தத்துவம் அறிவோம்: 'இமானுவல் கான்ட்'டின் (Immanuel Kant): அனுபவம் கடந்த கருத்தியல்வாதம் ( Transcendental Idealism ) - வ.ந.கிரிதரன் -
- இமானுவல் கான்ட் (Immanuel Kant) -
இமானுவல் கான்டின் கருத்தியல்வாதக்சிந்தனைகள் ஈர் உலகங்களைப்பற்றி விபரிக்கின்றது. உண்மையாக எமக்கு வெளியில் இருக்கும் உலகம். அதனை அவர் Noumenon என்றழைத்தார். அடுத்தது எம் அனுபவங்களுக்கு உட்பட்ட உலகம். இதனை அவர் Phenomenon என்றழைத்தார்.
நாம் எம் ஐம்புலன்களால் எம்மைச் சுற்றியுள்ள இப்பிரபஞ்சத்தை உள்வாங்குகின்றோம். எம் சிந்தனையின் விரிவு, புலன்களின் மூளைக்குக்கொண்டு செல்லும் உணர்வுகள், காட்சிகள், சப்தங்கள் போன்றவற்றின் மூலம் நாம் எம்மைச்சுற்றியுள்ள பிரபஞ்சத்தைப்பற்றிய வடிவினை, அதன் இயல்பினைப்பற்றிய சித்திரமொன்றினை உருவாக்கிக்கொள்கின்றோம்.
இவ்விதமாக எமக்குத்தெரியும் யதார்த்தம் அல்லது உண்மை (Reality)) என்பது எம்மால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஆனால் அது உருவாக்கப்பட்டதற்குக் காரணமாக எமக்கு வெளியில் இருக்கும் உண்மையான உலகத்தினை நாம் ஒருபோதுமே பார்க்க முடியாது. உணர முடியாது. ஏனென்றால் அது எம் புலன்களுக்கு, எம் சிந்தைக்கு அப்பாற்பட்டது. உண்மையில் அவ்விதமிருக்கும் உண்மையான உலகு எம்மில் ஏற்படுத்தும் விளைவே நாம் அறிந்திருக்கும், புரிந்திருக்கும் இந்தப் பிரபஞ்சம்.