அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்! - வ.ந.கி -
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். மங்கலம் பொங்கட்டும். எங்கும் தங்கட்டும். பொங்கல் நன்னாளுக்கும் என் எழுத்துலக வாழ்க்கைக்குமோரு தொடர்பு உண்டு. ஒரு வகையில் என் எழுத்தார்வத்துக்குத் தீனி போட்டு வளர்த்தெடுத்தது பொங்கல் என்று கூறலாம்.
நான் ஏழாம் வகுப்பில் வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தபோது என் முதலாவது கவிதை, எழுத்து அச்சுருவில் வெளியானது. 1970 பொங்கலையொட்டி வெளியான சுதந்திரன் பத்திரிகையில் வெளியான எனது 'பொங்கலோ பொங்கல்' என்னும் கவிதைதான் அது. அதன் பின்னர் வெற்றிமணி சிறுவர் சஞ்சிகையில் எனது பொங்கல் பற்றிய கட்டுரையும் , கவிதையும் வெளியாகின. ஈழநாடு மாணவர் மலரிலும் பொங்கல் பற்றிய எனது கட்டுரையொன்று வெளியானது. இவையெல்லாம் நெடுங்கட்டுரைகள் அல்ல. சிறுவனான என் எழுத்துலக ஆர்வத்துக்குத் தீனி போட்ட குறுங்கட்டுரைகள். ஆனால் எவை என் எழுத்துலக வாழ்க்கையின் பலமான அத்திவாரங்கள். அதனால்தான் கூறினேன் பொங்கல் எழுத்தார்வத்துக்குத் தீனி போட்ட திருநாளென்று.