை வீழ்ச்சியுற்றிருந்தது.
நிலையில்லாத மனித வாழ்வை அதன் ஏற்ற, இறக்கங்களுடன்,இயல்பாய்ச் சொல்லும் போக்கு இக் கதையை ரசனைமிக்கதாய் உயர்த்தியுள்ளது.
எங்கே காணவில்லை என்று பார்த்தால், இந்நூலிலும் இடம் பிடித்துள்ளது முதுமை. அந்திம காலத்தில் தனித்திருக்க முடியாமல் மற்றவரின் உதவியுடனும், கைத்தடியுடனும் நடமாடும் முதியவர், 'இருக்கிறன்' கதையில் வருகிறார். அதிலும் அவருக்குப் பெருமை, தன்னை முதியோர் இல்லத்தில் விட்டு விடாமல் தன் சொந்த வீட்டிலேயே வேலையாளோடு தங்க வைத்த தன் மகனை நினைத்து. அவரை மாமா என்றும், தாத்தா என்றும் விரும்பியவாறு அழைக்கும் இளம் உறவு தன் நோய்க்குச் சரியாகச் சிகிச்சை செய்யாமல் இறந்து விடுவதில் கலங்குகிறார். தன் மனைவியின் பிரிவில் கூடக் கலங்காதவர் அவன் இறப்பில் கலங்குவது தான் கதை.
மருத்துவத் துறையில் ஏற்பட்ட அபரிமித வளர்ச்சியால் நீடிக்கும் ஆயுட்காலம், அதன் காரணமாக அதிகரிக்கும் முதியோர் தொகை,அத்தோடு கூடவே உயரும் முதியோர் இல்லங்கள் என முன்னெப்போதும் இல்லாத அளவில் பூதாகரமாய் உருவெடுத்திருக்கும் பல விடயங்கள், பல பிரச்சனைகட்கு வழிகோலுகின்றன.கூடவே வாழும் நெருங்கிய உறவுகளை விட, அன்பாய் உணர்வைத் தொடும் உறவை இக்கதையில் ஆசிரியர் வடிவமைத்திருக்கிறார்.
'வானவில் போலொரு வாலிபம்', தலைப்பே வர்ணஜாலமும், யெளவனமுமாய்த் துள்ளுகிறது. அறுபது வயதுகளில் வாழும் ஒரு பெண்ணிற்கும், ஒரு இளைஞனுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம். ஒப்பந்தமா?வேலைவாய்ப்பு ஒப்பந்தமா?இல்லை, வாடகை ஒப்பந்தமா? என்றால் , அப்படி ஒன்றுமில்லை. நான் முதலில் என் காதலைச் சொல்கிறேன். முடிந்ததும் நீங்கள் உங்கள் காதலைச் சொல்லுங்கள் என்கிறான் இளைஞன். அவ்வளவு தான். கொஞ்சம் உறுத்துகிறது. கதை சினிமாக் பாடல் வரிகளும்,ராப் பாடலுமாகக் குதூகலிக்கிறது. நவீன தலைமுறைக்குத் தண்ணீர் பட்டபாடான க்ரஷ்,டேட்டிங்,ப்ரேக் அப்,லிவிங் டுகெதர்,டிவோஸ் போன்ற அருஞ்சொற் பதங்கள் ஆங்காங்கே வந்து போகின்றன.
இத் தொகுதியிலுள்ள பன்னிரெண்டு கதைகளுள், மூன்று கதைகளில் இந்தக் க்றஷ் வருகிறது. காதல் வரவில்லை. இந்தக் க்றஷ் காதலை replace பண்ணுகிறதோ தெரியவில்லை. எனக்கு அது ப்ரேக் அப், இதுவும் ப்ரேக் அப் என்று சர்வசாதாரணமாகப் பட்டியலிடுபவர்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு விதத்தில் வரவேற்கத்தக்க விடயம் தான். இப்போதெல்லாம் காதல் தோல்வியென்று தண்டவாளத்தையும்,அலரி விதையையும் ஒருவரும் தேடுவதில்லை. உடையில் படிந்த தூசைத் தட்டுவது போல் தட்டி விட்டுச் சென்று விடுகிறார்கள்.தம் கல்விக்கும்.உயர்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு,மே மாத நடுவிலோர் நாள். புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். தென்னிலங்கை பாட்டும்,பைலாவும்,பாற்சோறுமாகத் திருவிழாக் கொண்டாடிக் கொண்டிருந்தது. அதே நேரம் உலகெங்கும் ஓரினம் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது. அவ்வாறான நாளில் ஓர் இளம் தமிழ்ப் பெண்ணின் கார் மோட்டர் சைக்கிள் உடன் விபத்தைச் சந்தித்தது. மோட்டர் சைக்கிளில் வந்தவன் சிங்கள இளைஞன். தவறும் அவன் மேல் தான். முன்னிருந்த மீன் கடைக்கார சிங்கள இளைஞன் அவனுக்குச் சார்பாக நின்றான். இந்தப் பெண் காலையில், காரில் பயணிக்கும் போது அவ் வீதியில் கடந்து செல்லும் பண்பான தோற்றம் கொண்ட சிங்கள மனிதர் தான் விபத்தைப் பார்த்ததாகவும்,தேவையேற்பட்டால் உதவுவதாகக் கூறுகிறார். பொலிஸ் நிலையத்தில் இனவாதம் தலை தூக்கி நின்றது. மறுநாள் உதவ முன் வந்த அந்த மனிதரின் வீடு தேடிச் சென்றார்கள். அங்கு சுவரில் இராணுவ உடையில் அவரின் படம் மாட்டப்பட்டிருந்தது. தான் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றதாகக் கூறும் அவர், தன் ஒரு சகோதரர் இராணுவத்தில் உயர் பதவி வகிப்பதாகவும், இன்னுமொரு சகோதரர் போரில் கொல்லப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கிறார். உதவுகிறார்.
மனிதம் இருக்கிறது. மனித நேயமும் இருக்கிறது.இன்னும் சாகவில்லை எனும் நம்பிக்கையையும்,நல்ல செய்தியையும் தரும் கதையிது.
இந் நூலின் கடைசிக் கதை, நூலின் தலைப்பைத் தாங்கி நிற்கும் 'நெய்தல் நடை'. களம் ஏனைய கதைகளிலிருந்து விடுபட்டு வெளிநாடொன்றில் நடப்பதாய் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு கூட்டு இராணுவப் பயிற்சிக் கூடம்,தனிச்சை இலத்திரனியல், தொழில் நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு எனப் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கதையில் தொக்கி நிற்பது 'க்றஷ்' தான்.
பலத்த இடி,மின்னல், காற்றுடன் ஆர்ப்பரித்த வானம் ஓரிரு துளிகளுடன் நிறுத்திக் கொண்டது.
'நான் சந்தியில் நிற்கிறேன்', வித்தியாசமான கதை. தலைப்பு தனித்து விடப்பட்ட ஒருவராக இருக்குமோ,இல்லை ஒதுக்கப்பட்ட ஒருவராக இருக்குமோ என்கிற ஐயப்பாட்டைத் தோற்றுவிக்கிறது. ஆனால் அப்படியல்ல. தெருவில் நிற்கும்,நடமாடும் மனிதர்களை அவதானிக்கும்,ரசிக்கும் ஒருவர் பற்றியது. குறிப்பாகச் சொல்வதென்றால், தெருவில் யாசிக்கும் மனிதர்கள் தான் இக்கதையில் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். வேறுபட்ட தந்திரோபாயங்களுடன் பிச்சையெடுப்போர் பற்றிய அவதானிப்பு கதையைச் சுவாரசியமாக்குகிறது. மேலதிக பணிவுடன் நடக்க முடிகின்ற காலை இழுத்து வருபவர்கள், கண் தெரியாதது போல் பாவ்லா காட்டுபவர்கள்,கையில் அழுக்கான, மூக்கால் சளி ஒழுகும் சொந்தக் குழந்தையையோ அல்லது இரவல் குழந்தையையோ தூக்கி வருபவர்கள், மாற்ற முடியாத நோய் இருப்பதாக 'லமினேட்' செய்யப்பட்ட அட்டைகளை கழுத்தில் தொங்க விட்டு வருபவர்கள் என இவர்கள் கதையினூடே வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறார்கள்.
இதில் ஒரு பெண்ணை முதுகில் சுமந்து, கூனல் முதுகுடன், 'சிக்னல்' லில் பிச்சையெடுப்பவனின் துயரக் கதை கேட்டு, இரண்டு ஆயிரம் ரூபாய்த் தாள்கள் கதை சொல்லியால் வழங்கப்படுகின்றன. அவன் கையிலுள்ள தழும்பு உறுத்துகிறது. அன்றிரவு திரையரங்கில் அருகிலிருந்தவர்களின் வியர்வை வாடையும்,இருமலும்,உரத்த சிரிப்பும்,இங்கிதமில்லாத சரசங்களும் எரிச்சல் மூட்டின. இடைவேளையில் வெளிச்சம் வர முன் அவசரமாக வெளியேறியவனின் கூனல் முதுகு எதையோ நினைவூட்ட, நிமிர்ந்த போது கைகளில் தழும்பு தெரிந்தது. திரும்பிப் பார்த்ததில் அடுத்த கதிரையில் ஐந்தாவது சந்தியில் பிச்சையெடுக்கும் பார்வையற்ற பெண். விருதுக்குரிய நடிகர்கள் திரையில் இல்லை,வெளியில் தான் என்று கதை முடிவுறுகிறது.
உடல் உழைப்பிற்கு அஞ்சி, அங்கவீனர்களாக நடித்து ஊரை ஏமாற்றும் இவர்கள் கூட சமூக விரோதிகள் தான். இயல்பு வாழ்வின் குழப்பவாதிகளும் கூட.
ஒரு வைத்தியராகப் பலருடன் பழகும், பல இடங்களில் பணியாற்றும் வாய்ப்புப் பெற்ற ரஞ்ஜனி அவர்களின் இயல்பான கதை சொல்லும் பாங்கும், கதைகளில் பரந்து விரியும் யதார்த்தமும் அவரின் பலம் எனலாம். தனது கருத்தை எங்கும் வலிந்து புகுத்த முயலவில்லை. மனிதர்களை அவர்களின் பலம்,பலவீனத்தோடு உள்ளது, உள்ளபடி சித்திரித்திருப்பது, நாம் எம் சூழலில் உள்ள மனிதர்களிடையே அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது. பல இடங்களில் மனிதநேயம் பேசுகிறது என்றால் அது அவரின் மருத்துவத்துறை தந்த கொடை என்று கொள்ளலாம்.
ஒரு பெண்ணாக,வைத்தியராக,சமூக ஆர்வலராக,மனித நேயம் மிக்கவராகத் தன் கதைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ரஞ்ஜனி. வரும் காலங்களிலும் இது போன்ற அல்லது இன்னும் உயர்வான பல படைப்புக்களை இலக்கியத்துறைக்கு இவர் தர வேண்டும். வாழ்த்துகள் ரஞ்ஜனி.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









