திருக்குறள் ஆய்வில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களின் பங்களிப்பு! - முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை -
- தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் -
முன்னுரைதமிழில் முத்திரை பதித்த மூத்த தமிழறிஞர். பள்ளி சென்று கல்வி கற்காமலே கற்றவரை வியப்பிலாழ்த்தியவர். முந்தைய தலைமுறையினருக்கு செந்தமிழ்ப் பற்றினை ஊட்டியவர். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள் திருச்சியைச் சார்ந்தவர். இவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்ப் போராளி ஆவார். தமிழுக்கு இவர்ஆற்றிய பணிகள் அளப்பரியன. 23 தமிழ் நூல்களை தமிழிலக்கிய உலகுக்கு வழங்கியுள்ளார்.
கி.ஆ.பெ அவர்களின் நூல்கள்
கி.ஆ.பெ அவர்கள் 1899ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர். இவரது பெற்றோர் பெரியண்ணபிள்ளை, சுப்புலட்சுமி ஆவர். கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள் அறிவுக் கதைகள், அறிவுக்கு உணவு, ஆறு செல்வங்கள், எண்ணக்குவியல், எது வியாபாரம்?எவர் வியாபாரி?, எனது நண்பர்கள், ஐந்து செல்வங்கள், தமிழ் மருந்துகள், தமிழ்ச்செல்வம், தமிழின் சிறப்பு, திருக்குறள் கட்டுரைகள், திருக்குறள் புதைபொருள்-பாகம்1, திருக்குறள் புதைபொருள்-பாகம் 2, திருக்குறளில் செயல்திறன், நபிகள் நாயகம், நல்வாழ்வுக்கு வழி, நான்மணிகள், மணமக்களுக்கு, மாணவர்களுக்கு, வள்ளலாரும் அருட்பாவும், வள்ளுவரும் குறளும், வள்ளுவர் உள்ளம், வானொலியிலே ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.