ஆகஸ்ட் 23 தமிழறிஞர் த. துரைசிங்கம் நினைவுதினம்! – இளநிலா சுரேசானந்த் (பிரான்ஸ்) -
சிறுவர் இலக்கியச் சாதனையாளர் த. துரைசிங்கம்..! நடமாடும் கலைக் களஞ்சியமாக விளங்கிய தமிழறிஞர்..!! இலக்கிய வித்தகர், கலாபூசணம், ஓய்வுநிலைக் கல்விப் பணிப்பாளர் த. துரைசிங்கம் (84) காலமாகி ஒரு வருடமாகிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் (23 – 08 – 2021) அவர் கொழும்பில் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார். ஈழத்து இலக்கியப் பரப்பிலும், கல்விப் புலத்திலும் நன்கு அறியப்பட்ட புலமையாளர் த. துரைசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டு அமைதியாகச் செயற்பட்டு வந்தவர். சிறந்த எழுத்தாளர். கவிஞர். நூற்றுக்கு மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.
இளம் வயதிலேயே பத்திரிகைச் செய்தியாளராகப் பணியாற்றத் தொடங்கியவர். 1954 -ம் ஆண்டு கொழும்பு விவேகானந்த சபை அகில இலங்கை ரீதியாக நடத்திய ஆறுமுகநாவலர் நினைவுக் கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்றமையைத் தொடர்ந்து எழுத்துத் துறையில் ஈடுபடத் தொடங்கினார். கல்வித்துறை, எழுத்துத்துறை மட்டுமன்றி புங்குடுதீவின் வளர்ச்சிக்கும் சேவையாற்றியுள்ளார். புங்குடுதீவு அபிவிருத்திச் சபையின் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
ஈழத்துப் பல்வேறு பத்திரிகைகளுக்கும், தமிழகத்தின் 'மணிமொழி' இதழுக்கும் நிருபராகச் செயற்பட்டவர். தமிழ்நாடு அருள்நெறி மன்றத்தின் மாத சஞ்சிகையான'மணிமொழி' 1956 மார்கழி இதழில் இவர் குறித்துக் கட்டுரை பிரசுரித்துப் பாராட்டியுள்ளது. அருள்நெறி இயக்கத்தில் தொண்டாற்றியவர். திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளாரின் அபிமானத்தைப் பெற்றவர். நல்லூர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்ற காலத்தில் (1957 – 1958) கலாசாலை வெளியீடான 'கலா விருட்சம்' சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார். பேராதனைப் பல்கலைக்கழகக் கலைமாணிச் சிறப்புப் பட்டத்தையும், யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமாச் சிறப்புச் சித்தியையும் பெற்றுக்கொண்டார். ஆசிரியராக, அதிபராக, கோட்டக்கல்விப் பணிப்பாளராக, மாவட்டக் கல்விப் பணிப்பாளராக 38 ஆண்டு காலம் கல்விப் புலத்தில் பணியாற்றியுள்ளார். யுத்தப் பிரதேசமாக விளங்கிய கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விப் பணிப்பாளராக (1995 – 1997) இவரது பணிகள் குறிப்பிடத்தக்கன.
கலைத்துறையிலும் ஆர்வங்கொண்ட இவர், 1953 -ம் ஆண்டில் புங்குடுதீவில் 'பாரதி கழகம்' என்ற அமைப்பினை நிறுவி பாரதி விழாக்களையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இந்நிகழ்ச்சிகளில் அன்றைய காலகட்டத்தில் பிரபல பேச்சாளர்களாக விளங்கிய தோழர் வி. பொன்னம்பலம், அ. அமிர்தலிங்கம் நாவேந்தன், தேவன் - யாழ்ப்பாணம் ஆகியோருட்படப் பலர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.