
அண்மையில் எழுநா மின்னிதலிழ் நண்பர் வேலாயுதம் இராமர் “மலையக வாய்மொழி பாடல்களில் கண்காணிகளின் இருப்பு! மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்கள் பேசும் வாழ்வியல்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் ஆதங்கத்தோடு மக்கள் கவிமணி சி.பி வேலுப்பிள்ளை குறித்து ஒரு குறிப்பை பின்வருமாறு கோடிட்டு காட்டியிருந்தார். அதாவது.
"மலையக மக்களின் வாழ்வியலை இலக்கியத்தின் ஊடாக உலகறியச் செய்த சீ.வி வேலுப்பிள்ளை கூட, பெரியகண்காணிகள் தமது மக்களுக்கு செய்த கொடுமைகளை எந்த இடத்திலும் விமர்சிக்கவோ, தொட்டு காட்டவோ செய்யவில்லை. இதற்கான காரணமாக அவர் ஒரு பெரிய கண்காணியின் வாரிசாக இருந்ததையும் அதனால் நேர்திருந்த கடப்பாடுகளையும் குறிப்பிடலாம்."
மேற்படி பந்தியில் வேலாயுதம் இராமர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் குறித்து எந்த தள்ளாட்டமும் இல்லாமல் பின்வரும் விடயங்களை பட்டியிலிடுகிறார்.
1. பெரிய கங்காணிகள் மலையக மக்களுக்கு செய்த கொடுமைகளை சீ.வி. வேலுப்பிள்ளை தொட்டுகாட்டவில்லை.
2. பெரிய கங்காணிகளை சீ.வி வேலுப்பிள்ளi விமர்சிக்கவில்லை.
3. இவ்வாறு விமர்சிக்கவோ, தொட்டுகாட்டவோ அவருக்கு முடியாது போனதுக்கு அவர் ஒரு பெரிய கங்காணியின் வாரிசாக இருந்ததே காரணம்.
4. சீ.வி வேலுப்பிள்ளை அவர்கள் பெரிய கங்காணிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததோடு அவர்களுக்கு கடமைப்பட்டவராகவும் இருந்தார்.
உண்மையில் வேலாயுதம் இராமர் அவர்களின் இந்த ஆதங்கள் எந்தளவிற்கு யதார்த்தமானது என்பதை கண்டறிய வேண்டியுள்ளது.
சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் பெரியங்கங்காணிகள் எமது மக்களுக்கு செய்த கொடுமைகளை என்றுமே தொட்டுகாட்டவில்லை என்ற வேலாயுதம் இராமர் அவர்களின் வாதத்தை – அவரின் கட்டுரையில் இருந்தே மறுதளிக்கலாம் - பெரிய கங்காணிகள் விடயத்தில் இவர் எடுத்தாண்டு இருக்கும் நாட்டார் பாடல்கள் எல்லாம் சி.வி வேலுப்பிள்ளை அவர்களின் தொகுப்பில் இருந்து பெறப்பட்டவையே. “பெரிய கங்காணி” என சி.வி தொகுத்திருக்கும் ஒத்த பாடலை வேலாயுதம் இராமர், பல பாடல்கள். போல், மேல் ஒன்று கீழ் ஒன்றுமாக வெட்டி ஒட்டி தன் கட்டுரையை நிரப்பி இருக்கின்றார். சி.வி வேலுப்பிள்ளை அவர்கள் 'மாமன் மகனே' எனும் தலைப்பில் தொகுத்த நூலில் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் முன்னுரையுடன் அது வந்துள்ளது. அதில் “பெரியங்கங்காணி” “கங்காணி” எனும் தலைப்பில் சி.வி வேலுப்பிள்ளையால் தொகுக்கப்பட்ட பாடல்களையே உசாத்துணை குறிப்புகள் எதுவுமின்றி வேலாயுதம் இராமர் எடுத்தாண்டு இருக்கின்றார்.
இந்த மாமன் மகனே என்ற நாட்டார் பாடல் தொகுப்பை விட “வீடற்றவன்” நாவலிலும் தேயிலை தோட்டத்திலே என்ற கவிதை தொகுப்பிலும் உழைக்கப் பிறந்தவர்கள் (Born to Labour), (தேயிலை தேசம் - மூ. சிவலிங்கம் - மொழிபெயர்ப்பு) மலையக அரசியல்; தலைவர்களும் தளபதிகளும் போன்ற நூல்களிலும் பெரியங்கங்காணிகளை பற்றிய சித்தரிப்புகளும் விமர்சனங்களும் வெளிவந்திருப்பதை ஆதாரங்களுடன் காட்டலாம். “
தேயிலை தேசம்” என மு. சிவலிங்கம் அவர்கள் மொழிப் பெயர்த்த உழைக்கப் பிறந்தவர்கள் நூலில் வருகின்ற பெரியங்கங்காணி பற்றி விவரிப்பையும் மேற்படி வேலாயுதம் இராமர் அவரின் கட்டுரையில் பெரிய கங்காணிகள் பற்றி குறிப்பினையும் ஒரு ஒப்புவமைக்காக எழுந்தாள்வது நயமிக்கது.
வேலாயுதம் இராமர் இவ்வாறு சித்தரிக்கிறார்:
“இந்த கண்காணிகள் தமிழ் நாட்டில் இருந்த ஜமின்தார்களுக்கு நிகரான முறையில் தங்களை உருவகித்துக் கொண்டார்கள். இவர்களுடைய தோற்றம் வெள்ளை கமிசு, கருப்பு கோட்டு, சரிகை தலைப்பாகை கோட்டின் இடது பக்க மேல் பொக்கட்டின் மேல் தொங்கும் வெள்ளைச் சங்களியுடன் கூடிய பொக்கட் உருலோசு ஆகியவற்றை கொண்டதாக இருந்தது. இவை கண்காணியின் வெளிப்புற உருவ அமைப்பாக கருதப்பட்டது. இவர்களுடைய அணிகலன்களாக காதில் கடுக்கண் (குண்டலம்) கழுத்தில் தங்க வலயம் (கெவுடு) கையில் பிரம்பு (கோன்ட) ஆகியன இருந்தன. இத்தகைய தோற்ற மற்றும் உருவ அமைப்புகளை உருவாக்கிக் கொண்ட கங்காணிகள் வெள்ளைக்கார துரைமார்களுக்கு நிகராக அடக்கு முறையாளர்களாகவும் ஆதிக்கம் நிறைந்தவர்களாகவும் தங்களை மாற்றிக் கொண்டனர். துரைமார்கள் கண்காணிகளை முழுமையாக நம்பி, தொழிலாளர்களை ஆள் சேர்ப்பது, அவர்களுக்கு வேலை வழங்குவது அவர்களை கண்காணிப்பதும் பராமரிப்பதும் ஆகிய அனைத்தையும் கண்காணிகளியே வைத்திருக்க அனுமதித்தனர். இதன் மூலம் பெருந்தோட்டத் துறையின் நாளாந்த நிர்வாகத்தில் கண்காணிகள் மிகுந்த அதிகாரம் பெற்றவர்களாக உருவெடுத்தனர்.”
தனது 'உழைக்கப் பிறந்தவர்கள்' சி..வி.வேலுப்பிள்ளை இல் பெரியங்கங்காணிகளின் அகத்தையும் புறத்தையும் பின்வருமாறு எடுத்தாளுகின்றார்:
“பெருந்தோட்டங்களில் அந்த காலத்திலேயே பெரியங்கங்காணி குடும்பங்கள் மூன்று பரம்பரைகளைக் கொண்டவர்கள் என்று இந்த பாமரப் பாடல் சேதி சொல்கிறது:
தோட்டத் தொழில் துறையில் காவிய நாயகனாகப் பெரியங்கங்காணிகள் தான் பிரதம பாத்திரத்தை வகித்து வந்துள்ளார்கள். பெரியங் கங்காணிதான் சகலமும்… பிரமனைப் போல படைத்தல், காத்தல், அழித்தல் எல்லாப் பொறுப்பும் கங்காணியிடமே இருந்தது. அவனின்றி ஓர் அணுவும் அந்த தோட்டத்தில் அசைந்தது கிடையாது! அவர்தான் தோட்டத்துரையின் வலது கையாக இருந்தார். தொழிலாளிகளுக்கு தலையாகவும்…. தலைக் கீரிடமாகவும், குற்றம் சுமத்துபவராகவும் வாதாடுகிறவறாகவும் நீதி வழங்குபவராகவும் சர்வமும் பெரியங்கங்காணியே என்ற அமைப்பு பாரம்பரியமாக வளர்ந்து வந்தது……
பெரியங்கங்காணிகளுக்கும் உபகங்காணிகளும் இருந்தார்கள். இவர்கள் பண்ணையில் மேயும் நோஞ்சான் குதிரைகளை போலவும், பந்தயத்தில் ஜெயிக்கும் பலசாளி குதிரைகளாகவும் இருந்தார்கள் இவர்கள் ஒரு போதும் ஒரு வர்க்கத்தைக் சார்ந்தவர்களாக இருக்கவில்லை. ஒரு சாதியை சார்ந்தவர்களாகவே இருந்தார்கள்.! பெரியங்கங்காணி என்பவர் ஆயிரத்துக்கு அதிகமான தொழிலாளர்களுக்கு தலைவனாக இருப்பவர்.
வீட்டுக்குறிய அத்தனை உடைமைப் பொருட்களோடும் தளபாடங்களோடும் சகல வசதிகளும் கொண்ட வீட்டில் வசித்தார். அவரது வீட்டை வட அமெரிக்கர் வசிக்கும் சொகுசு கூடாரம் எனவும் கூறுவார்கள்! அவரது வீட்டுக்குள் சபா மண்டம்…. காரியாலயம்…. பூஜை ஸ்தலம்…. படுக்கையறைகள், சமையலறைகள், குளியறைகள், பெண்கள் தங்கும் 'அந்தபுரம்' என்றெல்லாம் வசதிகள் அமைந்திருந்தன. அவரது சபா மண்டபத்தில் வெள்ளை தலைப்பாகை கணக்குபிள்ளைகளும் கருப்புக் கோட்டு கங்காணிமார்களும்….. தொங்கு மீசைக் கிழடுகளும் குவிந்திருந்தனர்.
கங்காணியார் அவர்களையெல்லாம் “யாமிருக்க பயமேன்” என்பது போல் கையசைத்து வரவேற்பார். அரச சபையை போல கவிஞர்களும் பாடகர்களும் ஆட்டக்காரர்களும் செப்படி வித்தைகாரர்களும் தங்கள் கைவரிசைகளை காட்டி கங்காணியை மகிழ்வித்து கௌரவித்தார்கள்….” (தேயிலை தேசம் மு.சிவலிங்கம் மொழிபெயர்ப்பு ப. 109 – 110)
ஒரு காலகட்டத்து மலையகத்தில் பெரியங்கங்காணிகளின் அதிகரமும் - அவர்கள் அனுபவித்து தீர்த்த அகவாழ்வின் சௌந்தரியங்களும், சேவகத்துக்கு இருந்த சிப்பந்திகளையும் தொழிலாளர் மீது எல்லாமாக இருந்த இந்த பெரியங்கங்காணிகளின் பாத்திரத்தை இதைவிட நுணுக்கமாக மலையக எழுத்துள் கொண்டுவந்து காட்டியவர்கள் எவருமில்லை என்பது யதார்த்தம்.
வேலாயுதம் இராமர் உருவத்தை ஒரு சினிமா பாணியில் பல பிராச்சித்தங்களோடு கங்காணிகளை வர்ணிக்க வேலுப்பிள்ளை அவர்களோ தான் கண்டு உணர்ந்த மட்டுமெல்லாது தான் பார்தது தரிசித்த பெரியங்கங்காணிகளின் வாழ்வோடு பிணைத்து புணைந்து போகிறார். தானே ஒரு சாட்சியாய்……
தொழிலாளர்கள் - பெரியங்கங்காணிகளுக்கு தங்க முட்டை ஈடும் வாத்துக்கள் தாம் அதிகாரத்தையும், பென்சுகாசு வட்டிக்கு வட்டியாய் அள்ளிகுவித்து தம்மை கொழுத்து செழிக்க வைத்தவர்கள் அவர்களும்! எனவே ஒரு தொழிலாளியை தானும் அவர்கள் இழப்பதற்கு துணிந்தார்கள் இல்லை. ஆள்கட்டி வந்து அவர்களை கூலிகளாய் படைத்ததும் தொடர் தேர்ச்சியான வருவாய்காக பெரியங்கங்காணிகளுக்கு இருந்தது.
இது காத்தல் விழாவாக - கடனாக - சடங்காக நீளும். மறு புறம் கனகொடுரமான தண்டனைகளோடும் காத்தல் நடந்தேறி வந்திருக்கின்றது. தோட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தை வேலுப்பிள்ளை அவர்கள் பின்வருமாறு சித்தரிக்கிறார்:
"பழனியாண்டி தொழிற்சாலையில் ஒரு பிடி தூளை திருடிவிட்டான். இந்த சங்கதி துரை வரை எட்டிவிட்டது. கங்காணி பழனியாண்டியை ஆப்பிசில் கொண்டுவந்து நிறுத்தினார். தோட்டத்து துரை சிவப்பேறிய முகத்தோடு உட்கார்ந்திருந்தார். பழனியாண்டி மரத்தடியில் நடுங்கிக் கொண்டு நின்றான். அவனுக்கு இன்று கெட்டநாள்….. “இன்னையோட பழனியாண்டி சரி தொரை பத்துச்Pட்டு குருத்துருவாடு” என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். திடிரெண்டு வெடிச்சதம் கேட்டது துரையையும் நாற்காலியிலிருந்து தூக்கிவாரிப்போட்டது. துரை அதிர்ச்சி அடைந்தார்.
'நீ பன்டீ, நீ ஊத்தரப்பண்டி! எப்படி ஒனக்கு நம்ம தூளை தொடுறதுக்கு துணிச்சல் வந்துச்சு?' பெரியங்கங்காணி கைத்தடியால் ஓங்கி ஒங்கி அடித்தார். 'நல்லா வாங்கிக்கோ திருட்டு நாயே
நீண்ட கைத்தடி மேலும் கீழும் பல தடவை சுழன்றது. பழனியாண்டியின் தலை பல தடவை தப்பித் தப்பிப் பிழைத்தது. ஐயோ சாமி…. ஐயோ சாமி….' என்று கூக்குரலிட்டுப் பழணியாண்டி அங்குமிங்கும் பாய்தான். " (தேயிலை தேசம் மு.சிவலிங்கம் மொழிபெயர்ப்பு ப. 114 - 115)
அற்ப சம்பவம் ஒன்றுக்கு எத்தனை கொடூர தண்டை. பெரியங்கங்காணிகளை எவரும் கேள்வி கேட்பதற்கான சூழல் அன்று இருக்கவில்லை. பெரியங்கங்காணிகளின் இதே போன்ற கொடுமை முகத்தை “வீடற்றவன்” நாவலிலும் கோடிட்டு இருப்பார் வேலுப்பிள்ளை அங்கு தொழிலாளிக்கு தோல் கொடுக்க தொழில் சங்கம் இருக்கும் - ஆனால் 1920களில் 1930 களில் அதற்கான எந்த மூகாந்தரமும் இருக்கவில்லை. வெந்து வெதும்பி முன்ஜென்மபாவம் என ஆற்றிக் கொள்வதை தவிர தொழிலாளிக்கு வேறுவழியில்லை. பழனியாண்டி அங்கும் இங்கும் பாய்ந்ததுடன் வேலுப்பிள்ளை நிறுத்தவில்லை – கங்காணிகளின் சாமார்த்தியத்தை இறுதியில் அவில்க்கின்றர்.
துரை திருப்தி அடைந்தார். இருந்தாலும் அடிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பழனியாண்டியை விட்டு விட்டு உள்ளே வரும்படி கங்காணியை கூப்பிட்டார். கங்காணி பெரு மூச்சோடு ஆபிச்சுகுள் நுழைந்தார். தொரை மகன் தோட்டத்துல எனக்கு இப்படியொரு களவாணிப் பயல் வேண்டியது இல்லை சார். இது போதும் . கிளாக அவனைப் போகச் சொல்லு."
பழனியாண்டிக்கு அடி விழுந்த சங்கதி ஒரு மாதத்துக்கு மேலாகச் சவரம் பண்ணும் பாபர் மடுவத்தில் கதைப்பரப்பப்பட்டது. இதுவும் ஒரு வகை ஆபத்தான சவரம் தான்! பி.பி.சி வானொலிக்கு முன்னமே இந்த மாதிரி வானொலி ஒலிப்பரப்பைக் கண்டுப்பிடித்த கங்காணி பெருமைக் குறியவர்தான். (தேயிலை தேசம் மு.சிவலிங்கம் மொழிபெயர்ப்பு ப. 115)
இந்த காட்சி என்னவோ மிகச் சிரியதுதான். தூளை திருடிய பழனியாண்டி – துரைக்கு முந்திக்கொண்டு தண்டனை வழங்கும் கங்காணி – துரையின் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் திரட்டிக் கொள்ளும் கங்காணி என்பதோடு மட்டும் நிற்காமல் மேலும் இனி, ஒரு தொழிலாளியும் தூள் திருட எந்தனிக்க கூடாது என்ற பிரச்சாரம் - இதையெல்லாம் மேவி தங்க முட்டை என கங்காணிகளின் நரித்தன சமார்த்தியங்கள் என விரிகிறது இந்த சிறிய காட்சி. மொத்ததில் கங்காணிகளின் மறைந்திருக்கும் தந்திரங்களை மிக நுண்மையாக காட்டிச் செல்லும் வேலுப்பிள்ளை அவர்களை, பெரியங்கங்காணிகளின் கொடுமைகளை விமரிச்கவோ தொட்டுகாட்டவோ இல்லை என இராமர் வாதிப்பது புதிதாக இருக்கின்றது. இது எந்தளவிற்கு இலக்கிய அறம் சார்ந்தது என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாதது
இது போலவே. “மலையக அரசியல்; தலைவர்களும் தளபதிகளும்” என்ற நூலிலும் சி.வி வேலுப்பிள்ளை அவர்கள் பல இடங்களில் பெரியங்கங்காணிகள் பற்றி எடுத்துக்காட்டுகிறார்.
1930 களில் இருந்து 1959 வரையான மலையக அரசியலின் சாரத்தையும் அதன் வெட்டுமுகத்தையும் எடுத்துக் காட்டும் இந்த நூல் பெரியங்கங்காணி முறையில் ஏற்பட்ட மாற்றங்களையும் தொட்டுக்காட்டுகிறது. கங்காணிகளின் கோட்டைகள் சரிய தொடங்கி தொழிலாளர்கள் மீது அவர்கள் கொண்டிருந்து அதிகார வரம்புகள் வரையறுக்கபட்டு “பென்சுகாசு” முறையை இழந்து கங்காணி பிரட்டில் இருந்து தொரை பிரட்டுக்கு இழுத்து சென்ற போது பெரியங்கங்காணிகள் தங்களை தக்கவைத்துக்கொள்ள எடுத்த எத்தனங்களை இந் நூலில் பல கட்டுரைகளில் வேலுப்பிள்ளை அவர்கள் பேசிப் போகிறார்.
1920களுக்கு பின் இலங்கை தொழிலாளர் சேமநல சங்கம் - இலங்கை இந்திய தொழிலாளர்கள் சம்மேளனம் - இலங்கை இந்திய காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அமைப்பான லங்கா சமசமாஜ கட்சி, கொமினிஸ்ட் கட்சி என்பவற்றில் அங்கம் வகித்த தலைவர்களினதும் தளபதிகளினதும் அரசியல் ஈடுபாட்டை விமரசனத்தோடு தனது பார்வையில் எடுத்து வைக்கின்றார்.
இந்த அமைப்புகள் தோட்டங்களில் உள் நுழைந்த போது தொழிலாளர்கள் மீது பெரியங்கங்காணிகளுக்கு இருந்த பிடி தளர்கின்றது. இருந்தும் - ஒரு மூன்று தலைமுறைக்கு மேல் இம்மக்கள் மீது தனி ஆதிக்கம் செழுத்தி வந்த பெறியங்கனிகள் தன் அதிகாரத்தை கைவிட தயாராக இல்லை. இரண்டு வழிகளை அவர்கள் மேற்கொள்கின்றர்.
ஒன்று புதிதாய் தோன்றிய தொழிற்சங்கங்களை உபயோகிப்பதும், அதனை கைப்பற்றுவதும். இரண்டாவது தாமே ஒரு குழுவாய் சேர்ந்து இயங்குவது.
மடக்குபரை தோட்டத்து பெரியங்காணியின் வாரிசாக இருந்த சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் இந்த பெரியங்கங்காணிகளுக்கான அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாது தன் குடும்பத்தையும் தன் பாட்டனையும் எதிர்த்து கொண்டு மக்கள் அரசியலுக்குள் இறங்குகின்றார். மக்களின் அரசியலில் எந்த சமரசங்களுக்கும் ஆட்படாது தன் வாழ்வையும் எழுத்தையும் கைலாசபதி குறிப்பிடுவது போல் எளிமையாகவும் மாயவகைப்பட்டு தன்னை மயக்கும் எழுத்தை முன்வைத்த பெருமைக்குறியவர்.
சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் காலத்தில் இருந்தவர்களும் அவருக்கு முன்பு இருந்தவர்களும் எவ்வாறு சமரசங்களுக்கு ஆட்பட்டார்கள் என்பதை அவரின் நூலில் அறியலாம்.
பெரி.சுந்தரம் போன்றவர்கள் கட்டி வளர்த்த அமைப்புகளுக்கு உதவிகளையும் நன்கொடைகளையும் வழங்கி இந்த பெரியங்கங்காணி எவ்வாறு உள் நூழைகிறார்கள் என்பதும் இவ் உள்நுழைவை தமக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தினார்கள் என்பதையும் மலையக அரசியல் தலைவர்களும் தளபதிகளும் என்ற நூலில் ஏ.எஸ்.ஜோன் அவர்கள் பற்றிய கட்டுரையில் காணலாம்.
“வெல்லிங்டன் பிரபு வைஸ்ராய் பதவியேற்றதும் இலங்கை அரசாங்க பிரதிநிதிகளையும் தோட்ட துரைமார் சங்க பிரதிநிதிகளையும் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது” துண்டுமுறையை அடியோடு ஒழித்துக்கட்டுவதற்காகக் கமிட்டி சிம்லாவில் கூடியது தலைமைக் கங்காணி முறை நீடிக்க வேண்டுமென திரு. பெரிசுந்தமும். திரு. நடேச ஐயரும் விரும்பினார்கள் அதற்கு நான் (யுளு ஜோன்) ஒப்பக் கொண்டேன் எனினும் அவர்களுடைய கருத்தை பூரணமாக ஏற்றுக்கொள்ளவில்லை.
திரு. சிம்லாவிலுள்ள இக்கமிட்டி, பேச்சுவார்த்தைகளை நடந்த வருமாறு, என்னையும் (யுளு ஜோன்) லாரி முத்துக்கிருஷ்ணாவையும் அழைத்தது. திரு லாரி முத்துக்கிருஷ்ணா தமது கட்சியை வெகு திறமையாக எடுத்துரைத்தார் என்பதை கூற நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளின் பயனாகவே தோட்டத் தொழிலாளர்கள் விடுதலை பெற்றனர். திரு நடசே ஐயரும் திரு. பெரிசுந்தரமும் தலைமை கங்காணிமாரை காப்பாற்றினார்கள். (மலையக அரசியல்; தலைவர்களும் தளபதிகளும ப. 87 – 88)
எ.எஸ். ஜோன் அவர்களின் அரசியல் பணியை விபரிக்கும் இவ் கட்டுரையில் பெரிசுந்தரம் நடசேஐயர் ஆகியோர் கங்காணிகளின் நலனுக்கு ஆட்பட்டது ஏன்? இதன் பின்னணி என்ன என்பதை இன்னொரு கட்டுரையில் கோடிடுகிறார் சி.வி வேலுப்பிள்ளை.
“மலையக நாட்டு மக்களின் பிதா” என மனமுவந்து அழைக்கப்பட்ட பெரிசுந்தரம் அவர்களைப் பற்றிய கட்டுரையில் பேர் விரும்பாத பரோபகாரீகள் என உப தலைப்பிட்டு.
கண்டியிலே வயோதிபர் விடுதியொன்றை அமைக்கும் வேலையில் நிதி உதவிக் கட்சிகள் மூலமும் தலைமைக் கங்காணிகள் சங்க கூட்டங்கள் மூலமும் பணம் திரட்டினார். இதில் அப்பொழுது இந்திய அரசாங்கத்தின் ஏஜன்டாக இருந்த காலஞ்சென்ற திரு. ரி.எல்.ஆர். சந்திரன் அவருடன் ஒத்துழைத்தார்.
ஹட்டனில் இருக்கும் விநாயகத் தியேட்டரில் நடைபெற்ற இத்தகைய கூட்டமொன்றில், நன்கொடையாளர்களின் பெயர்களை படிக்குமாறு, அங்கு குழுமியிருந்தவர்கள் அவரைக் கேட்டனர். அவர் வாசித்துக் கொண்டிருந்த பொழுது தலைப்பாகை அணிந்திருந்த வயோதிபர் ஒருவர் நெருங்கி திரு. பெரிசுந்தரத்தை வெளியில் வரும்படி அழைத்தார் உடனே திரு. பெரிசுந்தரம் வெளியில் சென்று, சிறிது நேரத்துக்குப்பின் திரும்பி வந்து, மீண்டும் பெயர்களை வாசிக்கத் தொடங்கினார். ஒரு முக்கியமான இடத்தில் நிறுத்தி அவர் கூறினார். “சிறிய முட்டை ஒன்றை இடும் நாட்டுக்கோழி பெரிய சத்தம் போடும், ஆனால் சீமைக்கோழி அப்படியல்ல, பெரிய முட்டை யொன்றை இட்டுவிட்டுச் சந்தடி செய்யாமல் இருக்கும்.
இந்த உவமை எதைக் குறித்தது என்று எவருக்கும் தெரியவில்லை. பின்னர் பெரிசுந்தரம் விளக்கிக் கூறினார். “இப்போது வந்த பெரியார் றம்பொடையைச் சேர்ந்த ஸ்ரீ கறுப்பையா (திரு தொண்டமானின் தந்தை) அவர் மிக பெரிய நன்கொடை வழங்கியுள்ளார். ஆனால் நன்கொடையாளர் ஜாபிதாவில் தமது பெயர் சேர்க்கப்படுவதை அவர் விரும்பவில்லை” (மலையக அரசியல்; தலைவர்களும் தளபதிகளும ப. 55 – 56)
இந்த பகுதி ஒரு விடயத்தை அழுத்திக் கூறுகின்றது. பெரியங்கங்காணிகள் தொழிலாளர்களிடம் மாத்திரமல்லாமல் அவர்களின் நலன் சார்ந்த சில அமைப்புகளையும் ஊடுருவி அதனையும் தம் நலன் சார்ந்த அமைப்பாக மாற்றிக் கொள்ளவே முயற்சித்து வந்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிண்றது. பெரிசுந்தரம் போன்றவர்கள் பெரியங்கங்காணிகளுக்கு கடப்பாடு உடையவர்களாக இருக்க வேண்டிய நிர்பந்தங்களை சாமர்த்தியமாக பெரிய கங்காணிகள் ஏற்படுத்துகின்றவர்களாக இருந்து வந்துள்ளனர்.
தொழிலாளர்களுக்கு நன்மைகள் விளையும் போதெல்லாம் பெரியங்கங்காணிகள் அவர்களுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளனர். மலையக பெரியங்கங்காணிகளின் அமைப்பின் தலைவராக இருந்த குஞ்சுப் பொரி சண்முகம் பற்றிய கட்டுரையில் வேலுப்பிள்ளை அவர்கள் பின்வருமாறு எழுதுகிறார்:
தலைமை கங்காணி அவர்களே தொழிலாளர்களுக்கு செலவுக்கு பணம் கொடுத்தார்! வசிப்பதற்கு இடவசதி ஏற்படுத்தினார்: அவர்களின் தகராறுகளைத் தீர்த்தார்: அவர்களின் திருமண வைபவங்களிலும், செத்தவீட்டுச் சடங்குகளிலும் முன்நின்று எல்லாவற்றையும் நடத்தினார்: அவர்களுக்கு வேண்டிய உணவு பொருள்களையும் துணிகளையும் விற்றார். இதற்கு பதிலாக தலைமைக் கங்காணிமார் “பென்சுக்காசு” எனப்படுமும் சம்பளத்தைப் பெற்றனர். அவர்களே தொழிலாளர்களின் சம்பளத்தையும் சேகரித்தனர்.
இம்முறையிலிருந்த அநீதிகள் சர். அருணாசலம், திரு. ஜோர்ஜ் திரு. ஏ.எஸ் ஜோன் திரு. லாரி முத்துகிருஸ்ணா போற்றவர்களிடமிருந்து கண்டனங்களை எழுப்பின. இம்முறை முழுவதையும் ஒழிந்து விடுவதென இந்திய அரசாங்கமும் இலங்கை அசரங்க்மும் முடிவு செய்தன. தலைமை கங்காணிமார் தோட்டங்களில் இருந்து வெளியேற்றப்படும் ஆபத்திற்கு உள்ளானார்கள். அப்பொழுது தான் தோட்டப்பகுதிகளின் “திவான்கள்” திரு. சண்முகத்தின் தலைமையில் கிளர்ந்தெழுந்தனர்.
தலைமைக் கங்காணிமார் பெரும் குடும்பங்களின் உண்மையான தலைவர்களாயிருக்கின்றனர். ஒரு பெரிய கூட்டு குடும்பத்தின் தந்தை மாறாய் இருக்கின்றனார்,? ஆதலால் அவகளை விலக்க முடியாது” என்று சண்முகம் வாதாடினார்.
“எம்மை விலக்கினாலும் எமது மக்களின் குடும்பத் தகராறுகளிலும் சமூக – சமய விவகாரங்களிலும் தலையிட வெளியார்களை அனுமதிக்க மாட்டோம். (மலையக அரசியல்; தலைவர்களும் தளபதிகளும ப. 78 – 78)
பெரியங்கங்காணிகளின் நிலைப்பாட்டை குஞ்சுப் பொரி சண்முகம் தெளிவாக எழுத்துரைக்கின்றார் என்பதை வேலுப்பிள்ளை சுட்டிகாட்டுகின்றார இவற்றை எல்லாம் பார்க்கின்ற பார்கின்ற போது - ராமர் குறிப்பிடுவது போல, சி.வி வேலுப்பிள்ளை அவர்கள் பெரியங்கங்காணிகளின் கட்டுபாட்டில் இருந்ததோடு, அவர்களுக்கு கடமைப்பட்டவராகவும் இருந்தார் என கூருவாது. ஆச்சரியமாக உள்ளது. மேலும் கீழ்வரும் பகுதியில், சி.வி வேலுப்பிள்ளை விவரிக்;கின்ற பகுதி, பெரியகங்காணிகளுக்கு கடப்பாடு உடையவர்களாக யார் இருந்தார்கள் என்பதை விபாரிக்கின்றது:
திரு. சண்முகம் மேற்கொண்ட இந்த நிலை திரு. ஏ.எஸ். ஜோன், திரு. லாறி முத்துகிருஷ்ணா திரு. பெரிசுந்தரம், திரு நடேச ஐயர் ஆகியோரின் நம்பிக்கையும் ஆதரவையும் பெற்றது. அச்சமயத்தில் திரு பெரி சுந்தரமும் திரு. நடேச ஐயரும் ஒப்பந்த கூலி முறை ஒழிய வேண்டும் என்று விரும்பிய போதிலும் தலைமைக் கங்காணி முறையை ஆதரித்தார்கள். (மலையக அரசியல்; தலைவர்களும் தளபதிகளும ப. 79)
இவற்றையேல்லாம் தொகுத்து பார்க்கும் போது சி.வி வேலுப்பிள்ளை, பெரிய கங்காணிகளுக்கு ஆதரவாக குரல்தந்திருந்தார் இல்லை என்பது தெளிவாகின்றது. தொழிலாளர்களுக்கு சார்பாகவே அவரது எழுத்தின் தர்மம் நிற்கின்றது, அவர் ஒரு பெரிய கங்காணியின் வாரிசாக இருந்த போதும் “சமரசங்களுக்கு ஆட்படியாது மனுக்குலச் செழுமைகளை இலக்கியங்களின் உண்மை பாரம்பரியங்களை முன்னெடுப்பது பாற்பட்டதாகும்” என ஜோதிக்குமார் அவர்கள் குறிப்பிடுவது மிக சரியானதே. (ப – 88 அசோகமித்தரனில் 18வது அட்சக்கோடு : ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்)
இவை அனைத்தும், பெரிய கங்காணிகளை வேலுப்பிள்ளை விமர்சிக்கவில்லை கொடுமைகளை தொட்டுக்காட்டினாரில்லை என முன்வைக்கப்படும் கூற்றுகளை நிராகரிப்பதாக உள்ளது. கைலாசபதி முதலானோர் இவ்வகை பங்களிப்புகளை கண்டுணராமல் வேலுப்பிள்ளை போன்றவர்ளை போற்றி இருக்க நியாயம் இல்லை. கலை நுணுக்க அற்புதமான திறமைகளையும், சமூகத்தின் ஒரு காலகட்டத்தின் தானே சாட்சியாக நின்று, உள்வாங்கிய, சமூக விதிகள் பொருத்த படைப்புகளை படைத்ததற்கூடுக மலையக இலக்கிய திறனை, உண்மையில் கூறுவோமானால் உழைக்கும் மக்களுக்குறிய இலக்கியங்களை அல்லது அவர்களுக்குறிய கலைப்படைப்புக்கான அடித்தளத்தை மலையகத்தில் அழுத்தமாக இட்டவராக நாம் வேலு மலையக அரசியல்; தலைவர்களும் தளபதிகளுமப்பிள்ளையின் பங்களிப்பை நோக்கக்கூடியவர்களாக இருக்கின்றோம்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









