இந்தியப் பயணத்தொடர் (3) : காஷ்மீர் பூந்தோட்டங்கள்! - நடேசன் -
தாஜ்மஹாலைக் கட்டிய மன்னர் ஷாஜகானின் தந்தையான முகலாய மன்னர் ஜஹாங்கீர் (Emperor Jahangir) இறுதி காலத்தில் மரணப் படுக்கையிலிருந்தபோது, அவரது உதவியாளர் ஒருவர்,“இந்த இறுதிக் காலத்தில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள், மகாராஜா?” என்று கேட்டபோது, அவர்,“காஷ்மீர் மட்டுமே; மற்றவை பிரயோஜனமில்லை,” என்றார்.
இதிலிருந்து, தற்போதைய அரசுகளான பாகிஸ்தான் மற்றும் இந்தியா — காஷ்மீர் நிலம் தொடர்பான செயல்களையும், அவர்கள் மனநிலையையும் — நாம் ஊகிக்க முடியும்.
அவுஸ்திரேலியாவிலிருந்து சென்ற எங்கள் ஆறு பேருக்குக் “காஷ்மீரில் பார்ப்பதற்கு என்ன உள்ளது?” என்ற கேள்வி வந்தபோது, அதற்கு என்ன பதில் சொல்லலாம்?
காஷ்மீர் — நீர்வளம், நிலவளம் கொண்ட பிரதேசம். வெண்பனியால் கம்பளித் தொப்பி அணிந்த மலைச் சிகரங்கள், நீரோடைகள், விரல்களைப் போல பரந்து விரியும் மரகத பள்ளத்தாக்குகள், கங்கைபோல இல்லாமல் இந்தியாவின் அழுக்கைச் சுமக்காத, பனி கரைந்து ஓடும் சுத்தமான ஆறுகள் என இயற்கையின் கொடைகள் நிறைந்தது. இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள அரண்மனைகள், கோட்டைகள், கோவில்கள் இங்கு இல்லை.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு காலத்தில் இந்துக்கள், பின்னர் புத்தமதத்தினரைப் பின்பற்றியவர்கள், தற்போது இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுகிறார்கள். பௌத்தம் காஷ்மீர் வழியாக, மத்திய ஆசியா, கிழக்காசியா வரை பரவியது. இது சில்க் ரோடு எனப்படும் ஆசிய–ஐரோப்பிய வாணிகப்பாதையின் ஒரு கிளையாக இருந்தது.