நிலம்சார் பண்பாட்டு மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்! - மெய்ஸ்ரீ ப. செ, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி, கோவை – 641014. -
முன்னுரை
மொழிபெயர்ப்பு என்பது யாருக்காக? இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. அதேபோல் தமிழ் நிலப்பரப்பும் பன்மயத்தன்மை உடையது. பல மொழிபேசும் மக்கள் தமிழகத்தில் வாழ்கின்றனர். அவர்களுக்குள் சடங்கு சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள் சார்ந்து பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. அப்பன்முகத்தன்மையில் தான் ஓர் ஒற்றுமையும் உள்ளது. அதுவே தமிழ் நிலம்சார் மக்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தமிழ் நிலப்பரப்பிலுள்ள பண்பாட்டு அம்சங்களை உலகிற்குப் பறைசாற்ற மொழிபெயர்ப்பு அவசியமாகிறது. மொழி, சடங்கு, வழிபாட்டு முறை போன்ற இனக்குழு அடையாளங்களை மொழிபெயர்க்கும் பொழுது, பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஒரு மொழியில் ஒரு சொல் உணர்த்தும் பண்பாட்டுப் பொருள் வேறு மொழியில் வேறொரு பொருளை உணர்த்துகிறது. இவ்வாறான பல சிக்கல்களை அடையாளப்படுத்தும் விதமாகவும் அதற்கான தீர்வு வழிமுறைகள் குறித்தும் இக்கட்டுரை ஆராய்கிறது. தமிழ் நிலம்சார் பண்பாட்டுக்கூறுகளைத் தன்னுள் கொண்ட பாரதியாரின் கண்ணன் பாடல்களில் கண்ணம்மா என் குலதெய்வம் என்னும் பாடல் மூலத்தோடு, கே. எஸ் சுப்பிரமணியம், பி. எஸ் சுந்தரம், தென்காசி தங்கபாண்டியன் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒப்புநோக்கப்படுகிறது.