சமகால ஈழத்துக் கவிஞர்களுள் இக்பால் அலியும் ஒருவர் - பேராசிரியர் சாதியா பௌஸர், முன்னாள் தலைவர் – மொழித்துறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. -
இன்று கவனயீர்ப்புப் பெறும் சமகால ஈழத்துக் கவிஞர்களுள் இக்பால் அலியும் ஒருவராவார். இவர் ஓர் ஊடகவியலாளராக தன்னை அடையாளப்படுத்தும் அதேவேளை நாடறிந்த கவிஞராகவும் அறியப்படுகிறார். ஓர் ஊடகவியலாளன் தன்னைச் சுற்றி நிகழும் அசாதாரண சம்பவங்களை செய்திகளாக்குவது போல ஒரு கவிஞனும் தான் காணும் சமூக மாற்றங்களை தன் கவிதைகளுக்குள் பாடுபொருளாக்குகின்றான். இவ்வகையில் இக்பால் அலியின் கவிதைகளை நோக்கும்போது ஓர் ஊடகவியலாளனுக்குரிய செய்திப் பார்வையும், நுணுகிய நோக்கும்; இவரின் கவிதைகளில் இயல்பாய் இணைவதோடு சமுதாயப் பற்றுமிக்க கவிதா ஆற்றலும் அதனை மொழிவயப்படுத்துவம் திறனும் இவரிடம் ஒருங்கே அமைந்துவிடுகின்றன.
இக்பால் அலி தனது கவிதைகளில் இயற்கை நிகழ்வுகள்,அனர்த்தங்கள், அன்றாட மனித செயற்பாடுகள், அவற்றின் விகற்பங்கள் என்பனவற்றைப் பேசுகின்றார். இவற்றின் மூலம் கவிதையை ஒரு பரபரப்பு நிலையிலான செய்திக்கு ஒப்பாக மாற்ற முனைவது அவர் கொண்டிருக்கும் சிறப்பம்சமாகும். ஒரு செய்தியை காணொளி மூலம் காட்சிப்படுத்தல், செய்தித்தாளில் பரபரப்பாக்குதல், வானொலியில் ஒலிக்கச் செய்தல், சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாற்றுதல் என்பனவற்றின் மூலம் அதிக பரவலடையச்; செய்யமுடியும். இந்த உத்தியை இக்பால் அலியின் கவிதைகளிலும் காண முடியும்.
சூழலில் காணப்படும் காட்சிப் படிமங்களே இக்பால் அலியின் கவிதைகளது கருப்பொருட்களாகின்றன. இவற்றை ஊடகக் கண்கொண்டு பார்ப்பதினால் உருவாகும் உணர்ச்சிகளை அவர் கவிதையாக்கிவிடுகிறார். ஊடக நிகழ்வுகள் எவ்வளவு சீக்கிரம் மக்களிடத்தில் சென்று சேர்கிறதோ அதுபோலவே கவிதை எனும் இலக்கிய வடிவமும் மக்களிடத்தில் உடனே சென்று சேரவேண்டும் என இவர் கருதுகிறார். இதனால் அவர் எழுதும் கவிதைகள் சமகாலம் என்ற அடிப்படையில் முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றன.