
[இலங்கையின் பிரபல முற்போக்கு எழுத்தாளார் எஸ்.அகஸ்தியர் அவர்களின் பிறந்த தினம் ஆகஸ்ட் 29 . அதனையொட்டி அவரது இக்கட்டுரை வெளியாகின்றது. இதனைப் 'பதிவுக'ளுக்கு அனுப்பி வைத்தவர் அவரது மகள் எழுத்தாள்ர் நவஜோதி யோகரட்னம். . ‘இலக்கியத்தில் ஒழுக்க வாதம் அல்லது நடுநிலைமை வாதம்’ என்னும் தலைப்பில் கண்டியில் 29.6.1969 இல் இடம்பெற்ற இலக்கிய அரங்கில் அகஸ்தியர் ஆற்றிய உரையின் சுருக்கம். இந்த இலக்கிய அரங்கில் அரு.சிவானந்தன், இல.இராசு, இரா.அ.இராமன், சி.பன்னீர்ச்செல்வம், அபதுல் ரவுஹீம், அ.கணேஷ், பெரியசாமி, உமாபதி, சி.கந்தையா, பெரி. சுவாமிநாதன், செல்வி.சி;. இந்திராணி, செல்வி சித்தி.ஹமீதா, வெ. இராசம்மா ஆகியோரும், இன்னும்பல இலக்கிய முற்போக்கு இளங்கலை எழுத்தாளர்களும் பங்கு பற்றினர். ]
ஒழுக்கம் என்பது கட்டுப்பாடு. அது மனித வர்க்கத்திற்கு மட்டுமல்ல இலக்கியங்களுக்கும் மிக அவசியமானதாகும். இந்த ஒழுக்கம் என்ற கோட்பாட்டை எப்படி நிர்ணயிக்க முடிகின்றது என்று நாம் ஆராய்ந்து பார்க்ககும்போது, இலக்கியத்தில் ஒழுக்கவாதம் அவசியம்தானா என்ற கேள்வி நம்முன்னே எழுகின்றது. அதுவுமல்லாமல், இலக்கியத்தில் ஒழுக்கவாதம் அல்லது நடுநிலைமை வாதம் பேசுபவர்கள் யார், அவர்கள் யாருக்காக இலக்கியம் படைக்கிகிறார்கள், அவர்கள் இலக்கியத்தில் ஒழுக்கவாதம்; பேசுவதன் மூலம், எந்த சமூக அமைப்பைக் கட்டிக் காக்க விரும்புகிறார்கள் என்ற இன்னோரன்ன கேள்விகளுக்கும் நாம் விடை காணவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
சரி, இலக்கியத்தில் ஒழுக்கவாதம் அவசியம்தானா? இந்தக் கேள்விக்கு ஒரு விடை காண்பதற்கு முன், நாம் இந்தச் சமூக அமைப்பில் ஒரு ஆழமான கண்ணோட்டத்தைச் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. ஏனெனில், இன்றைய இந்தச் சமூக அமைப்பு இரண்டு முரண்பட்ட வர்க்கங்களாக அமைந்திருக்கின்றன. இது உழைப்பாளிக்குப் பாதகமாகவும், உடமைவாதிக்குச் சாதகமாகவும் அமைக்கப் பட்டிருக்கின்றது. இத்தகையச் சமூக அமைப்பில் வர்க்க பேதங்கள் இருப்பதால்தான் பொருளாதாரப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்தப் பொருளாதார ஏற்றுத் தாழ்வுகளே கொலை, களவு, கற்பழிப்பு, கீழ்த்தர குருர உணர்ச்சி, வறுமை ஆகியவைகள் சமுதாயத்தில் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்திருக்கின்றன.