பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தின் 'தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்' நூல் வெளியீடு! - தகவல் - வி.ரி.இளங்கோவன் -



எழுத்தாளர் தமிழ்நதியின் மூன்று நூல்கள் இம்மாதம் 'டொரோண்டோ'வில் வெளியிடப்படவுள்ளன. வெளியிடப்படவுள்ள நூல்களின் விபரங்கள் வருமாறு: 'நாடு கடத்தப்பட்ட சொற்கள்', 'மாயக்குதிரை' & 'தங்க மயில் வாகனம்'.

[ நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து சில ஆண்டுகளின் முன் விடுதலையான தமிழ் அரசியல் கைதி விவேகானந்தனூர் சதீஸின் சிறைவாசத்தை விபரிக்கும் இந்நூல் அவர் சிறையிலிருந்தபோது எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.]
16 ஆண்டுகள் 'தமிழ் அரசியல் கைதி'யாக ஸ்ரீலங்கா சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 'விவேகானந்தனூர் சதீஸ்' அவர்கள், நெருக்கடிமிகு சிறைக்குள்ளிருந்துஎழுதிய உண்மையாவணத் தொகுப்பான 'துருவேறும் கைவிலங்கு' நூல், பிரெஞ்சு தேசத்தில் பொதுவெளி காண்கிறது..!

சென்ற ஞாயிற்றுக் கிழமை கனடா, ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக்கலாமன்ற அரங்கத்தில் கனடா தொல்காப்பிய மன்றத்தின் 10வது தொல்காப்பிய ஆண்டு விழா அதன் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் வெங்கட் ரமணன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
முதலில் மங்கள விளக்கேற்றி, கனடா தேசியப்பண், தமிழ்தாய் வாழ்த்து, மன்றப்பாடல் ஆகியன இளையோரால் இசைக்கப்பட்டு, நாட்டிற்கு நன்றி, அகவணக்கம் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன. தொடர்ந்து மன்றத்தின் செயலாளர் வல்லிபுரம் சுகந்தனின் வரவேற்புரை இடம் பெற்றது. அதன்பின் மாணவர் பாசறை பற்றி முனைவர் இல. சுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.
அடுத்து மாணவர் பாசறையின் ‘தொல்காப்பியர் கால வாழ்வியல்’ என்ற கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. திருமதி சுவந்திசங்கர், செல்வி காவியா சிவசங்கரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியைப் பொறுப்பேற்று நடத்தினர். இதில் பங்குபற்றிய சுமார் 22 இளையோர் மிகச் சிறப்பாக ஒவ்வொரு நிலத்திணை பற்றியும் தெளிவாகத் தமிழில் விளக்கம் தந்தார்கள். அவர்களுக்கு எங்கள் பாராட்டுகள்.
தொடர்ந்து திருமதி வனிதா குகேந்திரன் அவர்களின் கலைக்கோயில் மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி யூனிதா நாதன் அவர்களின் பாராட்டுரை இடம் பெற்றது. தொடர்ந்து மன்றத்தின் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமை உரை இடம் பெற்றது. தொல்காப்பியம் சார்ந்த நிகழ்வுகளை நாம் ஏன் முன்னெடுக்க வேண்டும், அடுத்த தலைமுறையினரிடம் ஏன் கொண்டு செல்ல வேண்டும் என்பது போன்ற விளக்கத்தைச் சபையோருக்கு எடுத்துச் சொன்னார். தொடர்ந்து ஜனனி குமார் அவர்களின் சிலம்பொலி நர்த்தனாலயா மாணவிகளின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது.

[* டிஜிட்டல்'ஓவியத் தொழில் நுட்பம் - இரமணிதரன் கந்தையா.]
இன்று, செப்டம்பர் 11, மகாகவி பாரதியார் நினைவு தினம். கவிஞர்களில் என்னை ஈர்த்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் பாரதியார்.
குறுகிய அவர் வாழ்வில் அவர் சாதித்தவை பிரமிப்பினையூட்டுபவை. , தேசிய விடுதலையை, வர்ண விடுதலையை, வர்க்க விடுதலையை, மானுட விடுதலையைப் பாடிய கவிஞர் அவர். நாட்டு, உபகண்ட , சர்வதேச அரசியலை நன்கு அறிந்தவர் அவர். அதை அவரது எழுத்துகள் புலப்படுத்தும். அவை கூடவே அவரது பரந்த வாசிப்பையும், சிந்தனையின் ஆழத்தையும் வெளிப்படுத்தும்.

(ஓவியம் - AI)
செப்டம்பர் 9 என் அபிமான எழுத்தாளர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான டால்ஸ்ட்டாயின் பிறந்த நாள். அவரது நாவல்கள் எல்லாமே சிறந்த படைப்புகள். உலக இலக்கியத்தில் முதல் தரப்பில் வைத்துப் போற்றப்படுபவை.
இவரது படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்த படைப்பாகப் புத்துயிர்ப்பு (Resurrection) நாவலைக் கூறுவேன். அதற்கு முக்கிய காரணம் அது அறிமுகமானபொது எம் நாடிருந்த சூழல். எண்பதுகளின் ஆரம்பம். நாட்டில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் ஆயுதமயப்படத்தொடங்கியிருந்த காலகட்டம். இளைஞர்கள் மக்கள் பற்றி, தொழிலாளர், விவசாயிகள் பற்றி, மார்க்சியம் பற்றியெல்லாம் சிந்திக்கத்தொடங்கியிருந்த காலம்.
டால்ஸ்டாய் மதவாதியாக இருந்தபோதும், தன் புனைகதைகளின் இறுதியில் மதரீதியிலான தீர்வினை எடுத்துரைத்தபோதும், அவரது கதைகளில் மானுடரின் வாழ்க்கை, வர்க்க வேறுபாடுகள் ஏற்படுத்தும் மானுடர் மீதான பாதிப்புகள், சமூக அநீதி கண்டு கொதிக்கும் மானுடச் சிந்தனைகள் இவையெல்லாம் நிறையவே இருக்கும். அவை என்னை மிகவும் கவர்ந்தவை.

15) ஒசாகா
யப்பானின் நான்கு பிரதான தீவுகளில் சிறியதான குய்சு தீவிலிருந்து மீண்டும் ஒசாகா நகரை நோக்கி செல்வதற்கு ஹொன்சு (Honshu) யப்பானின் பிரதான தீவை நோக்கி கடலில் கப்பலில் சென்றோம். இது , இரவு முழுவதும் யப்பானின் மேற்கு பகுதியான பசுபிக் சமுத்திரத்தில் செல்லும் பயணம். கப்பலில் அறைகள், ஹொட்டேல் போன்று வசதியாக இருந்தது. இரவு மற்றும் காலை உணவும் அந்த மூன்று தளங்கள் கொண்ட கப்பலிலே கிடைத்தது.
நாங்கள் செல்லும் ஒசாகா நகரம், யப்பானின் தலைநகராகிய டோக்கியோவிலிருந்து கலாசாரம் , தொழில்துறை எனப் பல விதங்களில் மாறுபட்டது என்றார் எமது வழிகாட்டி. முக்கிய தொழில்முறையில் முன்னேற்றமடைந்த நகராகவும் அதேவேளையில் யப்பானிய மொழியை வித்தியாசமான தொனியில் பேசுவார்கள் என்றார். கொயட்டோ என்ற புராதன யப்பானிய தலை நகரத்திற்கு அருகாமையில் ஒசாகா அமைந்திருப்பதால் பல விடயங்களில் ஏற்பட்ட செல்வாக்கு பிற்காலத்தில் டோக்கியோ யப்பானின் தலைநகராக மாறிய பின் சரிந்தது. அத்துடன் யப்பானின் அசுத்தமான நகர் ஒசாகா என்றார். ஆனால், எங்களுக்கு அப்படித் தெரியவில்லை. ஒசாகாவில் உள்ள கோட்டை யப்பானில் பெரியது முக்கியமானது என்பதால் அதை பார்ப்பதே எங்களது முதல் வேலையாக இருந்தது. கோட்டையைச் சுற்றி பெரிய அகழி அத்துடன் பூங்காவும் அமைந்திருந்தது. கோட்டையைப் பார்ப்பதற்கு ஏராளமானவர்கள் அங்கிருந்தார்கள் அத்துடன் அன்று விடுமுறை நாளானபடியால் வரிசையாக மாணவர்கள் வந்தபடியிருந்தார்கள். யப்பானில் மாணவர்கள் அணிவகுத்து போவது மிகவும் வித்தியாசமானது. அவர்கள் பேச்சு நடத்தை எதிலும் ஒரு ஒழுங்கு தெரியும்.
இரண்டாவது உலகப் போரில் யப்பானிய இராணுவத்தினர் தங்கியதால் அமெரிக்கர்களின் குண்டுகளால் கோட்டையின் பல பகுதிகள் அழிக்கப்பட்டபோதும் மீண்டும் புதுப்பித்து கட்டப்பட்டது. கிட்டத்தட்ட மில்லியன் அளவு தொகையான கருங்கற்களால் கட்டப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது. அங்குள்ள கற்கள் பார்ப்பதற்கு மிகவும் பெரிதானவை. அந்த கோட்டை அமைந்துள்ள இடம் கிட்டத்தட்ட இரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது. அந்த நிலப்பகுதியின் நடுவே கோட்டை அமைந்துள்ளது. கோட்டையை சுற்றி வர ஏராளமான செரி மரங்களின் நடுவே கம்பீரமான கட்டிடம் ஐந்து அடுக்குகள் வெளித் தெரிய நிற்கிறது. கோட்டையின் உள்ளே செல்வதற்கு தற்பொழுது உள்ளே மின் தூக்கி உள்ளதால் மற்றைய கோட்டைகள் போல் படிகள் வழியே ஏறவேண்டிய தில்லை . மேல் தளங்களிலிருந்து வெளியே பார்க்கும்போது ஒசாகா நகரம் அழகான காட்சியாக விரியும் . இந்தக் கோட்டை யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது

* 'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்பம் - இரமணிதரன் கந்தையா
இடதுசாரிகளின் பழம் பெரும் தலைவரான, சண்முகதாசனின் நூற்றாண்டு மலர் வீரகத்தி தனபாலசிங்கத்தால் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுரைகளில் ஒன்றில், ‘சிறு தீப்பொறியானது பெரும் காட்டுத் தீயை உருவாக்கிவிடும்’ என்ற வரியும் வந்து போகின்றது. ரஷ்யாவின் ‘இஸ்கரா’ (தீப்பொறி) முதல், இந்திய விடுதலை இயக்கத்தின் ‘அக்கினிக் குஞ்சு’ வரை (பாரதி) ‘தீ’, அவ்வவ் காலப்பகுதியில், அவ்வவ் மனிதருக்கு மிக நெருக்கமாய் இருந்துள்ளதுதான். பிரமித்தியூஸ் கூட, நெருப்பை, கடவுள்களுக்கு தெரியாமல் திருடி மக்களுக்கு சேர்ப்பித்தான் என ஐதீகம் கூறுகின்றது. இப்படி அறிவை மனிதர்களுக்கு கொடுக்க, சம்பந்தப்பட்ட மனிதர்கள், கொடுத்த விலையானது அபரிமிதம் என்றாலும், இப்பாரம்பரியம் இன்னும் தொடரவே செய்கின்றது என்பதனையே வீரகத்தி தனபாலசிங்கத்தின் தொகுப்பும் ஒரு வகையில் எமக்கு பறை சாற்றுவதாய் உள்ளது.
‘கோட்பாட்டு விடயங்களில் நான் பத்தாம் பசலியான தூய பிராமணன்தான்’ என பெருமையுறும் சண்முகதாசன் பொறுத்த ஒரு சாதாரண மலையக தொழிலாளியின் கூற்று: ‘கொடுத்த உணவை உண்டு, விரித்த சாக்கினில் அமர்ந்து… (நந்தலாலா கதைகள்:சுந்தரம்)’ நன்றி பெருக்குடன் அம்மனிதனை தன் மனக்கண்ணால் ஒரு கணம் நிறுத்தி பார்க்கும் அம்முதிய தொழிலாளியின் பெரிய கண்கள் பளபளத்தன.
இந்நினைவுகளை எல்லாம் வெவ்வேறு வார்த்தைகளில் தேக்கித்தர முற்பட்டுள்ள வீரகத்தி தனபாலசிங்கத்தின் முயற்சியின் வெற்றிகள் ஒருபுறம் இருக்க, ஒரு நூறு ஆண்டுகளின் பின் இத்தகைய ஒரு நிகழ்வை நினைக்கத் தூண்டிய இச்செய்கையானது, புதிய இளந் தலைமுறையினருக்கு வரப்பிரசாதமாகவே அமைந்து, ஒரு செய்தியை கூறாமலும் விட்டதில்லை எனலாம்.
11
‘அற்பர்கள் வாழும் மண்ணில் சண்முகதாசன் போன்ற மனிதர்கள் பிறப்பபெடுப்பது இனி நடவாத காரியம்… முக்கியமாக, தன்னை சுற்றியுள்ள தோழர்கள், பின்வாங்கிவிட்ட ஒரு நிலையில்… அவர் உறுதியாக நின்றார்… தனக்கு கிடைத்திருக்க கூடிய சௌகரிய வாழ்வின் அத்தனை வசதிகளையும் நிராகரித்து…’ என்ற பொருள்பட தனபாலசிங்கம் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டிருப்பார்.

* ஓவியம் - AI
பொதுவாக ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வளர்ச்சிக் கூறுகளின் நிலைத்த தன்மைக்கும் உந்து சக்திகளாக பல்வேறு காரணிகள் அறியப்பட்டாலும் அவற்றுள் முதன்மையானது மட்டுமல்ல தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்நிற்பது அந்நாட்டின் இளைஞர்களே ஆவர். புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், புதுமைகளை உள்வாங்கும் நிலை, தளராத முயற்சி, வளர்ச்சி நோக்கிய இலக்கு, நவீன உத்திகளைக் கையாளுதல் போன்ற எண்ணற்ற பரிமாணங்கள் இளைஞர்களின் தகுதியையும் தரத்தையும் உயர்த்திப் பிடிப்பதால் அவர்களை விலக்கி வைத்துவிட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது இயலாததாகும். அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமல்ல அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதால் மாற்றங்களுக்கு வித்திடும் இன்றைய உலகில் இளைஞர்கள் மாற்று சக்திகளாகவும் உருவாகி நிற்கின்றனர்.
19 வயது முதல் 35 வயது வரை உள்ள அனைவருமே இளையோர் தான். அது மட்டுமல்லாமல்; துடிப்புடன், பயம் என்பதே இல்லாமல் பல எதிர்ப்புகளையும் தாண்டி முழு ஆற்றலுடன் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பவன் இளைஞன். இத்தகைய மனபலத்தையும் ஆற்றலையும் படைத்த இளைஞன் இன்று தன்னை அறியாமலேயே நாகரிகம், வாழ்க்கை சூழ்நிலை போன்ற காரணங்களால் தன்னையே அழித்து, தன் வாழ்வையே கேள்விக்குறியான ஒன்றாக மாற்றி வருகின்றான்.
இளைஞர்கள் தடுமாறும் சூழல்:
இளம் வயது புதிய மாற்றம் ஏற்படும் காலம், பொதுவாக மன அழுத்தமும், கவலையும் நிறைந்த காலம் என ஐக்கிய நாடுகளின் ஓர் அறிக்கை விவரிக்கிறது. இளைஞர்களால் பொதுவாக மனஅழுத்தத்தையும், கவலையையும் ஆக்கபூர்வமான விதத்தில் சமாளிக்க முடிவதில்லை. அதற்கான அனுபவம் அவர்களிடம் சிறிதும் இருப்பதில்லை. இந்த நேரங்களில் சரியான வழிநடத்துதல் இல்லை என்றால் இளைஞர்கள் எளிதாக தீய வழிதனில் சென்று விடுவார்கள்.

*ஓவியம் AI
முன்னுரை
புலவி என்பது காதலில் ஏற்படும் ஊடல் அல்லது செல்லக் கோபம் ஆகும். இது தம்பதியரிடையே தோன்றும் ஒரு குறுகிய காலப் பிரிவைக் குறிக்கிறது. இந்த ஊடல், கூடலின்பத்தை அதிகரிக்கவும், காதலின் ஆழத்தை மேலும் சிறப்பிக்கவும் உதவுகிறது. திருவள்ளுவர், காமத்துப்பால் கற்பியலில் உள்ள 'புலவி' அதிகாரத்தில், இந்த ஊடலின் நுணுக்கங்களை விவரித்துள்ளார்.
கம்பரும் தம் இராமாயணத்தில் புலவி நுணுக்கம் குறித்து நூலின் சில இடங்களில் கூறிச்சென்றுள்ளார்.அவற்றைக்குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.
ஊடல்
ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் காதல் வாழ்க்கையில் பெண், ஆண் தனக்கு மட்டுமே உரியவன் என எண்ணுவாள். இத்தகைய மனநிலை ஆணுக்கும் இருக்கலாம். பெண் இப்படி எண்ணும்போது, ஆண் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறான் என தெரிய வரும்போது, அவள் அவனிடம் ஊடுவாள். அதாவது சிறு சண்டை இடுவாள்.
பரத்தை ஒழுக்கம் புரிந்து தலைவன் மீண்டும் வந்து இல்லம் புகுகையில் அவனோடு தலைவி வேறுபடும் பிணக்கு நிலை ஊடல் எனப்படும். காதல் வாழ்வில் ஊடல் இன்றியமையாத சிறப்புடையது. பரத்தை ஒழுக்கம் புரிந்து சென்றானோ என்று தலைவி எண்ணும் போதும், தலைவனுடன் ஊடுவாள்.
ஊடலினுடைய பண்பு
ஊடல், புலவி ,துனி,என்னும் சொற்கள் அகப்பாடலில் ஊடலின் பண்பை விரித்துரைக்கும்.
புலவி என்பது மன வேறுபாடு, (பொய் சினம்)
ஊடல் என்பது புலவி நீட்டம்
துனி என்பது ஊடல் நீட்டம்.
புலவியின் முதிர்ச்சி ஊடல்
ஊடலின் முதிர்ச்சி துனி
திருக்குறளில் புலவி நுணுக்கம்
புலவி நுணுக்கம் என்பது திருக்குறளின் காமத்துப்பால், கற்பியலில் வரும் அதிகாரமாகும். இது காதலிக்கும் இருவருக்கும் இடையில் நிகழும் ஊடல் அல்லது சண்டையை, அதாவது "போலிச் சண்டை" அல்லது "காதல் பிணக்கத்தின் நுட்பமான அம்சங்களை" விவரிக்கும் அதிகாரமாகும். இங்கு புலவி என்பது அன்பில் வெளிப்படும் சிறு சண்டையையும், நுணுக்கம் என்பது அதற்குரிய காரணத்தின் அல்லது காதலின் மறைமுகமான நுட்பங்களையும் குறிக்கிறது.

அறிமுகம்
தமிழரது அரசியல் சமூக பண்பாட்டு வரலாறு தொடர்பான முக்கியத்துவம் மிக்க பல நூல்களை வெளியிட்டுவரும் கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளை, கடந்த வருடம் (2024) ‘கதிர்காமத் திருமுருகன்’ என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலைச் செம்பதிப்பாக வெளியிட்டது. பதிப்பு வரலாற்றில், இதுவரை எட்டுப் பதிப்புகளைக் கண்ட இந்த நூல், திருத்திய செம்பதிப்பு எனும் புதிய பதிப்போடு ஒன்பதாவது பதிப்பினையும் கண்டுள்ளது. மலையக நூற்பதிப்பு வரலாற்றில் இந்த நூல் மாத்திரமே ஒன்பது பதிப்புகளைக் கண்ட நூல். இது ஒரு வரலாற்றுச் சாதனை. மகிழ்வு தரும் விடயமுங்கூட.
பலரும் கண்டுகொள்ளாத, மலையகத்தின் முக்கியமான நூல்களுள் ஒன்றான இந்த நூலை, கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளையினர் தேடிக் கண்டெடுத்து, திருத்திய செம்பதிப்பாக வெளியிட்டமை, மலையக நூற்பதிப்பு வரலாற்றில் முதன்மையான செயற்பாடாக அமைகிறது. இந்த நூலின் பதிப்பு வரலாற்றையும் இதன் மீதான விசாரணையையும் மேற்கொள்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கம்.
பதுளை வ. ஞானபண்டிதன்
‘கதிர்காமத் திருமுருகன்’ என்ற நூலின் ஆசிரியர் இலங்கையைச் சேர்ந்த, பதுளை வ.ஞானபண்டிதன் அவர்கள். அவர், பதுளை சமத்துவ சங்கத் தலைவர் பதவியிலிருந்து, சாதிய அடக்குமுறைக்கு எதிரான பிரசாரகராகவும் செயற்பாட்டாளராகவும் இயங்கியவர். சமூக சமத்துவப் போராளியாகத் திகழ்ந்தவர். சாதிய அடக்குமுறைக்கு எதிராக, அவர் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களும் நிகழ்த்திய பிரசங்கங்களும் அவருக்கு எதிர்ப்பினை ஏற்படுத்தின. எனினும், சமூக மற்றும் சமயப் பணிகள் குறித்துத் தான்கொண்ட இலட்சியத்தில் அவர் பின்வாங்கியதில்லை. இதனை, அவரது வாழ்வு குறித்த பதிவுகள் காட்டிநிற்கின்றன.

* ஓவியம் - AI
எம் மண்ணழகு.
என் தாய்மொழியழகு.
ஊரைக் கடந்தால்
உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் அழகு.
நாலடி எடுத்துவைத்து
மனம்மகிழ வீட்டுப்
படலையைத் திறந்தால்,
காவல் தெய்வமாய் நின்றுகொண்டு,
எங்கே போன ராசா?உள்ளே வா"
என்றொரு ஜீவன்
கூப்பிடுமே!
அதுதான் எங்களின் பூவரசு.
அதுவே என்றும் எனக்குப் பேரழகு.
சொந்த பந்தம் வந்துவிட்டால்,
பெரிசுகள் வேம்புக்குக்கீழே கூட,
சின்னஞ் சிறிசுகள் நாம்
கூடிச் சேர்ந்து விளையாடியது
பூவரசுடன்தான் !
பூவரசிலை பிடுங்கி
'பிப்பீ' ஊதினோம்.
பப்பாக் குழலுக்குள்
பூவரசம் இலை வைத்து
நாதஸ்வரம் வாசித்தோம்.
பூவரசம் பூப்பிடுங்கி
காதில் செருகி
சாமி கும்பிட்டு,
தகர டப்பாவும்,
வேப்பம் குச்சியும் கொண்டு
தவில் வாசித்து
பூவரசைச் சுத்தி வலம் வந்தோம்.
ஆடுகள் 'மே'என காட்டல் (கத்தல்) கொண்டாலும்,
மாடுகள் 'மூ' என மூசல் (கத்தல்) செய்யினும்,
இலங்கை வானொலியில்
இதமான மெட்டுக்களுடன்
பாட்டுக்கள் கேட்ட போதும்,
எங்கள் கூத்துக்கள் ஓய்ந்த பாடில்லை.
எங்கள் விளையாட்டுக்களைக்
கூடிநின்று பார்க்கும் காகங்களும்
கா கா வென்று கரைந்தும்,
வாலை அசைத்து அசைத்து
கீக் கீக்கென்று அணில்கள்
தாவித்தாவி பாய்வதுமாய், மட்டுமன்றி
வேடிக்கை பார்த்துக் கொண்டே
கெக்கட்டம் விட்டுச்
சிரித்த சொந்தங்களின்
சிரிப்பொலிகளும்
என்று..அப்பப்பா,
என்ன வாழ்க்கை,
எத்தனை சந்தோசம்?
Meeting ID: 811 9560 6664 | Passcode: 178162 | Join Zoom Meeting


எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு , மாவென்சி பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் நேத்ரா றொட்ரிகோ. இம்மொழி பெயர்ப்பு நூலின் வெளியீடு செப்டெம்பர் 6, 2025 அன்று ஸ்கார்பரோ நகரில் நடைபெறவுள்ளது.இது பற்றிய அறிவிப்பினை Tamil Arts Collective விடுத்துள்ளனர். அவ்வழைப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "The publication of the 'Prison of Dreams' quintet marks a historic moment in Canadian Tamil literature, as it is the first book length translations of a Tamil novelist published in Canada." அதாவது 'கனவுச்சிறை’ஐந்து பாகப் புதினத் தொகுப்பு கனடாவில் வெளிவருவது, கனடியத் தமிழ்ச் சமூக இலக்கிய வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். ஏனெனில், இது கனடாவில் வெளியிடப்பட்ட முதல் முழுநீளத் தமிழ்ப் புதின மொழிபெயர்ப்பு ஆகும்.' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவகாந்தனின் கனவுச்சிறை மகா நாவல். தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் முக்கிய படைப்பு. அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதுதான் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் முழுநீளக் கனடாத் தமிழ்ப் புதின மொழிபெயர்ப்பா? அப்படிக்கூறுவதற்கில்லை. எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'தமிழ் நாவல் ஏற்கனவே ஆங்கிலத்துக்கு எழுத்தாளர் லதா ராமகிருஷணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் ஆங்கில மின்னூற் பதிப்பு ஏறகனவே அமேசன் கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவல் முழுமையாக , ஐந்து பாகங்கள், ஆய்வாளரும், மொழிபெயர்ப்பாளருமான நேத்ரா றொட்ரிகோவால் ஆங்கிலமொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது.
'மாவென்சி' பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நாவலின் வெளியீடு செப்டெம்பர் 6, 2025 அன்று இலக்கம் 1265 Military Trail, Scarboroughஅமைந்துள்ள AC-223 at UTSC Academic Advising & Career Centre மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு வெளியீட்டுக் குழுவினர் அழைக்கின்றனர். நிகழ்வுக்கு வருகை தர விரும்பினால் அழைத்து உங்கள் இருக்கையைப் பதிவு செய்யும்படியும் நிகழ்வுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர். பதிவு இலவசம்.
இந்நிகழ்வு பின்வரும் அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறவுள்ளது. Mawenzi House, Ontario Arts Council, Tam Fam Lit Jam, The Tamil Literary Garden, Toronto Arts Council & Tamil Studies at the University of Toronto Scarborough.
நிகழ்வில் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலின் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு விற்பனை செய்யப்படும். நிகழ்வில் கிடைக்கும் நிதி முழுமையாக ஸ்கார்பரோ நகரில் அமையவுள்ள தமிழ் சமூக மையத்திற்கு (Tamil Community Centre) நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் இளமைக்காலத்தோற்றம். *டிஜிட்டல் ஓவியம் - இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah) -
முன்னுரை:
தாகூரின் செல்வாக்கில் இருந்து, மாற்றமுற்ற சி.வி.வேலுப்பிள்ளையின், நெடுங்கவிதையின் மூன்றாம் பகுதி இங்கே காணக்கிட்டுகின்றது. தமது காலத்தைய, அழுத்தமான மக்கள் குரலை வேலுப்பிள்ளை ஒலித்ததை போன்று, அவருக்கு பின்னால் எந்த ஒரு கவிஞனும் மலையக சமூகம் பொறுத்து ஒலித்தது கிடையாது. ஆழ்ந்த சமூக பற்றுடன் இவரது குரல் ஒலித்தமைக்கான விலையை அவர் தன் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கொடுத்திருக்க கூடும். இவரது அக்காலத்தைய எழுத்துக்கள், அக்காலத்தைய மலையக அரசியல் சார்ந்த சிந்தனைக்கு மாத்திரமல்ல, பொதுவில் உழைக்கும் மக்களின் சிந்தனைக்குள்ளும் வலை விரிக்க கூடியதே. இனி கவிதைக்குள் செல்லலாம்:
மயில் நிறத்து சேலை…
மயில் நிறத்து
சேலை…
அடர் வண்ண
பச்சை, மஞ்சள், சிவப்பாடை…
இமைகளையும் பெரிதாய் தீட்டி
நெற்றியில் அழுத்தமாய்
குங்குமம் பள பளக்க இட்டு…
கன்றி சிவந்த இதழ்களும்
அழகியதாய்…
தூய்மையில் விட்டிருப்பர்… ஆகா, எம்
அனைத்தையும்
இன்பத்திலும் ஆழ்த்தியிருப்பர்…

அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடத் தப்பட்ட தெரிவுகளில், பரிசுபெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கான பரிசுத் தொகைகளும் அவ்வப்போது வழங்கப்பட்டன.
மீண்டும், இந்த பரிசளிப்புத் திட்டம் இம்முறையும் இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்காக அறிவிக்கப்படுகிறது.
இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.
1. கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய நான்கு துறைகளில் வெளியான தமிழ் நூல்களே நூல்களே இந்தத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.

* ஓவியம் - AI
மலையன் பெற்றோர் யார்? என்பது குறித்த சர்ச்சை மீண்டும் பேசுபொருளாக மாறியது. அந்த ஆண்டின் பிறந்தநாள் விழாவின்போது தான் அது நடந்தது.
அது அவனுடைய ஆயிரத்தெண்ணூறாவது பிறந்தநாள். சிலர் அது அவனுடைய ஆயிரத்து நூறாவது பிறந்தநாள் என்றும் கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருந்தனர். கொண்டாட்டத்தில் மதி கலந்துகொண்ட போதுதான் மலையன் பற்றிய செய்தியை முதல்முறையாக கேட்ட நினைவு மெல்ல அவனுக்குள் எழ ஆரம்பித்தது.
ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அந்த ஆண்டு நல்ல மழை. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தபொழுது, ‘பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் ஆறு நிறைய தண்ணீர் சென்று கொண்டிருப்பதாக’ தந்தைக் கூறினார்.
வழக்கம்போல பள்ளிக்கூடத்தில் மூன்றாவது இருக்கையில் அவன் அமர்ந்து கொண்டிருப்பான். ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைய அனைத்து மாணவர்களும் எழுந்து இருகைகள் கூப்பி வணக்கம் தெரிவித்து அமர்ந்தனர்.
பொறுமையின் வடிவமாய்த் திகழும் அந்த ஆசிரியர் பெயர் பொன்முடி. அன்று வழக்கமாய் ஏற்றும் மாயவிளக்கை ஏற்றிக் கொண்டிருந்தார். அதை பல நாட்களாய்ச் சரியாகக் கவனிக்கத் தவறிய மதி மேசையின்மீது நிறுத்தப்பட்டு இருந்தான். விளக்கின் அவசியம் குறித்து அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. மாயவிளக்கு ஏற்றுவதில் கைதேர்ந்தவர் என்ற சிறப்பைப் பெற்றிருந்த அந்த ஆசிரியர் தன்னுடைய வித்தையைச் சில காரணங்களுக்காக ஒரு வாரகாலமாகத் செய்யாமல் இருந்தார். அது பற்றி அவனுக்கு எதுவும் அப்போது தெரிந்திருக்கவில்லை.

முன்னுரை
மக்களின் பேச்சு மொழியைப் புனைவிற்குள் கொண்டுவரும் போக்கு இன்று தொடர்ந்து பெருகி வருகிறது. தமிழின் பொது அல்லது இலக்கிய வழக்கிலிருந்து மக்களின் அன்றாட வழக்கில் வெளிப்படும் (பேச்சு) மொழியைக் கொண்டு அவர்களின் வாழ்வியலை மிக அணுக்கமாகக் கூறுவது படைப்பாளரின் தனித்த அடையாளங்களுள் ஒன்றாக அமைந்துவிடுகிறது. மண்ணின் மரபை அம்மண்ணின் மக்களின் வாழ்வியலை மிக அணுக்கமாக கூறுவதற்கு ஏற்ற ஒன்றாக அதைப் படைப்பாளர்கள் கையாளுகின்றனர். பேச்சு மொழியை அடிப்படையாகக் கொண்டு தான் சார்ந்துள்ள சமூகத்தினைப் புனைவிற்குள் கொண்டுவரும் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வரவேற்று மகிழ வேண்டிய ஒன்று. அது காலத்தின் தேவையும் கூட.
செந்தமிழ் / கொடுந்தமிழ் என்பன வெறுமனே தமிழ் மொழியின் இரு பிரவுகள்தானே ஒழிய. உயர்ந்தது x தாழ்ந்தது என்ற பொருளில் அவற்றை அணுகுவது தவறான ஒருபோக்காகவே அமையும். கொடுந்தமிழ் என்பதைப் பாமர மக்களின் பேச்சு மொழி என்று விலக்கிவிட முடியாது. காரணம், அம்மக்களின் வாழ்வியலை விளக்குவதற்கான சாத்தியக் கூறுகளை அவை அதிகமாக்குகின்றன. இந்தக் கோணத்தில் சிந்திக்க முற்படுவதன் விளைவாகத்தான் பலர் அத்தகைய மொழிநடையைப் பின்பற்றுகின்றனர். அதனால் அவர்களுக்கு அம்மக்களின் வாழ்வியல் விழுமியங்களை மிக நுட்பமாக ஆவணப்படுத்துவதும் சாத்தியமாகின்றன. சிலர் தங்கள் வட்டார வழக்குகளைத் தொடர்ந்து எழுவதன் மூலமாக முக்கியமான ஆளுமைகளாக வளர்ந்து வந்துள்ளதையும், அத்தகைய எழுத்தாளர்களைத் தமிழ் எழுத்து உலகம் கொண்டாடி மகிழ்வதையும் தற்போது பார்க்க முடிகிறது.
என்றாலும், பேச்சு மொழி பயன்பாட்டினைப் பற்றிய மொழியியல் பின்புலத்தில் ஆய்வுகள் முன்னெடுக்க பட்டனவா? என்றால், இல்லை. அதாவது, மக்களின் பேச்சு வழக்குகள் புனைவிற்குள் வந்துள்ள அளவிற்கு அவற்றைப் பற்றிய ஆய்வு முன்னெடுப்புகள் நிகழ்த்தப்படவில்லை என்பது மறுக்க இயலாத உண்மை. அத்தகைய ஆய்வுகள் நிகழ்த்த வேண்டிய தேவை அவசியமாகிறது.

[இலங்கையின் பிரபல முற்போக்கு எழுத்தாளார் எஸ்.அகஸ்தியர் அவர்களின் பிறந்த தினம் ஆகஸ்ட் 29 . அதனையொட்டி அவரது இக்கட்டுரை வெளியாகின்றது. இதனைப் 'பதிவுக'ளுக்கு அனுப்பி வைத்தவர் அவரது மகள் எழுத்தாள்ர் நவஜோதி யோகரட்னம். . ‘இலக்கியத்தில் ஒழுக்க வாதம் அல்லது நடுநிலைமை வாதம்’ என்னும் தலைப்பில் கண்டியில் 29.6.1969 இல் இடம்பெற்ற இலக்கிய அரங்கில் அகஸ்தியர் ஆற்றிய உரையின் சுருக்கம். இந்த இலக்கிய அரங்கில் அரு.சிவானந்தன், இல.இராசு, இரா.அ.இராமன், சி.பன்னீர்ச்செல்வம், அபதுல் ரவுஹீம், அ.கணேஷ், பெரியசாமி, உமாபதி, சி.கந்தையா, பெரி. சுவாமிநாதன், செல்வி.சி;. இந்திராணி, செல்வி சித்தி.ஹமீதா, வெ. இராசம்மா ஆகியோரும், இன்னும்பல இலக்கிய முற்போக்கு இளங்கலை எழுத்தாளர்களும் பங்கு பற்றினர். ]
ஒழுக்கம் என்பது கட்டுப்பாடு. அது மனித வர்க்கத்திற்கு மட்டுமல்ல இலக்கியங்களுக்கும் மிக அவசியமானதாகும். இந்த ஒழுக்கம் என்ற கோட்பாட்டை எப்படி நிர்ணயிக்க முடிகின்றது என்று நாம் ஆராய்ந்து பார்க்ககும்போது, இலக்கியத்தில் ஒழுக்கவாதம் அவசியம்தானா என்ற கேள்வி நம்முன்னே எழுகின்றது. அதுவுமல்லாமல், இலக்கியத்தில் ஒழுக்கவாதம் அல்லது நடுநிலைமை வாதம் பேசுபவர்கள் யார், அவர்கள் யாருக்காக இலக்கியம் படைக்கிகிறார்கள், அவர்கள் இலக்கியத்தில் ஒழுக்கவாதம்; பேசுவதன் மூலம், எந்த சமூக அமைப்பைக் கட்டிக் காக்க விரும்புகிறார்கள் என்ற இன்னோரன்ன கேள்விகளுக்கும் நாம் விடை காணவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
சரி, இலக்கியத்தில் ஒழுக்கவாதம் அவசியம்தானா? இந்தக் கேள்விக்கு ஒரு விடை காண்பதற்கு முன், நாம் இந்தச் சமூக அமைப்பில் ஒரு ஆழமான கண்ணோட்டத்தைச் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. ஏனெனில், இன்றைய இந்தச் சமூக அமைப்பு இரண்டு முரண்பட்ட வர்க்கங்களாக அமைந்திருக்கின்றன. இது உழைப்பாளிக்குப் பாதகமாகவும், உடமைவாதிக்குச் சாதகமாகவும் அமைக்கப் பட்டிருக்கின்றது. இத்தகையச் சமூக அமைப்பில் வர்க்க பேதங்கள் இருப்பதால்தான் பொருளாதாரப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்தப் பொருளாதார ஏற்றுத் தாழ்வுகளே கொலை, களவு, கற்பழிப்பு, கீழ்த்தர குருர உணர்ச்சி, வறுமை ஆகியவைகள் சமுதாயத்தில் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்திருக்கின்றன.

2022இல், மகுடம் வெளியீடாக வெளிவந்திருந்த ‘ஒன்றே வேறே’ என்ற என் சிறுகதைத் தொகுதியின் பிரதிகளை எனக்கு அனுப்பும்போது, கிழக்கு மாகாணச் சாகித்தியப் பரிசை 2019இல் தனதாக்கிக்கொண்டிருந்த ‘பரசுராம பூமியின்’ பிரதியொன்றையும் அனுப்பிவைப்பீர்களா என மைக்கல் கொலின் அவர்களைக் கேட்டிருந்தேன். தொன்மங்களை மீளாய்வுக்குட்படுத்தும் படைப்பாக அது இருந்ததால் அதனை வாசிக்கவேண்டுமென்ற ஆவல் வந்திருந்தது. ஆனால், அந்தத் தொகுப்புப் பற்றிய என் வாசிப்புப் பகிர்வை எழுதவேண்டுமென்ற எண்ணம் காலஓட்டத்தில் கரைந்துபோயிருந்தது. தற்போது, மூன்று வருடங்களின்பின்பு அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வந்திருக்கும் நிலையில்தான் அந்த எண்ணத்தைச் செயலாக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
பாரதம், இராமயணம், விவிலியம் ஆகிய நூல்களின் சில கதாபாத்திரங்களை அல்லது சம்பவங்களை, கேள்விக்குள்ளாக்கும் கவிஞர், எழுத்தாளர், வெளியீட்டாளர் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருக்கும் மைக்கல் கொலின் அவர்களின் ஒன்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ‘வரம்’, ‘ஓர்மம்’, ‘ஞானம்’ ஆகிய மூன்று கதைகளும் என்னைக் கவர்ந்திருந்தன. மைக்கல் கொலின் அவர்களின் கவித்துவத்தைப் புலப்படுத்தும் அற்புதமான மொழியில், ‘வரம்’ என்ற கதை அகலிகைக்குப் புதுப்பரிமாணம் கொடுத்துள்ளது.
அகலிகை பற்றிப் பல கதைகளை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்திரனால் அவள் வன்புணர்வுக்குட்பட்டாள் எனக் கூறும் ‘அகலிகையும் அகல்யாவும்’ என்ற குறுங்காப்பியம், வன்புணர்வுக்குட்பட்டதால்தான் கெளதமர் அவளுக்குச் சாபவிமோசனம் கொடுத்தார் என்கிறது. ஆனால், ‘அகல்யா’ என்ற குறுங்காப்பியமோ, தன்னுடன் புணர்ந்தவன் யாரென்பது அகலிகைக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும், இருப்பினும், அதைப் பற்றி உலகம் என்ன பேசுமோ என்று கெளதமர் கவலைப்பட்டார் என்றும் கூறுகிறது. இந்த இரண்டு கருக்களினதும் அடிப்படையில் ‘சாபவிமோசனம்’, ‘அகலிகை’ என இரண்டு கதைகளை புதுமைப்பித்தன் அவர்கள் எழுதியிருக்கிறார். இந்திரன் தன் தவறை உணர்கிறான், மனத்தூய்மைதான் கற்பென அகலிகைக்குக் கெளதமர் ஆறுதல்சொல்கிறார் என்றவகையில், ‘அகலிகை’ என்ற கதையை அவர் 1934இல் எழுதியிருந்தது பாராட்டுதலுக்குரியது. சாபவிமோசனம் கிடைத்தும், பாவவிமோசனம் கிடைக்காதா என ஏங்குமொரு பரிதாபநிலையை 1943இல் எழுதிய ‘சாபவிமோசனம்,’ என்ற கதையில் அவர் காட்டியிருக்கிறார். அத்துடன், யாரைப் பார்த்தாலும் அகலிகைக்குச் சந்தேகம் வருகிறது என்றும், கெளதமரின் வார்த்தைகளுக்கும் இரட்டை அர்த்தம் இருக்குமாவென யோசிக்கிறாள் என்றும், கெளதமராலும் அவளுடன் முன்போலப் பழகமுடியவில்லை என்றும் தொடரும் அந்தக் கதை முடிவில், சீதையின் தீக்குளிப்புப் பற்றி அறிந்தவள், மீளவும் கல் ஆகிறாள் என நிறைவுகிறது.

இந்தப் பதிவு இளைய தலைமுறையினருக்கானது. சமுதாயப் பிரக்ஞை மிக்க, தொலை நோக்குச் சிந்தனை மிக்க இளைய தலைமுறையினருக்கானது.
தமிழ் இளைஞர்களே! நீங்கள் செயற்பட வேண்டிய தருணமிது. தமிழ்த் தேசியத்தைப் பற்றிக் கவலைப்பட அரசியல்வாதிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் அவர்கள் வழியில் செல்லட்டும். ஆனால் தமிழர்களின் வர்க்க விடுதலை, சமூக விடுதலை பற்றிக் கவலைப்படுவதற்கு , செயற்படுவதற்கு யாருளர்? தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளது. வடக்கில் அது போன்ற அமைப்பொன்றும் இல்லை. அத்தகைய மக்கள் விடுதலை அமைப்பொன்றின் தேவை உள்ள காலகட்டம் இது. அதன் பெயர் மக்கள் விடுதலை அணி, மக்கள் விடுதலை அமைப்பு என்று கூட இருக்கலாம். இளைஞர்களே1 சிந்தியுங்கள்! இப்பதிவு உங்களில் யாருக்காவது ஒரு பொறியினைத் தட்டி விடுமானால் அதுவே இப்பதிவின் முக்கிய நோக்கம்.
நீங்கள் ஒவ்வொருவரும் வாழும் , உங்கள் ஊரில் உள்ள மக்களைப் பாருங்கள். சமூகப் பிரிவுகள் , வர்க்கப்பிரிவுகளாக அவர்கள் பிரிந்து கிடக்கினறார்கள். அவர்களின் வர்க்க விடுதலை பற்றி, சமூக விடுதலை பற்றிச் சிந்திப்பவர்கள் யார் இருக்கின்றார்கள்? அவர்களைப் பற்றித் தொலை நோக்குடன் சிந்தியுங்கள். அவர்களில் ஒருவர்தான் நீங்களும். சமூகப்பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கும் நீங்கள் அனைவரும் ஒரு வர்க்கமாக ஒன்றிணைந்துதான் இருக்கின்றீர்கள். வர்க்கமாக ஒன்றிணைவதை உங்களுக்கிடையில் நிலவும் சமூகப் பிரிவுகள் தடுத்து நிற்கின்றன. அதைப் புரிந்து கொள்ளுங்கள். செயற்படுங்கள்.

நடிகர் மம்முட்டியின் சிறந்த படங்களிலொன்று 'மதில்கள்'' . ஃபோர்ப்ஸ் சஞ்சிகை தேர்தெடுத்த இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிப்புக்கான் 25 தேர்வுகளில் ஒன்றாக இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் மம்முட்டியின் நடிப்பும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைக்கதை, இயக்கம் & தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் 1990ற்கான இந்திய மத்திய அரசின் நான்கு விருதுகளை இயக்கம், நடிப்பு , ஒலிப்பதிவு & சிறந்த பிராந்தியத் திரைப்படம் ஆகியவற்றுக்காகப் பெற்றது. சிறந்த நடிப்புக்காக மம்முட்டிக்கு இப்படத்திற்காகவும், 'ஒரு வடக்கன் வீரகதா'வுக்காகவும் கிடைத்தது. ஒரே நேரத்தில் இவ்விதம் இரு படங்களுக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்ற ஒரே நடிகர் மம்முட்டியாக மட்டுமேயிருப்பார்.
இத்திரைப்படத்தின் கதையை எழுதியவர் மலையாள இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான வைக்கம் முகம்மது பஷீர். அது ஒரு குறுநாவல். அவரது சொந்தச் சிறை அனுபவத்தின் அடிப்படையில் உருவான சுயசரிதை நாவலாக அந்நாவல் அமைந்துள்ளதாகக் குறிப்பிடுவர்.
கதை இதுதான்: தேசத்துரோகக் குற்றத்துக்காகத் தண்டனை பெற்ற அரசியல் கைதி பஷீர். அங்கிருக்கும் பெண்களின் சிறையில் கொலைக்குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்ற பெண் கைதி நாராயணி. ஆண்களின் சிறைப்பகுதியையும், பெண்களின் சிறைப்பகுதியையும் பிரிக்கின்றது நெடுமதில்.
பஷீருக்கும், நாராயணிக்குமிடையில் உரையாடல்கள் மூலம் காதல் மலர்கின்றது. படம் முழுவதும் நாராயணியைக் காட்டவே மாட்டார்கள். அவளது குரல் மட்டுமே கதையை நகர்த்திச் செல்லும். அக்குரலுக்குச் சொந்தக்காரி மலையாள உலகின் முக்கிய நடிகைகளில் ஒருவரும், அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைப்படங்களில் அதிகம் நடித்திருக்கும் நடிகை K. P. A. C. லலிதா. 2022இல் மறைந்து விட்டார். அவரது குரல், அதில் தொனிக்கும் காதல், தாபம் எல்லாம் கேட்பவர் உள்ளங்களைக் கவர்வதுடன் உலுப்பியும் விடக்கூடியவை.