மீள்பிரசுரம் (விகடன்.காம்) : பாரதி நூல்களை மட்டும் பதிப்பிப்பதே என் வேலை” - பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் பேட்டி! - சு. அருண் பிரசாத் -
பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் பற்றி ஆனந்த விகடனில் வெளியான பேட்டியிது. இதன் முக்கியத்துவம் கருதி, நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -
“எதிர்பாராதவிதமாக, எனக்குப் பாரதியின் ஒன்றுவிட்ட சகோதரரும், பாரதி பிரசுராலய நிறுவனருமான சி. விசுவநாத ஐயரின் தொடர்பு ஏற்பட்டது.”
60 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதி ஆய்வில் ஈடுபட்டுவருபவர் சீனி. விசுவநாதன். தற்போது 88 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் இவர், பாரதி குறித்து இதுவரை அறியப்படாத அரிய தகவல்களையும், பாரதியின் எழுத்துகளையும், பாரதி பற்றிய எழுத்துகளையும் பதிப்பித்துள்ளார். ‘கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்', ‘பாரதி நூற்பெயர்க் கோவை' ஆகியவை இவரது பெரும் சாதனைகள்.
“தம் வாழ்வையே பாரதி ஆய்வுக்காக அர்ப்பணித்த சீனி. விசுவநாதனின் பணியைப் போற்றும் வகையில், தலா மூன்று லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டுச் சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்'' என்று கடந்த செப்டம்பர் மாதம் பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவின்போது தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின், சீனி. விசுவநாதன் உள்ளிட்ட பாரதி ஆய்வாளர்களுக்கு 'பாரதி நினைவு நூற்றாண்டு விருது' வழங்கிச் சிறப்பித்தார்.
பாரதியின் 139-வது பிறந்தநாளை ஒட்டி, மூத்த பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதனுடனான சிறப்புப் பேட்டி.
“உங்கள் குழந்தைப் பருவம் பற்றிச் சொல்லுங்கள்?”
“1934-ம் ஆண்டு நவம்பர் 22 அன்று பரமத்திவேலூரில் பிறந்தேன். நான்காம் வகுப்பு வரை ஓசூரில் படித்தேன். அங்கு என்னுடைய அப்பா வருவாய்த் துறை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். 1944-ல் என் அப்பா இறந்த பிறகு ஒரு வருடம் சேலத்தில் என்னுடைய மூத்த அண்ணன் ராமலிங்கம் வீட்டில் இருந்து படித்தேன். பிறகு ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை திருச்சியில் என் சித்தப்பா வீட்டிலிருந்துதான் படித்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் எனக்கு வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.”