நூல் அறிமுகம்: `பறவைகள்’ நூல் அறிமுகம் - கே.எஸ்.சுதாகர் -
மாலினி அரவிந்தன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். கணக்காளராகவும், அதே நேரத்தில் பீல் பிராந்தியக் கல்விச் சபையில் சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ்ப் பகுதி ஆசிரியராகவும் கடமை புரிகின்றார். பல இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ள இவரின் படைப்புகள் கனடா உதயன், தமிழர் தகவல், தினக்குரல் பத்திரிகை, ஞானம் / இனியநந்தவனம் / வெற்றிமணி சஞ்சிகைகளில் வந்திருக்கின்றன.
பறவைகள்’ என்ற இந்தத் தொகுப்பில் 10 சிறுகதைகள், 2 சிறுவர் கதைகள், 8 கட்டுரைகள் அடங்கியுள்ளன. பத்து சிறுகதைகளில், சில குறுங்கதைகள் என்ற வகைமைக்குள் அடக்கப்படக் கூடியன. புலம்பெயர் நாடுகளில் வெவ்வேறு இனம், மதம், கலாசாரம் கொண்ட பின்னணியில் வாழும் இருவர், ஒருவருக்கொருவர் துணை தேடும்போது ஏற்படும் சிக்கல் தன்மையை பறவைகள் சிறுகதை பிரதிபலிக்கின்றது. 'எனக்கொரு சினேகிதி’ சிறுகதையானது, காதல் என்பது இதுதான் என்று இலக்கணம் வகுக்கும் கதை. 'புளிமாங்காய்’ என்ற கதை மிகவும் சிறப்பாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. கனடா பெண் எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய 'நீங்காத நினைவுகள்’ என்ற தொகுதியில் இடம்பெற்ற கதை இது.
சிறுவர் சிறுகதைகளில் 'கனவு நினைவாக வேண்டும்’ என்ற சிறுவர் கதை ஒரு அறிவியல் கதை ஆகும். வேற்றுக்கிரக வாசிகளின் அன்ரனாக்களை - பூமியிலே இருக்கும் லேடி பேர்ட், நத்தை போன்றவற்றுடன் ஒப்பிடுகின்றது இந்தக் கதை. கதையை ஒரு கனவு என்று சொல்லாமல், இடையில் நிறுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. 'மர்ம மாலை’ என்ற தொடர் சற்றே வித்தியாசமானது. பெயருக்கு ஏற்றவாறு அமேசன் காடுகளில் நடக்கும் தொடர் மர்மமாக இருந்தது.