கனடாவில் தொல்காப்பிய விழா - 2025! - குரு அரவிந்தன் -
சென்ற ஞாயிற்றுக் கிழமை கனடா, ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக்கலாமன்ற அரங்கத்தில் கனடா தொல்காப்பிய மன்றத்தின் 10வது தொல்காப்பிய ஆண்டு விழா அதன் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் வெங்கட் ரமணன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
முதலில் மங்கள விளக்கேற்றி, கனடா தேசியப்பண், தமிழ்தாய் வாழ்த்து, மன்றப்பாடல் ஆகியன இளையோரால் இசைக்கப்பட்டு, நாட்டிற்கு நன்றி, அகவணக்கம் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன. தொடர்ந்து மன்றத்தின் செயலாளர் வல்லிபுரம் சுகந்தனின் வரவேற்புரை இடம் பெற்றது. அதன்பின் மாணவர் பாசறை பற்றி முனைவர் இல. சுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.
அடுத்து மாணவர் பாசறையின் ‘தொல்காப்பியர் கால வாழ்வியல்’ என்ற கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. திருமதி சுவந்திசங்கர், செல்வி காவியா சிவசங்கரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியைப் பொறுப்பேற்று நடத்தினர். இதில் பங்குபற்றிய சுமார் 22 இளையோர் மிகச் சிறப்பாக ஒவ்வொரு நிலத்திணை பற்றியும் தெளிவாகத் தமிழில் விளக்கம் தந்தார்கள். அவர்களுக்கு எங்கள் பாராட்டுகள்.
தொடர்ந்து திருமதி வனிதா குகேந்திரன் அவர்களின் கலைக்கோயில் மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி யூனிதா நாதன் அவர்களின் பாராட்டுரை இடம் பெற்றது. தொடர்ந்து மன்றத்தின் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமை உரை இடம் பெற்றது. தொல்காப்பியம் சார்ந்த நிகழ்வுகளை நாம் ஏன் முன்னெடுக்க வேண்டும், அடுத்த தலைமுறையினரிடம் ஏன் கொண்டு செல்ல வேண்டும் என்பது போன்ற விளக்கத்தைச் சபையோருக்கு எடுத்துச் சொன்னார். தொடர்ந்து ஜனனி குமார் அவர்களின் சிலம்பொலி நர்த்தனாலயா மாணவிகளின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது.