இலங்கை முன்பள்ளிகள் ஒரு பார்வை ! இளந்தளிர்கள் துளிர்விடட்டும் ! - பவானி சற்குணசெல்வம், நெதர்லாந்து -
இலங்கைக்கு எமது குடும்பங்களைப் பார்வையிட அல்லது உல்லாசப்பயணியாக போகும்போது நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் வேறு ஆனால் இலங்கையின் உட்பிரதேசங்களுக்குச் சென்று வசதி குறைந்த மக்களுடன் பழகும்போது அவர்களின் வாழ்வாதாரம் குழந்தைகளின் கல்விநிலை பற்றி அறியும் போது எமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் வேறு. இலங்கை போன்ற நாடுகளில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி மிக அதிகம். அந்த இடைவெளியில் எந்தவொரு பாலமும் இதுவரை அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இது மனவருத்தம் தரும் விடயம்.
நான் இலங்கை சென்றபோது நகர்ப்புற வசதி கூடிய குடும்பங்களில் வளரும் குழந்தைகள் கற்கும் முன்பள்ளி, நடுத்தரக் குடும்பங்களில் வளரும் குழந்தைகள் கற்கும் முன்பள்ளிகள், மிகவும் வசதிகுறைந்த பின்தங்கிய பிரதேசங்களில் கற்கும் குழந்தைகளின் முன்பள்ளிகள் என பலதரப்பட்ட முன்பள்ளிகளுக்கு சென்றிருந்தேன்.
இலங்கையில் இலவசக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, ஆரம்ப மற்றும் இடைநிலை, உயர்தர பள்ளிகள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகின்றன, இது முன்பள்ளிகளுக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது எந்த உதவிகளும் வளங்கப்படாத நிலையில் உள்ளது. இது குறைந்த வருமானம் உள்ள பகுதிகளில் உள்ள முன்பள்ளிகளை பெரிதும் பாதிக்கிறது.
உளவியல் நிபுணர்கள் மேற்கொண்ட பல ஆய்வுகளில் குழந்தைகளின் மிக முக்கியமான பருவம் முன்பள்ளி பருவமே என்பதை உணர்த்தினர். இதில் மழலைகளின் உடல் வளர்ச்சி, இயக்க வளர்ச்சி, மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, சமூக வளர்ச்சி ஆகியவை மிக வேகமாக வளர்ச்சி பெறுகின்றன என்பது ஆய்வுகளின் பெறுபேறுகளாகும். மேற்குறித்த விடயங்களை வைத்து முன்பள்ளியின் முக்கியத்தவத்தையும், உலகளாவிய ரீதியில் வியாபித்து உள்ள தன்மையையும் எம்மால் அறிய முடிகிறது.