தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (2) - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் இரண்டு: அன்பின் ஆதிக்கமும், ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவமும்!
மாதவனது மனம் நிறைய அந்த அணில் பற்றிய சிந்தனைகளே பரவிக் கிடந்தன.
''நண்பனே, என்ன சிந்திக்கின்றாய்? இன்னமும் அந்த அணில் பற்றித்தானா?"
இவ்விதம் கேட்டுவிட்டுச் சிரித்தான் மார்க்.
''உண்மைதான் நண்பனே. இந்த அணில் என் மனத்தில் இருப்பு பற்றிய சிந்தனைகளை வழக்கம்போல் ஏற்படுத்தி விட்டன. இது என்னுடைய இயல்பு. எப்பொழுதும் இருப்பு பற்றிச் சிந்திப்பது. சக உயிரினங்களைப் பற்றிச் சிந்திப்பது.''
மாதவனின் பதிலைக்கேட்டுப் பலமாகச் சிரித்தான் மார்க்.
'நீ துறவியாகப் போயிருக்க வேண்டியவன். உனது இருப்பிடம் நகரமல்ல.'
''ஒரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான். பொதுவாகவே எனக்கு இயற்கையெழில் தவழும் கானகச்சூழலும், அமைதியும் நிறையப் பிடிக்கும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் எல்லாப் பயன்களையும் உதறிவிட்டுப் போகும் அளவுக்கு மனப்பக்குவம் இன்னும் ஏற்படவில்லையே''
என்று பதிலுக்குக் கூறிவிட்டு மாதவனும் சிரித்தான். அவனே மேலும் தொடர்ந்தான்:
''நண்பனே, இந்த இருப்பின் நேர்த்தியை, அழகினை நான் விரும்புகின்றேன். ஆனால் இதன் குறைபாடுகளை நான் வெறுக்கின்றேன். இவ்வுலகம் மட்டும் அன்பின் ஆதிக்கத்தில் மட்டும் நிறைந்திருக்கும் வகையில் படைக்கப்பட்டிருந்தால் ... ஆனால் அவ்வாறு ஏன் படைக்கப்படவில்லை?"
''நண்பனே, ஐன்ஸ்டைனின் கோட்பாட்டை , சார்பியல் கோட்பாட்டை இங்கும் நீ பாவிக்கலாம்."
இவ்விதம் மார்க் கூறியதைக் கேட்டு மாதவனுக்குச் சிறிது ஆச்சரியமேற்பட்டது.